Published:Updated:

அதனால்தான் அவர் அண்ணா!

C.N.Annadurai
பிரீமியம் ஸ்டோரி
C.N.Annadurai

கனிவான குரலாலும், கண்ணியமான தமிழாலும் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அண்ணா!

அதனால்தான் அவர் அண்ணா!

கனிவான குரலாலும், கண்ணியமான தமிழாலும் தமிழகத்தையே கட்டிப்போட்டவர் அண்ணா!

Published:Updated:
C.N.Annadurai
பிரீமியம் ஸ்டோரி
C.N.Annadurai

ரசியல் திருப்பு முனைக்குப் பேர் போன ஊர் என்பதால் அது திருப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

தனக்கு முன் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து, ‘என்ன செஞ்சிட்டு இருக்கீங்க தம்பி’ என்று கேட்டார் தந்தை பெரியார்.

‘கல்லூரியில் படிக்கிறேன். பரீட்சை எழுதி இருக்கிறேன்’ என்றான் அந்த இளைஞன்.

‘படிப்பு முடிந்ததும் உத்தியோகம் பார்க்கப் போறீங்களா’ என்ற கேள்வியைப் போட்ட பெரியாரிடம், ‘உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை’ என்றான் அவன்.

C.N.Annadurai
C.N.Annadurai

பெரியார் விடவில்லை. ‘அப்படின்னா என்ன செய்யப் போறதா உத்தேசம்’ என்று அடுத்த கேள்வியைப் போட்டார். ‘பொது வாழ்வில் ஈடுபடப் போறேன் ஐயா’ என்றான் அந்த இளைஞன். ‘அப்படியா! என்னோட வந்துடுறீங்களா’ என்று நேரடியாகக் கேட்டார். தலையாட்டினான் அந்த இளைஞன்.

‘‘யாரோ ஈரோட்டில் இருந்து வந்த ஒரு ஆள், என் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்’’ என்று அந்த இளைஞனின் பாட்டி காஞ்சிபுரம் வரதராஜப்​பெருமாள் கோயில் வாசலில் உட்கார்ந்து புலம்பிக்கொண்டு இருந்தார். சில நாட்களில் அதே காஞ்சிபுரத்துக்கு பெரியார் பேசப் போனார். தன் வீட்டுப் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு போய்விட்டதாகச் சொல்லப்பட்ட மனிதர் தன்னுடைய ஊருக்குப் பேச வந்திருக்கிறார் என்பதை அறிந்து, அந்தப் பாட்டி, கூட்டத்துக்குப் போனார். இரண்டு மணிநேரம் பேசினார் பெரியார். வீட்டுக்கு வந்த அந்தப் பாட்டி, ‘‘என் பிள்ளை சரியான ஆளிடம்தான் சேர்ந்திருக்கிறான்’’ என்று சொன்னார்.

அந்தப் பாட்டியின் பேரன்தான் தமிழ்நாட்டு அண்ணனான பேரறிஞர் அண்ணா!

மேதை என்றோ, ராஜதந்திரி என்றோ, இப்படி எழுதுவார் என்றோ, அப்படிப் பேசுவார் என்றோ பார்த்தால் அடையாளம் காணமுடியாத அப்பாவி. எந்தத் திருப்பங்களுக்கும் அடித்தளம் போடுபவராக அவரது திருமுகத்தைப் பார்த்தால் தெரியாது.

சீவாத தலை, சவரம் செய்யப்படாத முகம், வெற்றிலைக்கரை படிந்த பற்கள், வெளுக்காத சட்டை, காவி படிந்த வேட்டி, உற்சாகத்துக்குத் தயார் ஆகாத மனம், திட்ட​மிடுவதில் தயக்கம், திட்டமிட்டதைச் செயல்படுத்துவதில் முடக்கம்... என எழுச்சிக்கு எதிர்ப்பதம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை. அவரே தனது சோம்பல் உணர்வை எழுதியும் இருக்கிறார். உருவத்தைப் பார்த்து எவரும், எவரையும் முடிவுக்கு வரக்கூடாது என்பதற்கு உதாரணமே அண்ணாதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘நான் நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவன். நெசவாளியாகப் பிறந்தவர் எவரும் பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. எத்தனை தடவை நூல் அறுந்தாலும் கோபம் இல்லாமல் பொறுமையாக இணைக்க வேண்டும்” என்று அண்ணாவே அதற்குக் காரணம் சொன்னார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் அண்ணாவின் வீடு. இவர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போகமாட்டார். கொஞ்சம் தள்ளி இருக்கும் புண்ணியக்கோட்டீஸ்வரர் கோயிலுக்குப் போவார். ஏன் என்று கேட்டால், ‘‘வரதராஜப் பெருமாள் கோயிலில் எப்போதும் கூட்டமாக இருக்கிறது” என்பார்.

கூட்டமாக இருக்கும் கோயிலுக்குப் போகவே கூச்சப்பட்ட அண்ணாவின் பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக தமிழகம் திரண்டது. கனிவான குரலும், கண்ணியமான தமிழும்தான் அதற்குக் காரணம்.

C.N.Annadurai
C.N.Annadurai

பெரியாரைச் சந்திப்பதற்கு முன்பே அண்ணா அரசியல்வாதி ஆகிவிட்டார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா படித்த காலத்தில் பேராசிரியராக இருந்தவர் வரதராசன்.

சென்னை சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டே பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் அவர். அந்த இரண்டு கல்லூரிகளிலும் திராவிட இயக்கத்தை விதைத்தவர் அவர். அண்ணாவின் பேச்சாற்றல் வரதராசனை ஈர்த்தது. அவர்தான் ‘சண்டே அப்சர்வர்’ ஆசிரியர் பி.பாலசுப்பிரமணியனிடம் அறிமுகம் செய்து வைத்தார். தான் பேசப்போகும் இடங்களுக்கு எல்லாம் அண்ணாவை அழைத்துச் சென்றார் பி.பாலசுப்பிரமணியம். அண்ணா, ‘என் அண்ணன்’ என்று சொல்வது இவரைத்தான்.

1935. மத்திய சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. சென்னை தொகுதிக்கு நீதிக் கட்சியின் வேட்பாளராக ஆற்காடு ஏ.ராமசாமி முதலியாரும் காங்கிரஸ் வேட்பாளராக சத்தியமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். நீதிக் கட்சி வேட்பாளருக்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் பேராசிரியர் வரதராசன். அவர் அண்ணாதுரையையும் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்கிறார். சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு பக்கம் ஆற்காடு ராமசாமியும், இன்னொரு பக்கம் சத்தியமூர்த்தியும் பிரசாரம் செய்தபடி எதிரெதிராக வருகிறார்கள். நேருக்கு நேராக ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள்.

‘நிலவரம் எப்படி இருக்கிறது’ என்று சிரித்த​படியே சத்தியமூர்த்தி கேட்கிறார். ‘உங்களுக்குத் தான் சாதகமாக இருக்கிறது’ என்கிறார் ஆற்காடு ராமசாமி. ‘நான் பார்த்தவரை உங்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது’ என்கிறார் சத்தியமூர்த்தி. ‘நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்கிறார் ஆற்காட்டார். ‘உங்களுக்கு வாழ்த்துக்கள்’ என்கிறார் சத்தியமூர்த்தி. இந்தக் காட்சியை பார்த்துக்கொண்டே இருக்கிறார் அண்ணாதுரை.அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் நேரில் பார்க்கும்போது வெட்டிக்கொண்டு போகாமல் ஒட்டி உறவாடிய நயத்தகு நாகரிகத்தை ஆற்காடு ஏ.ராமசாமி - சத்தியமூர்த்தி ஆகிய இருவரின் செயலால் உணர்ந்த அண்ணா, அரசியலில் கொள்கைக் கோட்பாடுகளுக்கு இணையானது கண்ணியம் என்ற முடிவுக்கு வந்தார். அன்று முதல் தன் வாழ்வின் இறுதிவரை கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதில் திண்ணியராக அண்ணா இருந்தார்.

C.N.Annadurai
C.N.Annadurai

14 ஆண்டு கால நட்புக்கு வேட்டு வைக்கும் நிகழ்வுகள் நடந்தபோது பெரியாரைவிட்டு விலகி, தனிக்கட்சி கண்ட அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவியை காலியாக வைத்திருந்தார். 18 ஆண்டுகள் பெரியாரும் - அண்ணாவும் தமிழ்நாட்டு மேடைகளில் எதிரும் புதிருமாக வலம் வந்தார்கள். அண்ணாவைக் கோபப்படுத்தும் விமர்சனங்களை பெரியாரே சொன்னபோதும் அண்ணா பதில் பேசவில்லை.

‘நம்மை வளர்த்தவர் தூரத்தில் இருந்து வழிநடத்துகிறார்’ என்றார். 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகக் கடுமையான பிரசாரம் செய்தவர் பெரியார். ஆனால், ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. ‘‘பார்த்தாயா பெருசு! உன்னை வென்றுவிட்டேன்” என்று முறுக்கிக் கொள்ளவில்லை அண்ணா. பெரியார் எங்கே இருக்கிறார் என்று கேட்டவர், தனது தம்பிமார்களை அழைத்துக்கொண்டு திருச்சிக்குப் போய், ‘ஐயா இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை’ என்றார் அண்ணா. சென்டிமென்ட் இல்லாத பெரியார், ‘‘அண்ணா வந்து பார்த்தபோது கூச்சத்தால் குறுகிப் போனேன்” என்று எழுதினார். அதுதான் அண்ணா.1967 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று வருவதாக வானொலியில் செய்திகள் வந்து கொண்டு இருந்தன. விருதுநகர் தொகுதியில் காமராஜர் தோற்றார் என்ற தகவல் கிடைத்ததும் வருந்தினார்.

‘‘அவரெல்லாம் ஜெயிச்சிருக்கணும்யா! நாட்டுக்காகத் தியாகம் செய்தவருய்யா” என்றார். வீழ்ந்தான் எதிரி என்று குளோப்ஜாம் சாப்பிடவில்லை. முதல்வர் ஆனதும் காமராஜர், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் வீட்டுக்குப் போய், ‘எங்களை வழிநடத்துங்கள்’ என்றார். அதுதான் அண்ணா!

தேர்தல் வெற்றிக்கு அண்ணாதான் காரணம், அண்ணாதான் காரணம் என்று அனைவரும் சொன்னார்கள் வெற்றி விழாவில். ‘‘நான் காங்கிரஸை பதவியில் இருந்து விரட்டி​விட்டேன் என்று சொல்ல மாட்டேன். மக்கள் விரட்டிவிட்டார்கள்” என்று மக்களுக்கு மகுடம் சூட்டினார். அதுதான் அண்ணா.

C.N.Annadurai
C.N.Annadurai

முதல் நாள் சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணா பேசிக்கொண்டு இருக்கிறார். வெளியே பயங்கர சத்தம். அண்ணா தனது பேச்சை நிறுத்தும் அளவுக்கு குரல் கேட்கிறது. பேச்சை நிறுத்திவிட்டு என்ன என்று கேட்கிறார். ‘தென் மாவட்டத்தில் இருந்து வந்திருக்கும் சிலர், உள்ளே வந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். போக மறுக்கிறார்கள்’ என்றார்கள். ‘ஓ! அவ்வளவு தூரத்தில் இருந்து வந்துவிட்டார்களா’ என்றபடி பேச்சை நிறுத்திய அண்ணா, பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்ற பிறகு சபையைவிட்டு வெளியேறினார். குரல் கொடுத்துக்கொண்டு இருந்தவர்களை நோக்கிப் போனார். அவர்கள் கையில் இருந்த மாலையைப் பெற்றுக்கொண்டு சில நிமிடங்கள் பேசினார். மீண்டும் உள்ளே வந்து பேச்சை விட்ட இடத்தில் தொடங்கினார். தொண்டன் தெருவில் குரல் கொடுக்காவிட்டால் தான் சபைக்குள் வந்து பேசியிருக்க முடியாது என்று நினைத்தார். அதுதான் அண்ணா!

எங்கே எந்தப் பிரச்னை என்றாலும் கோட்டையில் பதுங்கிக் கிடக்காமல், வீட்டில் முடங்கிக் கிடக்காமல் பிரச்னைக்குரிய இடத்துக்குப் போனார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் விவேகானந்தா கல்லூரி மாணவர்களுக்கும் மோதல். இந்தச் செய்தி வெளியிட்ட ஒரு நாளிதழைக் கண்டித்து அதன் அலுவலகத்துக்கு, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தப் போய்விட்டார்கள். உடனே முதல்வர் அண்ணா அந்த இடத்துக்குப் போய், ‘ஜனநாயக நாட்டில் பத்திரிகைகளுக்கு சில உரிமைகள் இருக்கின்றன. அதனை நாம் மதிக்க வேண்டும்’ என்று சொல்லி சமாதானப்படுத்தினார்.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கும் ஆதிகாலத்தில் இருந்தே ஆகாது. அண்ணா காலத்திலும் அப்படித்தான். ஒரு மருத்துவரையே கொலை செய்யும் அளவுக்கு மோதல் வளர்ந்த போது, இரண்டு தரப்பையும் அழைத்து நேரில் சமாதானம் செய்தார். கோவையில் சில மாணவர்கள் தனித் தமிழ்நாடு கேட்டுப் போராடியபோது, அவர்களை சட்ட அமைச்சர் மாதவன் வீட்டுக்கு வரவழைத்து சமாதானம் செய்தார். அதுதான் அண்ணா!

1969-ல் புற்றுநோய் பாதிப்பால் அண்ணா மரணம் அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பாதிப்பு அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்துவிட்டது. தனக்குத் தெரிய வந்ததுமே அதனை தனது கட்சித் தொண்டனுக்கு மறைக்க விரும்பவில்லை அண்ணா. ‘உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்’ என்ற பீடிகையுடன், ‘இடது தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப்போய் என்னால் கையைத் தூக்க முடியவில்லை’’ என்று 1959-ல் எழுதி விட்டார். நோய் முற்றிய பிறகும் வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. ‘ஓய்வெடுங்கள்’ என்று ராஜாஜியும் பக்தவத்சலமும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

C.N.Annadurai
C.N.Annadurai

சட்டமன்றத்துக்குத் தொடர்ந்து வந்தார். எல்லா விவாதங்களிலும் பங்கெடுத்தார். நீண்ட நேரம் பேச முடியாவிட்டாலும் சிறிது நேரமாவது பேசினார். என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைக்கப்போனார். ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியதற்கான பாராட்டுக் கூட்டத்தில் அண்ணா கலந்து கொள்ள உடல்நிலை இடம் கொடுக்குமா என்ற சூழ்நிலையில், ‘‘அதற்குப் பயன்படாத இந்த உடம்பும் உயிரும் எனக்கு எதற்கு?” என்றபடி மேடைக்கு வந்தார். ஒரு பிரச்னை என்றால், மக்கள் மன்றத்தில்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதுதான் அண்ணா.

முதலமைச்சராக இருந்து இறந்தபோது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5 ஆயிரம் ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5 ரூபாயும்தான் அண்ணாவின் வங்கிக் கணக்கில் இருந்தது. அண்ணா வைத்துவிட்டுப் போனது காசு அல்ல. கண்ணியம். பணம் அல்ல. பண்பாடு. மாளிகைகள் அல்ல. மக்களை மதிக்கும் குணம். அண்ணா வலியுறுத்திய எந்தக் குணம் அவர் பெயரால் கட்சி நடத்துபவர்கள் ஆட்சியில் இருக்கிறது? மழையில் நாடு மிதக்கும்போதே பார்க்க வராத அவல நிலை தனது பெயர் தாங்கிய கட்சிக்கே வரும் என்பதை அண்ணா அறிந்திருக்க மாட்டார். ஏனென்றால், மக்கள் மீது அவருக்கு அலட்சியம் கிடையாது. மக்களைப் பார்த்து பயந்தார். அதனால்தான் அவர் அண்ணா!

- ப.திருமாவேலன்

(16.12.2015 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் இருந்து...)