Published:Updated:

`மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்!' - கோவை மேயர் பதவிக்கு விருப்பமனு கொடுத்த அ.தி.மு.க பெண் புகார்

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு விருப்பமனு கொடுத்த அ.தி.மு.க பெண், போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சோனாலி
சோனாலி

உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் இதுகுறித்துதான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவை மாநகராட்சி மேயர் பதவிக்காக அ.தி.மு.க-வில் சோனாலி பிரதீப் என்ற வடமாநில பெண் விருப்புமனு கொடுத்துள்ளதாகவும், அவர்தான் கோவையின் அடுத்த மேயர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

சோனாலி
சோனாலி

முக்கியமாக, அவரது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. சோனாலி, `மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்' பட்டம் வென்ற அழகி ஆவார்.

இந்த நிலையில், சோனாலி பிரதீப் கோவை சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ``நான் 2017-ம் ஆண்டு `மிசஸ் இந்தியா' மற்றும் 2019-ம் ஆண்டு `மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்' பட்டம் வென்றுள்ளேன்.

சோனாலி
சோனாலி

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் எடுத்து வருகிறேன். அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்துகொண்டு, சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு அளித்துள்ளேன். நான் சமூக வலைதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னை பெண் என்றும் பாராமல் ஆபாசமாக சித்திரித்து, அசிங்கமான வார்தைகளைப் பயன்படுத்தி சிலர் பதிவுசெய்து வருகின்றனர். இதனால், நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி, குடும்பத்தினர் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கிய அந்தப் பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கி, அந்தப் பதிவுகளை பதிவேற்றம் செய்த நபர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சோனாலி
சோனாலி

சோனாலி கொடுத்த புகாரின் மீது சாய்பாபா காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, சோனாலி குறித்து இழிவாகப் பதிவு செய்ததாக இணையதளம் ஒன்றின் மீதும் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரகுபதி
ரகுபதி

இந்த நிலையில், சோனாலி சைபர் க்ரைம் பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டம் 20-வது வார்டு தி.மு.க உறுப்பினர் ரகுபதி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.