Published:Updated:

ரஜினிக்கு எதிராகத் தீர்மானம்... விண்ணைப் பிளந்த பறை இசை... கோவையைக் குலுங்கவைத்த நீலச்சட்டைப் பேரணி!

பறை இசையுடன் தொடங்கப்பட்ட இந்தப் பேரணி, சுமார் 1.30 மணிநேரம் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் நீலச்சட்டை அணிந்து இந்தப் பேரணியில் பங்கேற்றதால் பேரணி நடந்த பாலசுந்தரம் சாலை நீல மயமானது.

கோவையில், பெரியார் உணர்வாளர்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் சாதி ஒழிப்புப் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. அம்பேத்கரிய - மார்க்ஸிய - பெரியாரிய கருத்துகளில் பொதுச்சிந்தனை கொண்டவர்களின் ஒன்றிணைவாக, இந்த மாபெரும் நீலச் சட்டைப் பேரணியை தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஒருங்கிணைத்திருந்தார்.

நீலச்சட்டைப் பேரணி
நீலச்சட்டைப் பேரணி

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தனியரசு எம்.எல்,ஏ, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பறை இசையுடன் தொடங்கப்பட்ட இந்தப் பேரணி, சுமார் 1.30 மணி நேரம் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் நீலச்சட்டை அணிந்து இந்தப் பேரணியில் பங்கேற்றதால் பேரணி நடந்த பாலசுந்தரம் சாலை நீல மயமானது. இதையடுத்து, சாதி ஒழிப்பு மாநாடு நடந்தது.

நீலச்சட்டைப் பேரணி
நீலச்சட்டைப் பேரணி

பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், "நாம் எல்லாரும் வண்ணத்தால் ஒன்றிணைந்துள்ளோம்! கறுப்பு - நீலம் - சிவப்பு. மூன்றும் பெரியார் என்ற ஒற்றைச் சித்தாந்தத்தில் இணைகிறது" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆதித் தமிழர் கட்சியின் ஜக்கையன், ``நாட்டு விடுதலையைவிட, சமூக விடுதலைதான் இன்றியமையாத தேவை என்று நினைத்தவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கர். ஆனால், ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டு விடுதலை கிடைத்துவிட்டது, சமூக விடுதலைக்காக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். மதச்சார்பற்ற தன்மை, இந்திய அரசியலமைப்பின் ஆணிவேர். பார்த்தால் இந்திய அரசு நடத்த வேண்டிய மாநாட்டை, நாம் மேடை போட்டு நடத்திக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

கு.ராமகிருஷ்ணன்
கு.ராமகிருஷ்ணன்

த.பெ.தி.க பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், "காவல் துறையினரிடமிருந்து, மிகுந்த இழுபறிக்குப் பின்னரே இந்த மாநாட்டுக்கான அனுமதி கிடைத்தது. CAA குறித்து பேசுவீர்களா என்றார்கள். `அவனை நிறுத்தச் சொல், நான் நிறுத்துகிறேன்’ என்றேன். சில மாதங்களுக்கு முன்பாக `நாயிடமே பொமேரியன், அல்சேஷன் எனச் சாதி இருக்கும்போது மனிதர்களிடம் சாதி இருக்காதா?’ என்றொருவர் கேட்டார். நாங்கள் தெருநாய்கள்தான். அந்தத் தெருநாய்தான், ஊரையே காப்பாற்றுகிறது! எங்களைத் தாண்டி, எந்தச் சக்தியும் உள்ளே நுழைய முடியாது" என்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "இந்து மதம் இருக்கின்ற வரை சாதியம் இருக்கும். சாதியைத் தூக்கி எறிந்து, மனிதர்களாக ஒன்றுபடுங்கள்" என்றார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, "முஸ்லிம்களுக்கும் அம்பேத்கருக்கும் நூற்றாண்டு காலத்தொடர்பு உள்ளது. குடியுரிமை பிரச்னை எங்களுக்கு மட்டுமானதல்ல, இந்துக்களுக்கும்தான்.

வேல்முருகன்
வேல்முருகன்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த கரம்சேவகர் பன்வார் மெஹ்வான்சி, ஒரு தலித். தாழ்த்தப்பட்ட சாதியென்பதால் தன்னை எப்படியெல்லாம் அவர்கள் அவமதித்தனர் என்று ஆர்.எஸ்.எஸ்-லிருந்து விலகி, ``நான் ஒரு இந்துவாக இருக்க மாட்டேன்’’ என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்" என்றார்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ``தமிழ்நாட்டு அரசியலின் முதுகெலும்பே நம்முடைய இயக்கங்கள்தான். நாம் அனைவருக்குமான குடியுரிமையை உறுதி செய்தவர் அம்பேத்கர். அந்த மனிதனின் விழுமியங்களை பெயர்த்துக்கொண்டிருக்கும் பாசிசவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கோவை மண்ணிலே அம்பேத்கர் சிலை இல்லை என்பது, பல நாள்களாகவே பெரும் குறையாக இருந்து வருகிறது" என்றார்.

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சார்ந்த தெகலான் பாகவி, ``இஸ்லாமியர்களுக்கு இந்த மேடையில் அமர, முழுத் தகுதியும் இருக்கிறது. ஏனென்றால், நாங்கள் எப்பொழுதோ சாதியைத் தவிர்த்தவர்கள். எந்தளவு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கிறதோ, அந்தளவு வட இந்தியாவில் தலித்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரிக்கின்றன. மதச்சார்பற்று, சாதிச்சார்பற்று அனைவரும் போராடவேண்டும்" என்றார்.

மாநாட்டு மேடையில், இரண்டு இணைகளுக்கு கலப்புத் திருமணத்தை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி முன்னின்று நடத்தினார். அப்போது பேசிய அவர், "வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று சவால் விடுவோர்களே, வந்து பாருங்கள்... பத்தே நிமிடங்களில் இரண்டு திருமணங்களை நடத்திவிட்டோம்!" என்றார்.

கலப்புத் திருமணம்
கலப்புத் திருமணம்

மணமக்களை வாழ்த்திய அவர், "பாருங்கப்பா ஹைகோர்ட் அனுமதியோட உங்களுக்குத் திருமணம் பண்ணி வெச்சுட்டேன்" என்றதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி, "கல்யாணத்துக்கு வந்த எல்லோரும் இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகணும் என்றெல்லாம் வற்புறுத்த மாட்டோம். நீங்கள் விரும்பியதைச் சாப்பிடும் சுதந்திரம் அளிக்கிறேன்" என்று முடித்தார்.

வீரமணி
வீரமணி

தமிழ்ப் புலிகள் கட்சியைச் சார்ந்த நாகை திருவள்ளுவன், ``இதே மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில்தான் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. இதை எதிர்த்துப் போராடி 43 நாள்கள் சிறை சென்றேன். பொதுவாக, நம் இந்தியக் கொடியை மூவர்ணக் கொடி என்றே சொல்கின்றனர். நடுவில் இருக்கும் நீலத்தை யாரும் கணக்கிடுவதே இல்லை. மையத்தில் உள்ள நீலத்தின் கோட்பாடே, இந்தியா முழுமைக்குமான கோட்பாடு" என்றார்.

இறுதியாகப் பேசிய நாடளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், ``வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு மற்றுமொரு பெரும்பணியையும் மேற்கொள்ள வேண்டும். கருஞ்சட்டை, நீலச்சட்டையைத் தொடர்ந்து, செஞ்சட்டைப் பேரணி ஒன்றையும் நடத்திக்காட்ட வேண்டும். இந்துத்துவ வாதிகளுக்கு பொதுவாகவே, சமத்துவம் பேசும் நீல நிறம் பிடிப்பதில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

என்றாலும்கூட கிருஷ்ணவதாரம் நீல நிறம்தான், சிவபெருமானின் மறுபெயரே நீலகண்டன்தான். நாடகக் காதல் என்ற பெயரில் சமத்துவம் கெடுக்கப் பார்க்கும் இவர்கள், நாடக அரசியலே நடத்துகின்றனர். சாதி ஒழிப்பு அம்பேத்கரோ, பெரியாரோ கொண்டுவந்ததல்ல!

மாநாடு
மாநாடு

பலநூறு வருடத்துக்கு முன்பாக கௌதம புத்தர் கொண்டுவந்தது. பொதுவாக நீலத்துக்கு அலைநீளம் அதிகம். அதனால்தான் அதீத நீளம் பரவி இத்தனை உணர்வாளர்களைக் கூட்டி வந்திருக்கிறது" என்றார்.

எல்லோரும் நீல நிறச்சட்டையுடன் அணிவகுக்க, தனியரசும் வேல்முருகனும் மட்டும் எப்போதும்போல வெள்ளைச் சட்டை அணிந்திருந்தனர். அதேபோல, கி.வீரமணி எப்போதும்போல கறுப்புச் சட்டை அணிந்து அதன் மேல் நீல நிற துண்டு போட்டிருந்தார்.

ஜக்கையன், வீரமணி, ஜவாகிருல்லா
ஜக்கையன், வீரமணி, ஜவாகிருல்லா

இந்த மாநாட்டில் மனுவை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம், கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியதற்கு கண்டனம், ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்புச் சட்டம், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.ஆர்.பி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு, மக்கள் போராட்டத்தை இழிவு படுத்துவதாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு எதிராகத் தீர்மானங்கள் உட்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதி ஒழிப்பு மாநாடு
சாதி ஒழிப்பு மாநாடு

நள்ளிரவை நெருங்கும்வரை கூட்டம் கலையாமல் இருந்தது. கைக்குழந்தைகளுடன் வந்தவர்களும் மாநாடு முடியும்வரை காத்திருந்து சென்றனர். காரிருளிலும் நீலவானம் தரையில் பிரதிபலித்ததை கோவை மக்கள் பார்த்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு