Published:Updated:

`இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!' - தலைமை அறிவிப்பால் கொதிக்கும் கோவை தி.மு.க.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க தலைமையின் அறிவிப்பால் கோவை உடன்பிறப்புகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றாலும், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அ.தி.மு.க பிரமுகர்களுக்கு ஸ்லீப்பர் செல்களாக வேலை பார்த்தது, சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தது என்று தி.மு.க-வுக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தன.

முக்கியமாக, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காக, கோவை ஆச்சிப்பட்டி ஒன்றியச் செயலாளர் மருதவேல், ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.30 லட்சம் கேட்ட ஆடியோ சமீபத்தில் வெளியானது. அந்த ஆடியோவில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரது பெயர்களும் அடிபட்டன.

அதேபோல, தி.மு.க-வின் மற்ற நிர்வாகிகள் மீதும் புகார்கள் வரிசை கட்டி நின்றன. இதனால், கோவை தி.மு.க-வில் நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தி.மு.க தலைமையிடம் இருந்து நேற்று ஓர் அறிவிப்பு வெளியானது.

தென்றல் செல்வராஜ்
தென்றல் செல்வராஜ்

ஆனால், அதில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புகார் கூறப்பட்ட அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அப்படியே தொடர்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

`செல்லாத நோட்டுகளால் சிக்கிய ஆனந்தன்!’- கோவை தி.மு.க பிரமுகரின் வில்லங்கப் பின்னணி

மேலும், மாநகர் மாவட்டம் என்று இருப்பதை, மாநகர் கிழக்கு, மேற்கு என இரண்டு இரண்டாகப் பிரிப்பதாக அறிவித்துள்ளனர். அதன்படி, மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த நா.கார்த்திக் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும்

நா.கார்த்திக்
நா.கார்த்திக்

முத்துசாமி என்பவரை மேற்கு மாவட்டச் செயலாளராகவும் நியமித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்த தி.மு.க உடன்பிறப்புகள் தலைமையின் அறிவிப்பால் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``கட்சியை வலுப்படுத்துவதைவிட, தங்களை தனியாக மேம்படுத்திக் கொள்வதில்தான் இங்கிருக்கும் நிர்வாகிகள் கவனம் செலுத்துகின்றனர். கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கும் இதுதான் காரணம். அதனால்தான், மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்தோம்.

முத்துசாமி
முத்துசாமி

ஆனால், நிர்வாகிகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல், மாநகரை இரண்டாகப் பிரித்துள்ளனர். நா.கார்த்திக் கட்டுப்பாட்டில் 71 வார்டுகளும் முத்துசாமி கட்டுப்பாட்டில் 29 வார்டுகளும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டுதான், கோவை மாநகர் தெற்கு, வடக்கு என்றிருந்ததை, ஒரே மாவட்டமாக மாற்றினார்கள். தற்போது, மீண்டும் அதை மேற்கு, கிழக்கு என்று பிரித்துள்ளனர். அப்போது, வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முத்துசாமி, இப்போது மேற்கு மாவட்டச் செயலாளராகியிருக்கிறார். அவ்வளவுதான். 29 வார்டுகளுக்கு எதற்குத் தனியாக மாவட்டச் செயலாளர் நியமிக்க வேண்டும்?

ஸ்டாலின்
ஸ்டாலின்

வார்டுகளைப் பிரித்ததிலும் குளறுபடிகள் இருக்கின்றன. இதனால், கட்சி எந்தவிதத்திலும் வலுவடையப் போவதில்லை. இதுமேலும், பின்னடைவைத்தான் கொடுக்கும். இதற்கு அந்த பருத்தி மூட்டைகள் குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்கின்றனர் விரக்தியான குரலில்.

பின் செல்ல