Published:Updated:

எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு... ஆளுங்கட்சியானபின்பு ஆதரவா?

திரும்பிய பக்கமெல்லாம் கறுப்புக்கொடிகள், திட்டத்துக்கு எதிராக போஸ்டர்கள், பேனர்கள் என்று அந்தக் கிராமங்கள் போராட்டக்களமாக மாறியிருந்தன.

பிரீமியம் ஸ்டோரி

‘‘சேலம்–சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை தி.மு.க தடுத்து நிறுத்தும். கமிஷனுக்காக விளைநிலங்களை அழித்து, இந்தத் திட்டத்தை அ.தி.மு.க அரசு கொண்டுவந்திருக்கிறது. மக்கள் ஏற்காத இந்தத் திட்டம் தி.மு.க ஆட்சியில் ரத்துசெய்யப்படும்’’ - கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மு.க.ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால், கோவை மாவட்டத்தில் அதே போன்று விளைநிலங்களைக் கையகப்படுத்தி, தொழிற்பூங்காவை அமைப்பதற்கான நகர்வுகள் தற்போதைய தி.மு.க ஆட்சியில் ஆரம்பித்திருப்பதாகக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு... ஆளுங்கட்சியானபின்பு ஆதரவா?

கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் தாலுகாக்களில் சுமார் 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதற்காக அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான சர்வே பணிகளை முடித்திருக்கிறார்கள். இந்த 3,800 ஏக்கரில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் நிலம் விவசாய பூமி. இதனால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கறுப்புக்கொடி ஏந்துவது, இரு சக்கர வாகனங்களில் பேரணி என்று போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அவர்களில் பலரும், “கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது எட்டுவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது ஆட்சிக்கு வந்ததும் அதே வேலையைச் செய்வது நியாயமா?” என்று கேட்கிறார்கள்.

அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர் சுற்றுவட்டார கிராமங்களுக்குச் சென்றோம். திரும்பிய பக்கமெல்லாம் கறுப்புக்கொடிகள், திட்டத்துக்கு எதிராக போஸ்டர்கள், பேனர்கள் என்று அந்தக் கிராமங்கள் போராட்டக்களமாக மாறியிருந்தன. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக லக்கேபாளையம் கிராமத்தில் வசித்துவரும் துளசிமணி என்ற பெண், ‘‘முன்னாடி ஒரு கூரை வீட்டுல இருந்தோம். போன வருஷம்தான் கஷ்டப்பட்டு காரை வீடு கட்டினோம். 11 ஏக்கர் காடு இருக்கு... ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு காட்டைவெச்சுதான் ஜீவனம் பண்ணிக்கிட்டு இருக்கோம். திடீர்னு வந்து காட்டை எடுத்துருவோம்னு சொன்னா, நாங்க எப்படி பொழைக்குறது? எங்க இடத்தைவிட்டுப் போக மாட்டோம். அதையும் மீறி அரசாங்கம் எங்களை அப்புறப்படுத்த முயற்சி செஞ்சா, எங்க உசுரைத்தான் விடுவோம்’’ என்றார் உறுதியான குரலில்.

சமீரன், தங்கம் தென்னரசு
சமீரன், தங்கம் தென்னரசு

ஆத்துக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணபிரபு, ‘‘எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல 10 ஏக்கர் பூமியைக் கையகப்படுத்துறதா சொல்லியிருக்காங்க. நிலத்தை எடுத்தா, எங்க தென்னந்தோப்பு முழுசும் போயிடும். இது விவசாய பூமி. அதோட, இந்த ஏரியாவுல இருந்து மட்டும் விவசாயிகள் ஆவினுக்கு தினமும் 10,000 லிட்டர் பால் சப்ளை செய்யறாங்க. நிறைய பேருக்கு வேலைவாய்ப்பைத் தருவோம்னு சொல்றாங்க. விவசாயத்தை அழிச்சுதான் வேலைவாய்ப்பைத் தரணுமா?” என்றார் ஆதங்கத்துடன்.

“50-க்கும் அதிகமான குக்கிராமங்களில் வசிக்கும் 40,000 மக்கள் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்” என்று சொல்லும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால், “இந்த மக்கள்கிட்டயிருந்து பூமியைப் பறிச்சுட்டா மக்களோட வாழ்வாதாரமே போயிடும். அரசாங்கம் கொடுக்கற இழப்பீடு பணத்தைவெச்சுக்கிட்டு மக்களால எதுவும் பண்ண முடியாது. இங்க தொழிற்பூங்கா வந்தா நிலம், நீர், காற்று மாசு அடைஞ்சு, இந்த 3,800 ஏக்கர் பூமி மட்டுமில்லாம சுத்தியிருக்குற 10,000 ஏக்கர் பூமியும் பாதிப்படையும். இங்க இருக்குற மக்கள் யாரும் தொழிற்பூங்கா கேட்கலை. எந்த இடத்துல கேக்கறாங்களோ, அங்க கொண்டு போகட்டும். அரசாங்கம் மக்களோட உணர்வுக்கு மதிப்பளிச்சு, திட்டத்தைக் கைவிடணும்’’ என்றார் அழுத்தமாக.

எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு... ஆளுங்கட்சியானபின்பு ஆதரவா?

அதேசமயம் உள்ளூர் மக்களில் சிலரோ, ‘‘இங்கு ஒரு ஏக்கர் நிலம் பல லட்சங்களில் விலைபோகிறது. ஆனால், தென்மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு இதைவிட மிகக்குறைவு. அங்கு வேலைவாய்ப்பும் கிடையாது. அங்கெல்லாம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல், இங்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் பின்னணியில் சதி இருப்பதாகச் சந்தேகப்படுகிறோம். மேட்டுப்பாளையம் முதல் திருச்செங்கோடு வரை பிளாட்டினம் இருப்பதாக ஒரு தகவல் உள்ளது. தொழிற்பேட்டை என்ற பெயரில் ஒவ்வொரு பகுதியாக கட்டுப்பாட்டில் எடுத்து அதைச் சுரண்டுவதும் திட்டமாக இருக்கலாம்’’ என்கிறார்கள் அச்சத்துடன்!

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரனிடம் பேசினோம். ‘‘தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆரம்பகட்ட பரிசீலனையாகத்தான் அந்த இடங்களைப் பார்த்திருக்கிறார்கள். மக்களுக்கு நல்ல இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்துத்தான் நிலத்தைக் கையகப்படுத்துவார்கள். மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால், அரசாங்கம் அதை எடுக்காது. விருப்பமுள்ள மக்களின் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்’’ என்றார்.

சரவணபிரபு, வேணுகோபால்
சரவணபிரபு, வேணுகோபால்

இந்த விவகாரத்தை, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொண்டு சென்றோம். ‘‘கோவை போன்ற தொழில் நகரத்துக்கு தொழிற்பூங்கா அவசியம் என்பதற்காகத்தான் இந்தத் திட்டத்தை பரிசீலிக்கிறோம். அதேசமயம், அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் என்னிடம் பேசியிருக்கிறார். ஒன்றை அழித்துத்தான் இன்னொன்றை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதிகாரிகளிடம் மீண்டும் ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருக்கிறோம். அப்பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு, நல்ல முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

தொழில் வளர்ச்சி, விவசாயம் இரண்டுமே முக்கியம். அதைவிட முக்கியம், எளிய மக்களின் வாழ்வாதாரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு