Published:Updated:

நீட் குறித்து பேச்சு.. உதயநிதி மீது வழக்கு... கோவையில் நடந்தது என்ன?

உதயநிதி
உதயநிதி

``போஸ்டர் ஒட்டினவங்க மேல நடவடிக்கை எடுக்காட்டி, குனியமுத்தூர் காவல்நிலையம் முன்பு, அமைச்சர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" - கோவை போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்.

"தன்னம்பிக்கை தலைமையா..? துண்டுச்சீட்டு தலைமையா..?”, “உழைப்பை நம்பலாமா..? பிறப்பை நம்பலாமா..?” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இம்சை அரசன் புலிகேசி போலச் சித்தரித்து கோவை சிட்டி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அ.தி.மு.க-வின் இந்த போஸ்டர் அரசியலால் கடுப்பான, தி.மு.க அந்த போஸ்டர்களை தேடித் தேடிச் சென்று கிழித்தது. அ.தி.மு.கவினர் போஸ்டர்களைக் கிழித்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என புகாரளித்தனர்.

போஸ்டர்
போஸ்டர்
மு.க.ஸ்டாலினைச் சீண்டிய போஸ்டர்... கோவை தி.மு.க - அ.தி.மு.க மல்லுக்கட்டு

இதையடுத்து, தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் 7 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர். அதைக் கண்டிக்கும் விதமாக கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க-வினர் அறிவித்தனர்.

ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி வழங்காததால், தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தி.மு.க அறிவித்தது. காவல்துறையும் வாய்மொழியில் உத்தரவு வழங்கியதாகக் கூறினர். தி.மு.க இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை கோவை வந்துவிட்டார். தி.மு.க-வினர் மேடை அமைத்து ஏற்பாடுகளை தொடங்கினர். "சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை கரைத்து குடித்த எடப்பாடியே" என்று போஸ்டர்கள் ஒட்டிய பதாகைகளை ஏந்தினர்.

கோவை மாவட்டம் முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். மாஸ்க், தனிமனித இடைவெளி போன்ற உத்தரவுகள் எல்லாம் காற்றில் பறந்தன. காலை ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு போலீஸார், "இதற்கு அனுமதி இல்லை" என்று கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர். தி.மு.க நிர்வாகிகள் மேடையில் அமர்ந்து காவல்துறைக்கு எதிராகக் கோஷமிட்டு தர்ணா செய்தனர்.

மறுபக்கம் கூட்டம் கூடிக் கொண்டேயிருந்தது. ஒருகட்டத்தில், காவல்துறை போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியை மட்டுமே கவனித்தனர். 10.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலின் ஸ்பாட்டுக்கு வந்தார். போராட்டம் முடிந்து மைக் பிடித்த உதயநிதி, இ.பி.எஸ், ஓ.பி.எஸ், வேலுமணி என அனைவரையும் கடுமையாக விமர்சித்தார். பிறகு நொய்யல் ஆற்றில் நடைபெறும் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளைப் பார்வையிட்டார்.

இந்தநிலையில், உதயநிதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதது, நீட் தேர்வு குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு அச்சத்தை உருவாக்கி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 சட்டப்பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்படி என்ன பேசினார் உதயநிதி?

"இது போஸ்டரை கிழிச்சதுக்காக மட்டும் நடக்கற போராட்டம் கிடையாது. பத்தாண்டு ஆட்சில அமைச்சர் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது. வேலுமணி சேர்த்து வெச்சது எல்லாம் பிளாக் மணி. தேர்தல்'ல உனக்கு அடிக்க போறாங்க சாவுமணி. எழுதி வெச்சுக்கோங்க, போன வருஷம் நாடாளுமன்ற தேர்தல்ல ஒட்டு மொத்த தமிழகத்துலயும் ஜெயிச்சோம். கொங்கு மண்டலத்துல அதிக வாக்கு வித்தியாசத்துல ஜெயிச்சோம். சாவுமணி அடிக்க வேலுமணிக்கு 6 மாதங்கள்தான் இருக்கு. தேர்தல்ல மக்கள் துரத்தி துரத்தி அடிப்பாங்க. நாங்க பெரியார், அண்ணா, கலைஞர் கிட்ட கண்ணியமான அரசியல் கத்துருக்கோம்.

கீழ்த்தரமா போஸ்டர் அடிச்சு, உங்க வீட்டு சுத்தி ஒட்டிருக்கீங்க. அதைக் கிழிச்ச எங்க தம்பிமார்கள் மேல வழக்கு போட்டுருக்காங்க. போஸ்டரை அடிச்சவன், உன் பெயரை போட்டுத்தான் அடிச்சுருக்கணும். இதுவே சட்டப்படி குற்றம். உனக்கு அந்த அளவுக்குத் தைரியம் கூட இல்ல. நீ எல்லாம் ஒரு மந்திரி. இதவிட அசிங்கமா.. சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும். இனி போஸ்டர் எல்லாம் கிழிக்க மாட்டோம். நீங்க ஒட்டினா, அதுக்கு மேலயே எங்க போஸ்டரை ஒட்டுவோம். போஸ்டர் ரெடியா வெச்சுருக்கோம்.

மு.க.ஸ்டாலினைச் சீண்டிய போஸ்டர்... கோவை தி.மு.க - அ.தி.மு.க மல்லுக்கட்டு

கைது பண்ணாலும் பரவால்லனுதான் இங்க வந்தேன். திராவிட முன்னேற்ற கழகம் மிசாவயே பார்த்தவங்க. இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். இளைஞரணி தம்பிமார்களைக் கைது பண்ணவுடனே நான் டிக்கெட் போட்டு, அப்பாக்கிட்டயும், 'கோயம்புத்தூர் போறே'ன்னு சொல்லிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு அப்பா கூப்டு, 'நம்ம நிர்வாகிகள ரிலீஸ் பண்ணிட்டாங்களா..? இல்ல எனக்கும் சேர்த்து கோயம்புத்தூருக்கு டிக்கெட் போடு'னு சொன்னாரு. டிக்கெட் போட்ட 5 நிமிஷத்துல எல்லாரையும் விட்டுட்டாங்க. நம்ம தலைவரைப் பார்த்து அவ்ளோ பயம். ஏன்னா, அவரு மக்கள் ஆதரவு பெற்ற தலைவரு. உங்க முதலமைச்சர் மாதிரியா..? நீ எப்படி முதலமைச்சர் ஆனனு எங்களுக்கு தெரியாதா?.

உதயநிதி
உதயநிதி

டேபிளுக்கு அடில ஊர்ந்து போய், அந்தம்மா சசிகலா காலைப் புடிச்சு.. அந்த போட்டோவைப் பார்த்தா, அது டெட்பாடியா... எடப்பாடியானே தெரியாது. அந்தக் கதை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் தெரியும். இவங்க தொடர்ந்து தமிழகத்தோட அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்துட்டு இருக்காங்க. ஏன்னா இவங்களுக்கு மேல இன்னொருத்தர் இருக்காங்க" என்று அவர் சொன்னவுடன் தொண்டர்கள், "மோடி.. டாடி" என கோஷமிட்டனர்.

மீண்டும் தொடர்ந்த உதயநிதி, "தமிழகத்தில் யார் முதலமைச்சர்'னு தெரியல. எடப்பாடியா..? இல்ல அவரோட நிழல் முதலமைச்சர் வேலுணியா..? அப்பறம் இன்னொருத்தர் இருக்காரு" என்றவுடன், தொண்டர்கள், "ஓ.பி.எஸ்" என்று கூச்சலிட்டனர். அதற்கு உதயநிதி, "ஓ... மிச்சரா.. டயர் நக்கி. நம்ம ஆளுங்க யாரோ போட்டாங்க.. எங்க தலைவரு ஃபயரு. நீ டயருனு. போஸ்டர் ரெடியா இருக்கு. கொரோனாவை வென்ற உத்தமரேனு வேலுமணி எப்ப போஸ்டர் அடிச்சு ஒட்டினாரோ.., அப்ப இருந்துதான் கோயம்புத்தூர்ல கொரோனா அதிகமாகிட்டு இருக்கு.

உதயநிதி
உதயநிதி

கொரோனாவை விட இது கேவலமான ஆட்சி. ப்ளீச்சிங் பவுடர்ல இருந்து எல்லாத்துலயும் வேலுமணி ஊழல் பண்ணிட்டு இருக்கார். வேலுமணி ஊழல் சம்பந்தமா, உயர் நீதிமன்றத்துல வழக்கு போட்ருக்கோம். அத்தனை ஆதாரங்களும் தலைவர் கையில இருக்கு. விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்பறம் எடப்பாடி, ஊழல்மணி எல்லாரும் கம்பி எண்ணப் போறாங்க.

கலைஞர் இருந்தவரைக்கும் நீட் தேர்வை அனுமதிக்கல. கிராமப்பற மாணவர்களும் மருத்துவராகணும்னு, என்ட்ரன்ஸ் எக்ஸாம் முறைய ஒழிச்சு, கவுன்சிலிங் முறையைக் கொண்டு வந்தார். ஜெயலிலதா அம்மையாரும் நீட் தேர்வை அனுமதிக்கல. ஆனா, எங்க கிராமப்புற மாணவர்கள் மருத்துவராகக் கூடாதுனு தான் இங்க நீட் கொண்டு வந்தாங்க. 3 வருஷத்துல 13 மாணவர்கள் நீட் தேர்வால இறந்துருக்காங்க. இந்த வருஷம் வெறும் 8 மாணவர்கள் தான் அரசுப் பள்ளில இருந்து தேர்ச்சி பெற்றிருக்காங்க. நம்ம தலைவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனால, அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுக்கணும்னு சட்ட மசோதா தாக்கல் பண்ணி, ஆளுநருக்கு அனுப்பி வெச்சாங்க. 40 நாளாகியும் அவர் கையெழுத்துப் போடல.

உதயநிதி
உதயநிதி

ஆளுநர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதாம, நம்ம தலைவருக்கு கடிதம் எழுதிருக்கார். அடுத்து வரது நம்ம ஆட்சி. அதான் ஆளுநருக்குப் பயம் வந்துருச்சு. எப்படித் தவழ்ந்து தவழ்ந்து போய் முட்டி போட்டு, சாஷ்டங்கமா படுத்து, சசிகலா காலைப் பிடிச்சு முதலமைச்சர் பதவி பிடிச்சிங்களோ..?, அப்படியே ராஜ்பவன் போய், தவழ்ந்து போய், மண்டி போட்டு ஆளுநர் காலைப் பிடிச்சு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுங்க. யாரும் போட்டோ, வீடியோ எடுக்க மாட்டோம். போஸ்டர் ஒட்டினவங்க மேல நடவடிக்கை எடுக்காட்டி, குனியமுத்தூர் காவல்நிலையம் முன்பு, அமைச்சர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு