Published:Updated:

ஈரோடு கிழக்கு: களப்பணியில் தீவிரம்... நள்ளிரவு வரை நீடித்த எடப்பாடியின் ஆய்வுக் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

``பெரும்பாலான கவுன்சிலர்கள் திமுக கூட்டணி வசம் இருப்பதால் இங்கு களப்பணியைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.”

Published:Updated:

ஈரோடு கிழக்கு: களப்பணியில் தீவிரம்... நள்ளிரவு வரை நீடித்த எடப்பாடியின் ஆய்வுக் கூட்டம்

``பெரும்பாலான கவுன்சிலர்கள் திமுக கூட்டணி வசம் இருப்பதால் இங்கு களப்பணியைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.”

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர்  அறிவிக்கப்படவில்லை. இரட்டை இலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிற எடப்பாடி அணியினர், இந்தத் தொகுதியில் முன்கூட்டியே தீவிர களப்பணியாற்றிவருகின்றனர். இதற்காக கட்சியின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்து தீவிரமாகத் தேர்தல் பணிபுரியத் தொடங்கியிருக்கின்றனர். இந்தத் தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தம் 12 சதுர கி.மீ பரப்புக்குள் ஈரோடு கிழக்குத் தொகுதி அடங்கிவிடுகிறது. 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் அடங்கிய இந்தத் தொகுதியில், ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் 33 வார்டுகள் இந்தத் தொகுதியில் இருக்கின்றன. இந்த வார்டுகளில் தற்போது 28 தி.மு.க கவுன்சிலர்களும், மூன்று காங்கிரஸ் கவுன்சிலர்களும், ஒரு ம.தி.மு.க கவுன்சிலரும், ஒரே ஒரு அ.தி.மு.க கவுன்சிலரும் இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பெரும்பாலான வார்டுகளின் கவுன்சிலர்கள் தி.மு.க கூட்டணி வசம் இருப்பதால் இங்கு களப்பணியைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
இதற்காக வியூகம் அமைத்து களப்பணியில் தீவிரமாக வாக்குகளைச் சேகரித்துவருகின்றனர் அ.தி.மு.க-வினர்.
ஒவ்வொரு முன்னாள் அமைச்சருக்கும் ஒன்று முதல் இரண்டு வார்டுகளைப் பிரித்து, அவர்களது மாவட்டத்தில் இருந்தும் அழைத்துவரப்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் மூலமாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு வீதிக்கும் சென்று வாக்காளர் பட்டியலிலுள்ள நபர்கள் அங்கேயே குடியிருக்கிறார்களா, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் எத்தனை பேர், இறந்து போன வாக்காளர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரங்களையும், குடியிருப்போரின் செல்போன் எண்களையும் சேகரித்திருக்கின்றனர்.

இவ்வாறு மொத்தமுள்ள ஒன்பது பகுதிகளிலும் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடங்கிய பட்டியலை ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருக்கிற பகுதிவாரியான பொறுப்பு வகிக்கும் முன்னாள் அமைச்சர்களின் வசம் நேற்று மாலை வழங்கப்பட்டது.

வரவேற்கும் தொண்டர்கள்
வரவேற்கும் தொண்டர்கள்

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வசிக்கும் வாக்காளர்களின் பெயர் பட்டியலைத் தனித்தனியே வெட்டி, நோட்டுப் புத்தகத்தில் அதை ஒட்டி வாக்காளர்கள் அனைவரின் புள்ளிவிவரங்களையும் பக்காவாக அ.தி.மு.க தொண்டர்கள் சேகரித்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு 7 மணியளவில் தொகுதியிலுள்ள கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, பி.பெ.அக்ரஹாரம், அசோகபுரம், பெரியார் நகர் உள்ளிட்ட ஒன்பது பகுதிகளிலுமிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய தகவல்களுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க-வினர் பங்கேற்றனர்.

ஈரோடு வில்லரசம்பட்டியிலுள்ள தனியார் ரிசார்ட்டிலுள்ள ஹாலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, நந்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். தனித்தனியே பகுதிவாரியாகவும், பூத் வாரியாகவும் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் தேர்தல் களப்பணியாற்றியவர்களை அழைத்து அவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

அவர்கள் கூறும் தகவல்களைச் சேகரித்துக்கொண்ட அவர், அ.தி.மு.க-வுக்கு எந்தெந்த பகுதிகள் வீக்காக உள்ளது என்பதைக் குறித்துக்கொண்டார். இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆய்வுக் கூட்டம் இரவு 12 மணி வரையிலும் நீடித்தது.

ஆய்வுக்கூட்டம் முடிந்து வெளியேறும் எடப்பாடி பழனிசாமி
ஆய்வுக்கூட்டம் முடிந்து வெளியேறும் எடப்பாடி பழனிசாமி

பத்திரிகையாளர், அச்சு, ஊடகங்களைச் சேர்ந்த யாரையும் ஹாலுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. புகைப்படமோ, வீடியோவோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை.
முதற்கட்டமாக சேகரித்துக்கொண்ட தகவல்களில் அந்தந்த பகுதிகளின் வார்டுச் செயலாளர்கள், முன்னாள், இந்நாள் கவுன்சிலர்கள் துணையுடன் அ.தி.மு.க-வுக்கு வாக்களிப்போர் எத்தனை பேர் என்ற விவரங்களை பூத்வாரியாக சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே இனிவரும் காலங்களில் வேலைகள் நடைபெறும் என பெயர் கூற விரும்பாத அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறினார்.

இது குறித்து அந்த நிர்வாகி மேலும் நம்மிடம் கூறுகையில், ``தொகுதி முழுவதும் களப்பணியாற்றியதில் பல இடங்களில் தூய்மைப் பணியாளர்களில் பலரும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை ஒப்பந்தப்பணிகளுக்கு வழங்கியதால் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். அவர்களில்  பலரும் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தவர்கள். அதேபோல இஸ்லாமியர்களின் வாக்குகள் கடந்த முறை எங்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே கிடைத்தது. இம்முறை கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முதற்கட்டமாக எங்களது வாக்குவங்கியைத் தக்கவைக்கவே முயல்றோம். கடந்த முறை த.மா.கா சார்பில் யுவராஜா, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு 58,396 வாக்குகள் பெற்றார். இப்போதைக்கு எங்கள் இலக்கு கடந்த தேர்தலில் வாங்கிய வாக்குகள் குறைந்துவிடக் கூடாது என்பதுதான். கடந்த தேர்தலில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றியை இழந்தோம். தொடர்ந்து களப்பணியாற்றினால் வெற்றி பெறுவோம்” என்றார் நம்பிக்கையுடன்.