Published:Updated:

அண்ணாவின் நாகரிகம்! - எத்தனை மனிதர்கள்..!

Annadurai.c.n
பிரீமியம் ஸ்டோரி
Annadurai.c.n

அரசியலில் அறிஞர் அண்ணா படைத்தது புது வரலாறு..!

அண்ணாவின் நாகரிகம்! - எத்தனை மனிதர்கள்..!

அரசியலில் அறிஞர் அண்ணா படைத்தது புது வரலாறு..!

Published:Updated:
Annadurai.c.n
பிரீமியம் ஸ்டோரி
Annadurai.c.n

ரு கட்சியிலிருந்து விலகி வெளியே வந்தவர்கள் தாங்கள் அதுவரை அங்கம் வகித்த கட்சியின் தலைவரைத் தாறுமாறாக ஏசுவார்கள். ஊழல் பேய் என்பார்கள். அங்கே நடக்கிற தவறுகளை சகிக்கப் பிடிக்காமல்தான் வெளியேறி வந்ததாகப் பறைசாற்றுவார்கள். இதுதான் இந்திய அரசியலின் அருவருக்கத்தக்க நிலை. ஆனால், அறிஞர் அண்ணா படைத்தது புது வரலாறு.

1949-ம் வருடம் தந்தை பெரியாரிடமிருந்து விலகி அண்ணா வெளியே வந்தார். விலகுவதற்கு முன்பு, அதற்கான காரணங்களைத் தமது 'திராவிட நாடு' வார ஏட்டில் ஏராளமாக எழுதினார். பின்னர், 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதியதோர் அமைப்பை உருவாக்கினார். அதன்பிறகு, அவர் நடந்துகொண்ட விதம் அரசியல்வாதிகளையும் பத்திரிகையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருந்தது.

'பெரியார்தான் இப்போதும் எங்கள் தலைவர்' என்றார் அண்ணா, 'எங்கள் கட்சியில் தலைவர் பதவி கிடையாது. தலைவர் நாற்காலி காலியாகவே வைத்திருக்கப்படும். அது, பெரியாரின் நாற்காலி' என்றார். 'திராவிடர் கழகமும் தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி போலச் செயல்படும்' என்றார்.

Annadurai.c.n
Annadurai.c.n

 இத்தனைக்கும் பெரியார், அந்தச் சமயம் தி.மு.கழகத்தைக் கடுமையாக விமரிசித்துக் கொண்டிருந்தார். அண்ணாவின் நடவடிக்கைகளையும் காரசாரமாகத் தாக்கி வந்தார். பெரியாரின் 'விடுதலை' நாளிதழில் 'தலையங்கம்' மற்றும் 'பலசரக்கு மூட்டை' ஆகிய பகுதிகளில் தி.மு.க. மீது நாள் தவறாது தாக்குதல் இருக்கும். ஆனால், அண்ணா பதிலுக்குப் பதில் என்ற பானியில், பெரியாரை விமரிசனம் செய்ய மாட்டார். மாறாக, 'பெரியார் கட்சியும் தம் கட்சியும் வேறு வேறு அல்ல... செயல்படும் விதத்தினால் மட்டுமே தனிக் கட்சிகள்' என்ற கருத்து எல்லோர் மனதிலும் பதியும்படியாகவே பேசுவார். தி.மு.கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1951-ல் மாயூரத்தில் (மயிலாடுதுறை) தி.மு.க-வின் மாநாடு நடந்தது.

அதிலே பேசிய அண்ணா, "தமிழ்நாட்டின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பட்டினக் கரைகளில் எல்லாம் மூலைமுடுக்குகளில் எல்லாம் தெருத்தெருவாகக் கறுப்பு - சிவப்பு இரு வண்ணக்கொடி பறக்க வேண்டும். அது, திராவிட முன்னேற்றக் கழகக் கொடியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. திராவிடர் கழகக் கொடியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த இரண்டில் ஏதாவது ஒரு கறுப்பு - சிவப்புக் கொடி கட்டாயம் பறக்க வேண்டும்..." என்றார் அண்ணா.  

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"என்றாவது ஒரு நாள் அய்யாவும் அண்ணாவும் மறுபடியும் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள்" என்று மக்கள் பலமாக நம்பினார்கள். இப்படி நம்பியவர்களில் கவிஞர் கருணானந்தமும் ஒருவர். திராவிடர் இயக்கத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய மூன்று பேரிடத்திலும் நெருங்கிப் பழகி, அவர்களது அபிமானத்தைப் பெற்றவர்கள் மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவர் கவிஞர் கருணானந்தம். மத்திய அரசு ஊழியராக இருந்துகொண்டே, இயக்கப் பணிகளிலும் ஈடுபட்டவர். தி.க - தி.மு.க என்று கட்சி பிளவுபட்ட பின்னரும் பெரியார், அண்ணா ஆகிய இரண்டு பேரிடமும் நெருக்கமாக இருந்தவர் இவர்.

அண்ணாவிடம் இருபத்தேழு ஆண்டுகள் நெருங்கிப் பழகிய இவர், அண்ணாவுடனான தனது அனுபவங்களை 'அண்ணா - சில நினைவுகள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். "சென்ற 15.10.86 அன்று என்னுடைய அறுபத்திரண்டாவது பிறந்தநாள். அண்ணா வழியில் அதே நோய்க்கு ஆளாகி, எதிர்காலத்தைக் கணிக்க இயலாத சூழ்நிலையில் நாட்களை நகர்த்தி வருகிறேன் நான், வழக்கமாக என்னைக் கண்டு மகிழ அன்று வருகை தந்த நண்பர்கள், ஒரே குரலில் கோரிக்கை ஒன்றை என்முன் வைத்து வலியுறுத்தினர்.

அண்ணா அவர்களைப் பற்றி நான் உடனே ஒரு நூல் எழுதிட வேண்டும் என்பதே அது." என்று தமது நூலின் முன்னுரையில் உருக்கமாகக் குறிப்பிடும் கருணானந்தம், அறுபத்தோரு அத்தியாயங்களில் அண்ணாவின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களை இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார்! பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து வருவதற்கு ஓராண்டுக்கு முன் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு சிறப்பு மாநாட்டில் அண்ணாவிடம் பெரியார் காட்டிய பாசம் பற்றி தன் நூலில் நினைவு கூர்ந்திருக்கிறார் கருணானந்தம். "அண்ணாவை இரட்டை மாட்டுச் சாரட்டு வண்டியில் வைத்து ஈரோட்டு வீதிகளில் ஊர்வலம் நடத்தினோம். அய்யாவுக்கு அப்போது உண்டான மகிழ்ச்சியின் எல்லையை அன்று நேரடியாகக் கண்டோம். அவரும்கூட வண்டியில் அமர்ந்து வந்திருக்கலாம்.

Annadurai.c.n
Annadurai.c.n

ஆனால், யார் சொல்லியும் கேட்காமல், மேல் துண்டை எடுத்து கறுப்புச் சட்டைக்கு மேல் இடுப்பில் கட்டிக்கொண்டு தேர்வடம் பிடிப்பதுபோல், ரதத்துக்கு முன்பாக நடந்தும் ஓடியும் வருகிறார் அய்யா. அவருக்கு ஈடுகொடுத்து நானும்! அண்ணாவுக்கு ஆச்சரியமான புன்னகை முகம் முழுவதும் சம்பந்தருக்குப் பல்லக்குத் தூக்கிய திருநாவுக்கரசர், அப்போது அண்ணாவின் நினைவுக்கு வந்திருப்பார் போலும்.

"அண்ணா பிரிந்து தனியே போன பின்பு, பதினெட்டு ஆண்டுக் காலம் தி.மு.க-வைக் கடுமையாக விமரிசித்து வந்தார் பெரியார். தி.மு.க-வுக்கு எதிராக காமராஜரையும் காங்கிரஸையும் ஆதரித்தார். காமராஜர் ஆட்சி - அதாவது காங்கிரஸ் ஆட்சியே நீடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், 1967 தேர்தலிலும் காங்கிரஸையே ஆதரித்துப் பிரசாரம் செய்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், 1967 தேர்தலில் தி.மு.கழகம் காங்கிரஸை வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்று ஆளுங்கட்சியானது. கழகம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்று தெளிவான மறுகணமே தம்முடன் நாவலரையும் கலைஞரையும் அழைத்துக் கொண்டு திருச்சி புறப்பட்டார் அண்ணா. பெரியாரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தார். அப்போது நடந்ததையும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு பற்றி அண்ணா என்ன சொன்னார் என்பதையும் கருணானந்தம் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்."'எடுத்த எடுப்பில் பெரியாரை போய்ப் பார்த்ததால் ராஜாஜி வருத்தப்படுவாரே' என்றார் ஒருவர்.

"பெரியார் சென்னை வந்த பின்பு பார்க்கக் கூடாதா, திருச்சிக்குச் சென்று பார்க்க அப்படி என்ன அவசரம்?' என்றார் வேறொருவர், 'என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரே அவர்தான். முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால் அது மனிதப் பண்பே ஆகாது' என்று சொல்லிவிட்டார் அண்ணா. அதுமட்டுமா? 'அவர் என்னுடைய தலைவர், நானும் அவரும் பார்க்கிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கண்டேன். இன்னும் அவரையே தலைவராகக் கொண்டு தான் பணியாற்றி வருகிறேன்' என்றார் அண்ணா!" உடல்நலம் குன்றி, அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட அன்று மருத்துவமனைக்கு வந்தார் பெரியார், அப்போது என்ன நடந்தது என்பதையும் கருணானந்தம் பதிவு செய்திருக்கிறார்.

"பெரியார் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அண்ணாவின் வலது காதருகே குனிந்து, தம் வாயைக் காதில் வைத்து ஏதோ சொன்னார். பிறகு தம் மடியை அவிழ்த்து எதையோ எடுக்க முனைந்தார். அண்ணா கையைக் கலைஞர் இருந்த திசையில் காட்டி. கருணாநிதி கிட்டே சொல்லுங்கய்யா" என்றார் மெல்லிய குரலில். மறுபுறம் நாற்காலியைத் திருப்பி அய்யா, கலைஞரின் கழுத்தில் தன் கையை வைத்து, அவர் தலையை வளைத்து, 'இதிலே இருப்பத்தஞ்சாயிரம் பணமிருக்குது. அண்ணாவுக்கு வைத்தியச் செலவுக்கு வெச்சுக்குங்க" என்றார். "இப்பப் பணம் இருக்குங்க அய்யா! அப்புறம் பார்த்துக்கலாம் நன்றி" எனக் கூறினார் கலைஞர்.- என்று எழுதி அண்ணா - பெரியார் பாசத்தைப் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் கருணானந்தம்.

Annadurai.c.n
Annadurai.c.n

1969-ம் வருடம் ஜனவரி இறுதியில் - அண்ணா மறுபடியும் சிகிச்சைக்காக அடையாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அப்போது அருகிலுள்ள வீரமணியின் இல்லத்தில் தங்கிக்கொண்டு, பெரியார் அடிக்கடி வந்து பார்த்துக் கவலைதேங்கிய முகத்துடன் திரும்பிச் செல்வார் தினந்தோறும்.அண்ணாவின் உயிர் பிரிந்த நாளன்று நடந்ததை புத்தகத்தின் இறுதிப் பகுதியில் எழுதியிருக்கிறார் கவிஞர்.

"2.2.1969 அன்று இரவு தேவைப்பட்டால் உடனே புறப்பட்டுச் செல்லத் தயாராக இருந்தார் பெரியார். வீரமணி வீட்டு மாடியில் படுக்காமல் கார் ஷெட்டிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெரியாரை எழுப்பிய விடுதலை சம்பந்தம். அண்ணாவின் மறைவுச் சேதியைச் சொல்ல. அருகிலிருந்த சுவரில் ஓங்கி அறைந்து, "எல்லாம் போச்சு எல்லாம் போச்சு' என்று புலம்பிய பெரியார், உடனே மணியம்மையாரையும், வீரமணியையும் , சம்பந்தத்தையும் அழைத்துக் கொண்டு அடையாறு மருத்துவமனைக்கு வேனில் வந்து சேர்ந்தார் . அண்ணாவின் சடலம் நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக ஸ்டெரச்சரில் வந்தபோது, வெறித்து நோக்கினார் தந்தை பெரியார். அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, "அய்யா, நாங்க அநாதைகளாயிட்டோம் அய்யா" என்று கலைஞர் கதறி அழுததும்..." என்று எழுதியிருக்கிறார் கருணானந்தம். அதற்கு மேல் எழுதக் கை ஓடாமல் - "இனி எழுத என்னாலியலாது" என்று குறிப்பிட்டு - அப்படியே முடிக்காமல் விட்டுவிட்டார்!

அண்ணாவின் மறைவால் அநாதைகள் ஆனது தி.மு.க-வினர் மட்டும்தானா? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அவர் கற்றுக் கொடுத்த அரசியல் நாகரிகம் யார் தாக்கிப் பேசினாலும் - திருப்பித்தாக்கக் கூடாது; குற்றம் பார்த்தால் சுற்றமே இல்லாமல் போயிடும் என்பன போன்ற உயர்ந்த சீலங்களும் மரபுகளும்கூட - இன்றைய அரசியல் உலகில் ஆதரிப்பாரின்றி அநாதைகளாகப் போய்விட்டன! (மனிதர்கள் வருவார்கள்...)

- சின்னக்குத்தூசி

(16.07.2000 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து...)