Published:Updated:

`கழுகு, ஓநாய்களை வேட்டையாட அரசியலுக்கு வாங்க ரஜினி!’ - வேலூரைப் பரபரப்பாக்கிய போஸ்டர்

வேலூரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்
வேலூரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்

`கழுகுக் கூட்டத்தையும், ஓநாய்க் கூட்டத்தையும் வேட்டையாட அரசியலுக்கு வாங்க ரஜினி’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் வேலூர் முழுவதும் ஒட்டப்பட்டிருப்பதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

`நல்ல நேரம் பார்த்து தேதியும் குறிச்சாச்சு. மக்களைக் கவர வியூகமும் வகுத்தாச்சு. இந்த நவம்பரில் அரசியல் அஸ்திரம் வீசப்போகிறார் ரஜினி’ என்ற தகவலால் காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் சஸ்பென்ஸ் கொடுத்து மௌனம் காக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்தநிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவரது உடல்நிலை தொடர்பாகவும் கடந்த சில நாள்களாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தது.

ரஜினி
ரஜினி

`அந்த அறிக்கை தன்னுடையது அல்ல... ஆனால், அதில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்களும் பொய்யல்ல’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியிருந்தார் ரஜினிகாந்த். இதனால், அப்செட்டாகியிருக்கும் ரசிகர்களும், மாற்றத்தை விரும்பக்கூடிய மக்களும் ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்புவிடுத்து தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டிவருகிறார்கள்.

`ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான்’ என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது. இதே வாசகத்துடன் `நீங்கள் வாங்க ரஜினி. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’ என்று எழுதப்பட்ட போஸ்டர்களும் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியிருக்கின்றன. இந்தநிலையில், வேலூர் மாவட்டத்திலும், `பூ பாதையா... சிங்கப் பாதையா?’ என்று ரஜினி ஸ்டைலில், நாணயத்தைச் சுழற்றிவிட்டிருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

வேலூரில், ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
வேலூரில், ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

`மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் கழுகுக் கூட்டத்தையும், ஓநாய் கூட்டத்தையும் வேட்டையாட சிங்கப் பாதையில்தான் செல்ல வேண்டும். எங்கள் ஓட்டு ரஜினி ஒருவருக்கே!’ என்ற அதிரடியான வாசகம் அடங்கிய போஸ்டர்கள் வேலூரில் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. `இப்படிக்கு மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் வேலூர் பொதுமக்கள்’ எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த நபர்களிடம் சென்று கேட்டபோது, ``வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுனு போட்டால் எங்கள் தலைவருக்கு மட்டுமே போடுவோம். இல்லைனா, வாக்குச்சாவடி பக்கமே போக மாட்டோம். தலைவர் அரசியலுக்கு வரணும். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படணும்’’ என்றனர் அதிரடியாக.

அடுத்த கட்டுரைக்கு