Published:Updated:

``கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன்.. இதுதான் தி.மு.க” - விளாசி தள்ளிய எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி

அண்ணா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்றுப் பேசினார். அந்த உரையின் ஹைலைட்ஸ்

``கமிஷன் - கலெக்‌ஷன் - கரப்ஷன்.. இதுதான் தி.மு.க” - விளாசி தள்ளிய எடப்பாடி!

அண்ணா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பங்கேற்றுப் பேசினார். அந்த உரையின் ஹைலைட்ஸ்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் செப்டம்பர் 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி தி.மு.க சார்பில் விருதுநகரில் முப்பெரும் விழா நடைபெற, அ.தி.மு.க சார்பில் சென்னை வடபழனி முருகன் கோயில் அருகே தெருமுனைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டக் கழகம் சார்பில், மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் நடைபெற்றப் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். தி.நகர் சத்யா, விருகை ரவி, ஆதிராஜாராம், ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களும், தலைமைக்கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்
அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்

எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ``பெயரில் அண்ணா, கொடியில் அண்ணா இருப்பதால், பேரறிஞர் அண்ணாவுக்குப் பெருமை சேர்ப்பது அ.தி.மு.க மட்டுமே. 63 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஏழை மக்கள் வயிறார உண்ண அம்மா உணவகத்தைக் கொடுத்தவர் ஜெயலலிதா. தற்போதைய தி.மு.க ஆட்சியில் அதைக்கூட மூடப்பார்க்கிறார்கள். அப்படி அம்மா உணவகங்களை மூடினால் வரக்கூடியத் தேர்தலில் படுதோல்வியைச் சந்திப்பார்கள். டெபாசிட் கூட வாங்க முடியாது.

எடப்பாடி பேச்சு
எடப்பாடி பேச்சு

அதேபோல, திருக்கோயிலில் அன்னதானம் கொடுத்ததும் ஜெயலலிதா, பள்ளிக் குழந்தைகளுக்கு 14 வகையான பொருட்கள் கொடுத்ததும் ஜெயலலிதா. அ.தி.மு.க ஆட்சியில்தான் தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதிகமான கல்விச் சாலைகள் திறக்கப்பட்டது அ.தி.மு.க ஆட்சிகளில்தான். பள்ளி மற்றும் உயர்கல்வியில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை 2019-லேயே அடைந்துவிட்டோம் நாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க ஆட்சியில்தான் 7 சட்டக்கல்லூரிகளையும், 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களையும், 4 பொறியியல் - 11 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் கொண்டுவந்தோம். கால்நடைப் பூங்கா, கால்நடை மருத்துவமனையும் எங்களது ஆட்சியில் அமைத்ததுதான். மாணவர்களின் எதிர்கால தேவைக்கு உதவ, தொலைநோக்குப் பார்வையுடன் அம்மா லேப்டாப் திட்டம் கொண்டுவந்தார். ஒரு லேப்டாப் விலை 12,000 ரூபாய். அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் கொடுத்திருக்கிறோம். அதையும்கூட இந்த ஆட்சியில் நிறுத்திவிட்டனர். ஏழை மக்களின் திருமணக் கனவை நினைவாக்கிய தாலிக்குத் தங்கம் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். மானிய விலையில் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினோம், அதையும் நிறுத்திட்டாங்க. முதியோர் உதவித்தொகை பாதிபேருக்கு நிறுத்திவிட்டு, முதியவர்கள் வயிற்றிலும் அடிக்கும் ஆட்சி தி.மு.க-தான்.

வடபழனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி
வடபழனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி

பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத் தொகை 1,000 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். அதை நம்பித்தான் பெண்கள் முக்கால்வாசிப்பேர் வாக்களித்தனர். இன்றோ, `தகுதியானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்பின்னர்தான் நிறைவேற்றுவோம்’ என்கிறார்கள். காஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் மாதந்தோறும் கொடுப்பதாகவும், கல்விக்கடனை ரத்துசெய்வதாகவும், நகைக்கடனை ரத்துசெய்வதாகவும் தெரிவித்தனர். ஆனால், எதுவுமே செய்யாததுதான் திராவிட மாடல்.

ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அரசு ஊழியர்கள் மத்தியில் பேசினார் ஸ்டாலின். அப்போது, ‘உங்களால்தான் ஆட்சிக்கு வந்தேன்’ என்கிறார். அப்படியென்றால் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வரவில்லை, தில்லுமுல்லு செஞ்சுதான் முதல்வர் ஆகியிருக்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். தேனொழுகப் பேசினாலும், அரசு ஊழியர்களுக்கும்கூட பெப்பே காட்டிவிட்டார். படித்தவன், படிக்காதவன் என பாரபட்சமின்றி ஏமாற்றியிருக்கிறார் ஸ்டாலின்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

கொரோனா காலத்திலிருந்து மீண்டு இப்போதுதான் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், சொத்து வரியை ஏற்றிவிட்டனர். இது தி.மு.க அரசின் முதல் போனஸ். இரண்டாவது போனஸ், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மின்கட்டண உயர்வு. 12% முதல் 52% வரை உயர்ந்திருக்கிறது. இதுதவிர, ஆண்டுக்கு 6 சதவிகிதம் கட்டணத்தை 2026-ம் ஆண்டுவரை உயர்த்திக்கலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சாதகமாக அம்சங்களை மட்டும் விளம்பரமாகக் கொடுத்திருக்கிறார். அதில், தமிழகம் ஒவ்வொரு மின்சார ஸ்லாப்களிலும் எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தாலும், ஒவ்வொரு ஸ்லாபிலும் நமக்குக் கீழும் பல மாநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கிறார்கள். நமக்கு மேலுள்ள மாநிலங்களைச் சுட்டிக்காட்டும் அமைச்சர், ஏன் கீழுள்ள மாநிலங்களைப் பார்ப்பதில்லை?

மா.சு
மா.சு

அமைச்சர் மா.சு வாய்த் திறந்தால் பொய்தான் சொல்வார். 2010-ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றது. 21.12.2010 அன்றுதான் நீட் என்கிற வார்த்தையே அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, தி.மு.க-வைச் சேர்ந்த காந்திசெல்வன்தான் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். அரசு ஜெஸட்டில் இவையனைத்தும் இருக்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு, பொய் மட்டுமே சொல்லி வருகிறார்கள். நீட்டில் இருந்து தப்பிப்பது சிரமம் என்பதை அறிந்துதான், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொன்டுவந்து மாற்று வழியை நான் கண்டுபிடித்தேன். அதன்மூலம், ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நனவாகிறது.

கட்சிவிட்டு கட்சி மாறுபவர்கள் விபச்சாரி என்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர். அங்கபோனா அப்படித்தான் மரியாதை கிடைக்கும். இதனைக் கேட்டுக்கொண்டு இன்னுமா இங்கிருந்து சென்றவர்கள், அங்கு இருக்க வேண்டும்?

எடப்பாடி
எடப்பாடி

அமைச்சர்தான் அப்படியென்றால், எம்.பி ஆ.ராசா இன்னும் மோசம். `இந்துக்கள் எல்லாம்...’ என்று கீழ்த்தரமான வார்த்தையைச் சொல்லியிருக்கிறார். அந்த வார்த்தை ஸ்டாலின் குடும்பத்துக்கும், பொருந்தும்தானே ஆ.ராஜா அவர்களே? இன்னொரு அமைச்சர் ஒருவர், மதுரை மூர்த்தி 30 கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமண விழாவை நடத்தியிருக்கிறார். எங்கிருந்து வந்தது அவ்வளவு பணம்? எல்லாம் கடந்த ஒன்னரையாண்டுகள் ஊழல் செய்து குவித்த பணம்தான். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் இவர்கள் எல்லோரும் தோலுரிக்கப்படுவார்கள். தி.மு.க-வின் கொள்கை, கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன் மட்டுமே!

பொதுக்கூட்டத்தில் பேசும் எடப்பாடி
பொதுக்கூட்டத்தில் பேசும் எடப்பாடி

தி.மு.க-வைப் பொறுத்தவரை பொய் வழக்குகள் போடுவதே வாடிக்கை. எத்தனை முறைதான் ரெய்டு பண்ணுவீர்கள்? எத்தனை முறை செய்தாலும் ஒன்றும் கிடைக்காது. ஏனெனில், இருக்கிற சொத்துகள் எல்லாம் தி.மு.க-காரர்களிடம் தானே இருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த 13 முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதனை முதலில் எடுத்து விசாரிக்கலாமே. மேலும், எந்தப் பிரச்னை வந்தாலும், எந்தத் திட்டமானாலும் குழு அமைத்துவிடுகிறார் ஸ்டாலின். இதுவரை 38 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது குழு அரசாங்கம். அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், அதிகாரிகள் என யாரையும் நம்பாமல் குழுவை அமைத்துவிடுகிறார் ஸ்டாலின். அதோடு அந்தப் பிரச்னையை மூடி ஓரமாக வைத்துவிடுகிறார்கள். இந்தக் குழுக்கள் எல்லாம் என்ன செய்தன? என்பதை குழுவுக்கெல்லாம் இன்னொரு குழு போட்டு ஆராய வேண்டும்போல!

சில சுயநலவாதிகள்தி.மு.க-வோடு இணைந்துகொண்டு நம்மை வீழ்த்தப்பார்க்கிறார்கள். அவர்கள் மொத்தமாக காற்றிலே கரைந்துபோவார்கள். அவர்களுக்குத் தொண்டர் பலம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். எங்கிருக்கிறது தொண்டர் பலம்? இங்க வந்து பாரு, இங்கதான் இருக்கிறது தொண்டர் பலம். அவர்கள் உழைப்பவர்கள் அல்ல, யாராவது உழைத்தால் அவர்களுடன் இருந்துகொண்டு சுரண்டுவதுதான் அவர்களின் வேலை.

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வில் தொண்டன் தான் தலைமை தாங்குவான். எடப்பாடி இல்லையெனில் இந்த மேடையில் இருப்பவர்களில் யார் வேண்டுமானாலும் தலைமைப் பதவிக்கு வரலாம். அவர்களைத் தொடர்ந்து வேறு யார் வேண்டுமானாலும் வரலாம். எனக்குப் பின்னால் யார் வேண்டுமானாலு வரலாம் என்று நான் சொல்கிறேன், எங்கே ஸ்டாலின் அவர்களே நீங்கள் இப்படிச் சொல்ல முடியுமா?தி.மு.க ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் உள்ளவர்கள் இயக்குநர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஷேர்-ஹோல்டர்கள். வரவு செலவு பார்க்கிறது மட்டும்தான் தி.மு.க-வின் வேலை. நாட்டு மக்களை கவனிப்பது இல்லை.

கருணாநிதி, ஸ்டாலின்
கருணாநிதி, ஸ்டாலின்

எடப்பாடி டெம்பரரி தலைவர் என்கிறார் ஸ்டாலின். ஆனா ஸ்டாலின் தான் செயல் தலைவராக இருந்தபோது, டெம்பரரியாக இருந்தவர். உங்களுடைய அப்பாவே உங்களை நம்பிப் பொறுப்பைக் கொடுக்கவில்லை. நான் அப்படியல்ல தொண்டர், நிர்வாகிகள், பொதுக்குழுவினர் ஆதரவைப் பெற்று வந்திருக்கிறேன். இப்பதவி டெம்பரரி அல்ல, பெர்மனண்ட்! நாங்க அ.தி.மு.க-வினர் வெகுளி. அவர்கள் தி.மு.க-வினர் விஞ்ஞான முறையில் எல்லாவற்றையும் மறைக்கத் தெரிந்தவர்கள். அதை வேண்டுமானால் பாராட்டலாம். எனினும், அண்ணா, எம்ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மும்மூர்த்திகள்தான் இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு சரித்திரம் படைத்தது அ.தி.மு.க மட்டுமே. எங்களுடையத் திட்டங்களில்தான், தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுள்ளது!” என்று தி.மு.க-வையும், பன்னீரையும் ஒருசேர ஒரு மணிநேரமாகத் தாக்கிப் பேசினார் எடப்பாடி.

கூட்டம் முடியும் தருவாயில் தொண்டர்கள் சிலர் எடப்பாடியை அ.தி.மு.க-வின் மூன்றாம் வாரிசு என்று கோஷம் எழுப்பியபடி வழியனுப்பி வைத்தனர்.

எடப்பாடிக்கு மாலை அணிவித்த நிர்வாகிகள்
எடப்பாடிக்கு மாலை அணிவித்த நிர்வாகிகள்

முன்னதாக, எடப்பாடியை வரவேற்க, வடபழனி சிக்னல் அருகே பீமாஸ் ஓட்டல் முதல், அபிகா எம்பையர் ஓட்டல் எதிரில் வரை சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு, அ.தி.மு.க கொடிகளும், வாழைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. செண்டை மேளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து எடப்பாடியை வரவேற்றனர். எடப்பாடி பேசி முடித்ததும், நிர்வாகிகள் அவருக்கு செங்கோல், சால்வைகள், ஆளுயர மாலை கொடுத்து அமர்க்களப்படுத்தினர்.

அட்டை
அட்டை

அ.தி.மு.க லோக்கல் நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, “தி.நகர் சத்யாவின் மாவட்டக் கழகம் சார்பில் நடைபெற்றபோதும், சென்னையிலுள்ள அத்தனை மாவட்டச் செயலாளர்கள் தங்களது ஏரியாக்களில் இருந்து மக்களை வேன்களில் கொண்டுவந்தனர். முருகன் கோயில் அருகே பழனியாண்டவர் கோயில் தெருவை முழுமையாக ஆக்கிரமித்து, 2000-க்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டன. ” என்றனர்.