Published:Updated:

அக்னிபத்: ``ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்காகவே இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி!" - பாலகிருஷ்ணன் தாக்கு

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன்

`பா.ஜ.க உள்நோக்கத்துடன் இவர்களுக்கு ராணுவப் பயிற்சியைக் கொடுத்து தங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்த்து மதவெறி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக முயல்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.' - பாலகிருஷ்ணன்

அக்னிபத்: ``ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்காகவே இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி!" - பாலகிருஷ்ணன் தாக்கு

`பா.ஜ.க உள்நோக்கத்துடன் இவர்களுக்கு ராணுவப் பயிற்சியைக் கொடுத்து தங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்த்து மதவெறி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக முயல்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.' - பாலகிருஷ்ணன்

Published:Updated:
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன்

ராமநாதபுரத்தில் இன்று மாலை நடைபெறும் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ``குடியரசுத் தலைவர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். பா.ஜ.க நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இந்த தேர்தல் வெற்றி என்பது அவ்வளவு எளிதானதல்ல... இன்று பா.ஜ.க-வில் இருப்பவர்களே பா.ஜ.க-மீது அவநம்பிக்கையிலும், அதிருப்தியிலும் இருக்கின்றனர். வாக்கு முடிவு வரும்போதுதான் வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு என்பது தெரியவரும். பழங்குடியினப் பெண்ணை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம் என அவர்கள் சொல்வது பொருத்தமற்ற வாதம். அவர்கள் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தலாம், நாங்கள் ஆர்.எஸ்.எஸ் என்கிற சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுகிற இயக்கம். கண்டிப்பாகத் தமிழ்நாட்டில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அ.தி.மு.க, பா.ஜ.க-வை-விட மூன்று மடங்கு அதிக வாக்குகள் கிடைக்கும்.

அதிமுக  ஒற்றைத் தலைமை
அதிமுக ஒற்றைத் தலைமை

அதேபோல் இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டம் என்பதைக் கொண்டுவந்து இளைஞர்களை ராணுவத்தில் தேர்வு செய்து, நான்கு ஆண்டுகள் மட்டும் அவர்கள் ஒப்பந்தப்பணி செய்வார்கள். அதற்குப்பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனச் சொல்வது ராணுவத்தையே ஒப்பந்த படையாக மாற்றுவது ஆபத்தானது. ராணுவத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சிபெற்ற அவர்கள், வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு சமுக விரோத கும்பலுடன் சேர்ந்து தீய செயல்களில் ஈடுபட்டால், நாட்டில் எப்படிப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை மத்திய அரசு கவனிக்கத் தயாராக இல்லை. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கக் கூடாது எனக்கூறி வருகிறார்.

பின்னர் ராணுவத்தில் மட்டும் வெறும் நான்காண்டுகள் மட்டும் ஏன் தற்காலிக வேலை வழங்கவேண்டும். அவர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டால் அதனை அனைவரும் வரவேற்கிறோம். ஆனால் பா.ஜ.க உள்நோக்கத்துடன் இவர்களுக்கு ராணுவப் பயிற்சியைக் கொடுத்து தங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்த்து மதவெறி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக முயல்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க-வில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது அதிகார போட்டி. மக்கள் நலன்மீது அ.தி.மு.க கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்னை நடக்கிறது. மத்தியில் உள்ள மோடி அரசை எதிர்த்து அனைவரும் பேராடிவரும் சூழலில், அ.தி.மு.க-வில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்டு, அவர்கள் காலைப் பிடித்துக் கெஞ்சுகிற நிலைமையில் இருக்கின்றனர். நாடும், மக்களும் எப்படிப் போனால் எங்களுக்கென்ன, எங்களுக்கு அதிகாரம்தான் முக்கியம் என்ற அதிகார போட்டிதான் நடந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ஜெயலலிதா, அவருடைய பெயரில் நடைபெறும் கட்சியை வைத்துக்கொண்டு இன்று பா.ஜ.க-வுடன் சேர்ந்துகொண்டு ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா எனப் போட்டிப் போடுவது யாரைப் பாதுகாக்கும் என்பதை அ.தி.மு.க-வினர் சிந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டு மக்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள், அந்த பிளவை பயன்படுத்தி பா.ஜ.க அரசியல் ஆதாயம் தேடிவருகிறது. குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல இரண்டு பக்கமும் தூண்டிவிட்டு அ.தி.மு.க-வை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க-வின் இந்த முயற்சி வெற்றி பெறாது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் அடுத்த 2024 தேர்தலில் 25 எம்.பி-க்கள் வெற்றி பெறுவோம் எனப் பேசி வருகிறார். ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறமுடியாமல் 85 சதவிகிதம் இடங்களில் டெபாசிட்கூட வாங்காத பா.ஜ.க, எம்.பி தேர்தலில் 25 இடங்களைக் கைப்பற்றுவோம் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ள மத்திய மோடி அரசை எப்படி வீழ்த்துவது எனத் தமிழ்நாடு மக்கள் போராடி வருகின்றனர். இப்போது வந்து நாங்கள் இத்தனை இடங்களைக் கைப்பற்றுவோம் என்பது மிகுதியான கற்பனை.

தமிழ்நாட்டில் காவல் நிலைய இறப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதனை கட்டுப்படுத்துவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டறிந்து இதுபோன்ற காவல் நிலைய இறப்புகள் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த போதை பழக்கம்தான் சமுகத்தில் பல சீரழிவுகளை ஏற்படுத்துகிறது. சமீபத்தில்கூட ராமேஸ்வரத்தில் மீனவப்பெண் போதை வாலிபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவர் குடும்பத்துக்குத் தமிழ்நாடு அரசு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் உள்ள வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் பெண்கள்மீதான, குழந்தைகள்மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அடுத்த மாதம் பெண்கள்மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பிரசாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம்.

தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. ஆனால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவது போன்ற முக்கியமான வாக்குறுதிகளை படிப்படியாக விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்களின் வாழ்வாதார பிரச்னைக்கு பாதிப்பு என்றால் பா.ஜ.க-வாக இருந்தாலும், தி.மு.க-வாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்.

தி.மு.க அரசு ஊழல் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது. நடவடிக்கையும் எடுத்தார்கள், ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை... அந்த வழக்குகள் அப்படியே நிற்கின்றன. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட பத்து உயரதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அரசு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் காலதாமதப்படுத்துகிறது. அது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். ஊழல் அமைச்சர்கள்மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 13 ஆயிரம் ஆசிரியர்களைத் தற்காலிகமாக பணியமர்த்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்காலிக பணி என்பது நியாயம் கிடையாது. வெறும் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் ஆசிரியர் எப்படி கல்வியை நியாயமாகக் கற்றுத்தருவார். ஏற்கெனவே அவர்கள் அனைத்து தேர்வுகளும் முடித்துத்தான் வந்துள்ளனர். ஏன் அவர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்தக்கூடாது. அரசு கல்வித்துறையில் இதுபோல் செய்யக்கூடாது.

தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தப்பணியில் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு அரசு ரூபாய் 600 சம்பளமாகக் கொடுக்கிறது. ஆனால் இடையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் அவர்களுக்கு 300 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துவிட்டு ஊழல் செய்கின்றனர். அ.தி.மு.க அரசு கொண்டுவந்த இந்த ஒப்பந்ததாரர்கள் நியமனத்தை ஏன் தி.மு.க அரசும் கடைப்பிடிக்கிறது எனத் தெரியவில்லை. ஒப்பந்ததாரர்கள் இன்றி நேரடியாகச் சம்பளத்தை வழங்க வேண்டும்" என்றார்.