Published:Updated:

`` `கத்தி', `காலா', `சர்கார்' நாயகர்கள் பேசியது கம்யூனிசம்தானே!" - சி.மகேந்திரன் பேட்டி

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

கம்யூனிஸ்ட்டுகளோ திறமை சார்ந்தவர்களோ திரைத்துறைக்குள் வராத வகையில், திரைப்படம் என்பதே பணம் சார்ந்த முதலாளிகளின் துறையாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது.

பொதுவுடைமைக் கருத்துகளை கலை, இலக்கியம் வழியே சாமானியர்களிடம் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆரம்பக்காலங்களில் தமிழகத்திலும் கலை, இலக்கியம் வழியே தீவிரமாகச் செயல்பட்டார்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை. அதேசமயம் கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் அவர்களின் கலை, இலக்கியச் செயல்பாடுகளின் வீரியம் குறையவில்லை. இதுகுறித்தெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரனிடம் உரையாடினோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/34Yy1ar

''திராவிடக் கருத்துகளைப் பேசும் படங்களுடன் கம்யூனிசச் சித்தாந்தப் படங்கள் போட்டியிட முடியவில்லையா?''

''ஹீரோயிசத்தை முன்னிறுத்தி படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே எழுத்தாளர் ஜெயகாந்தன், சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் படங்களை எடுத்தார். ஆனால், இந்தப் புது முயற்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல இங்கு உள்ள கம்யூனிஸ்ட்டுகளால் முடியவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தி, கம்யூனிசக் கருத்துகள்கொண்ட திரைப்படங்களை உருவாக்கி, புதியதோர் அரசியல் வட்டத்தை உருவாக்கிவிட்டனர். இந்தப் படங்கள் கம்யூனிசக் கருத்துகளைப் பேசினவே தவிர, கம்யூனிசச் சித்தாந்தத்தை மக்களிடம் சேர்க்கவில்லை. இதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யத் தவறிவிட்டார்கள்.''

இந்தியாவிலேயேகூட, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்துவந்த கேரளம், மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலை, இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள்

''திரைப்படங்களில் கருத்து பரப்புவதைவிடவும் போராட்டங்கள் வழியே மக்களைச் சென்றடைய முடியும் எனக் கருதிவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள்?''

''கம்யூனிஸ்ட்டுகளோ திறமை சார்ந்தவர்களோ திரைத்துறைக்குள் வராத வகையில், திரைப்படம் என்பதே பணம் சார்ந்த முதலாளிகளின் துறையாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது. அடுத்ததாக கம்யூனிசக் கருத்துப் பிரசாரம் என்பதைவிடவும், மக்களுக்கான நல்ல சினிமாக்களைக் கொண்டு வருவதில் இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம்காட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். இதில் ஆழமாக நின்று போராடிப் பார்த்தவரென்றால், அது தோழர் ப.ஜீவா மட்டுமே.''

''கலை, இலக்கியத்தில் தோழர் ஜீவாவின் பங்களிப்புகள் தமிழகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின?''

''1960-ல் ஜீவா தொடங்கிய தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் வீச்சு, ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. திராவிட இயக்கங்களின் கருத்தாக்கங்களுக்கு எதிராக, பெரியதொரு கேள்வியை ஏற்படுத்தியது. உதாரணமாக, கம்ப ராமாயணத்தை 'காமரசம்' என்று அறிஞர் அண்ணா எழுதினார். ஆனால், அதே கம்ப ராமாயணத்தில் உள்ள இலக்கியச்சுவை குறித்துப் பேசுவதற்காகவே கம்பன் விழாவில் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் ப.ஜீவா. இதன் பிறகுதான் 'காமரசம்' என்று விமர்சித்த தி.மு.க-வினரே கூட, வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் கம்பருக்கு சிலை அமைக்க நேரிட்டது.

சி.மகேந்திரன்
சி.மகேந்திரன்

''கலை, இலக்கியத்தை கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியை தமிழக கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்திருக்கவில்லையா?''

''ரஷ்யாவில், கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே முதல் வேலையாக நாட்டுப்புறப் பாடல்கள், திரைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையுமே கையில் எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் அளித்தார்கள். இன்றைக்கும் திரைப்படம் பற்றிய அடிப்படைத் தேவைகளுக்கான சிறந்த நூல்கள் என்றால், அது கம்யூனிச நாடாக ரஷ்யா இருந்தபோது எழுதப் பட்ட நூல்கள்தான்.

இந்தியாவிலேயேகூட, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்துவந்த கேரளம், மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலை, இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். தமிழ்நாட்டிலும் இப்படியான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என, பெருமுயற்சி களை ஜீவா செய்தார். ஆனாலும், அவரின் பங்களிப்பை இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. புரட்சி அல்லது மாற்றத்துக்கு கலை, இலக்கியம் வழியான பிரசாரப் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.''

''ஆனாலும் இங்கே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனதானே?''

''உலகமயமாக்கல் பாதிப்பு, நீர், நில ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, ஊழல், லஞ்சம் என அனைத்து பாதிப்புகளையும் எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு கருத்தைச் சொல்லவேண்டும் என்றால், அது கம்யூனிசக் கருத்துகளாகத்தான் இருக்கின்றன. எனவே, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக்கூடிய திரைப்பட கதாநாயகர்கள் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்தைத்தான் வசனமாகப் பேசுகிறார்கள். உதாரணமாக 'ஜோக்கர்', 'கத்தி', 'காலா', 'அறம்', 'அருவி', 'சர்கார்', 'அசுரன்' உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். இயக்குநர் ஜனநாதன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள். குறிப்பாக, ராஜுமுருகன் கம்யூனிச ஐகானாகவே தனித்துத் தெரிகிறார்.'' - விரிவான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > "கம்யூனிசம் இல்லாமல் கலை, இலக்கியம் இல்லை!" - சி.மகேந்திரன் நேர்காணல் https://www.vikatan.com/government-and-politics/politics/communist-senior-leader-c-mahendran-inverview

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு