Published:Updated:

`சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல்...'- மருத்துவச் சிகிச்சையில் நல்லகண்ணு

நல்லகண்ணு
நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சளி, காய்ச்சல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தந்திருக்கும் தகவல்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்.

நாடு முழுக்க கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிவரும் சூழலில், 95 வயதான தோழர் நல்லகண்ணு திடீரென உடல்நிலைக் கோளாறு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நல்லகண்ணு தன் துணைவியாருடன்
நல்லகண்ணு தன் துணைவியாருடன்

நல்லகண்ணு, கடந்த சில நாள்களாக சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்திருக்கிறார். இந்தநிலையில், நேற்று இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. `கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை அறிந்துகொள்வதற்கான பரிசோதனையும் செய்யப்பட்டிருக்கிறது’ என்கின்றனர் மருத்துவர்கள்.

புதுக்கோட்டை: கணவன், மனைவி தகராறு; திடீர் மரணம்! - மகள் இறப்பில் சந்தேகிக்கும் பெற்றோர்

''தோழர் நல்லகண்ணுவுக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை உண்டு. எனவே, சாதாரண சளி, காய்ச்சல் பிரச்னைகளாக மட்டுமே இருக்கலாம். ஆனால், புதிதாக மூச்சுத்திணறல் பிரச்னையும் ஏற்பட்டிருப்பதுதான் கொரோனா தொற்றால் தோழர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்ற சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில், இந்த கொரோனா காலகட்டத்திலும்கூட மக்கள் பிரச்னை, கட்சிப் பணிகள் என்று பலரும் நல்லகண்ணு தோழரை நேரில் சந்தித்துப் பேசி வந்திருக்கிறார்கள்'' என்று அச்சம் தெரிவித்தனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

தோழர் நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். தற்போது, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தைக்குத் துணையாக உடனிருக்கிறார். தோழர் நல்லகண்ணு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களைத் தவிர உறவினர்கள், கட்சித் தோழர்கள் என வேறு யாரும் சந்திக்க அனுமதி இல்லை என்கின்றனர்.

`தூங்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி எங்களைப் பத்தி யோசிங்க!' - கண்ணீரில் ஆனைமலைப் பழங்குடி மக்கள்

நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் குறித்துப் பேசும் மருத்துவர்கள், ``நேற்றிரவு மூச்சுத்திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது. அதன் பிறகு, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. ரத்த அழுத்தப் பரிசோதனையும் செய்யப்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

இது கொரோனா காலகட்டம் என்பதால், சளி மாதிரியும் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது இரவுக்குள் இந்தப் பரிசோதனையின் முடிவு என்னவென்று தெரியவரும். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நல்லகண்ணு, தற்போது நல்ல ஆரோக்கியமான நிலையிலேயே இருந்துவருகிறார்'' என்று தைரியம் அளிக்கின்றனர்.

இந்தநிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``நல்லகண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை’’ என்ற தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு