Published:Updated:

போராட்ட குணத்தை இழந்துவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள்?

கம்யூனிஸ்ட்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
கம்யூனிஸ்ட்டுகள்

பொதுவுடைமை கட்சியைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி. தேர்தல் முடிந்த பின்னர் கூட்டணிக்கும், மக்கள் பிரச்னைக்காகப் போராடுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது.

போராட்ட குணத்தை இழந்துவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள்?

பொதுவுடைமை கட்சியைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி. தேர்தல் முடிந்த பின்னர் கூட்டணிக்கும், மக்கள் பிரச்னைக்காகப் போராடுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது.

Published:Updated:
கம்யூனிஸ்ட்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
கம்யூனிஸ்ட்டுகள்

ஆட்சிப் பொறுப்பில் யார் இருந்தாலும் மக்களுக்கான உரிமையை மீட்டெடுக்கும் போராட்டக் களத்தில், ஒரு குரல் எப்போதுமே கம்பீரமாக ஒலிக்கும்... அது கம்யூனிஸ்ட்டுகளின் குரல்! தனது ஆதரவோடு அமைந்த ஐ.மு.கூ அரசு (2004-2009) தாக்கல் செய்த பட்ஜெட்டையும், தவறுகளையும்கூட கடுமையாக விமர்சித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

இப்போது, தி.மு.க ஆட்சியில் அந்த போராட்டக் குணத்தை அடியோடு இழந்துவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள் என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

புதிய ஓய்வூதியத் திட்டம்

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று தி.மு.க கொடுத்த வாக்குறுதியை நம்பி, கடந்த 2021 தேர்தலில் பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளித்தன. ஆனால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ‘பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியம் இல்லை’ என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

போராட்ட குணத்தை இழந்துவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள்?

இதைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் 1,500 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் அரசைக் கடுமையாக விமர்சித்தார். பதிலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கம்னியூஸ்ட் கட்சியினரை மிகக் கடுமையாக விமர்சித்தார். சில நாள்களிலேயே, “பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை என்று முதல்வர் இன்னும் கூறவில்லை. முதல்வரின் முடிவுக்கு அமைச்சர் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். எனவே, அது குறித்துப் பேசுவதும், கருத்து தெரிவிப்பதும் நன்றாக இருக்காது” என்று தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவந்தார் கே.பாலகிருஷ்ணன். கட்சியைப்போலவே கம்யூனிஸ்ட் சங்கங்களும் பின்வாங்க, அப்பிரச்னையே நீர்த்துப்போனது.

மீண்டும் தவறு செய்கிறார்கள்!

அ.தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டபோது, மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்திய தோழர்கள், தி.மு.க ஆட்சியில் சொத்து வரி உயர்வின்போது கண்டன அறிக்கையோடு கடமையை முடித்துக்கொண்டனர். மின்வாரியத்தில் தற்காலிகப் பணியாளர் நியமன அறிவிப்பை அ.தி.மு.க அரசு வெளியிட்டபோது புயலாகச் சுழன்றடித்த கம்யூனிஸ்ட்டுகள், அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்பை தி.மு.க அரசு வெளியிட்டபோது, தென்றலாகக் கடந்து போய்விட்டார்கள்.

மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட, தாலுகா, கிளை அளவில்கூட மக்கள் பிரச்னைக்காக தினமும் ஏதேனும் ஓர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதுதான் கம்யூனிஸ்ட் பாணி. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டில் அந்தப் போராட்டங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஏன் இந்தத் தயக்கம்?

இது தொடர்பாக சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ-வும், தற்போது அ.தி.மு.க-வில் இருப்பவருமான அண்ணாதுரையிடம் கேட்டபோது, “பொதுவுடைமை கட்சியைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி. தேர்தல் முடிந்த பின்னர் கூட்டணிக்கும், மக்கள் பிரச்னைக்காகப் போராடுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. கடந்தகாலத்தில் கூட்டணிக்காக மக்கள் பிரச்னையில் சமரசம் செய்ததால்தான், அது தனது செல்வாக்கை இழந்தது. எனவே, இனி அப்படிச் செய்யக் கூடாது என்று முடிவும் செய்யப்பட்டது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம், லாக்அப் டெத், சொத்து வரி உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு, வட்டி மானியக் குறைப்பால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை போன்றவற்றுக்காக பெரிதாகப் போராடவில்லை. குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்குப் பட்டா கொடுக்க வேண்டும் என்பதே பொதுவுடைமைக் கட்சிகளின் கொள்கை. ஆனால், சென்னை கே.பி.பார்க் விவகாரத்தில் தனிநபர் செய்த போராட்டத்தில்தான் பொதுவுடைமைக் கட்சி பெயர் வாங்கியது. உழைக்கும் மக்களுக்கான கட்சியாக இருக்கும் பொதுவுடைமைக் கட்சிகள், தேர்தலை மட்டுமே மனதில்வைத்து தி.மு.க-வுடன் சமரசம் செய்துவிட்டு பா.ஜ.க-வை காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல” என்றார்.

முத்தரசன், கனகராஜ், அண்ணாதுரை
முத்தரசன், கனகராஜ், அண்ணாதுரை

இது குறித்து சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் கனகராஜிடம் கேட்டபோது, “பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வைவிட நாங்கள் அதிகப்படியான போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். சென்னை கே.பி.பார்க் விஷயத்தில், மாநில அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். தற்காலிகப் பணியிடங்களை நாங்கள் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. அதேநேரத்தில், அரசு கால அவகாசம் கேட்டிருப்பதால்தான், போராட்டம் நடத்தவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, நீண்டகாலப் பிரச்னை. அதை ஒரே போராட்டத்தில் வாங்கிவிட முடியாது. கூட்டணியில் இருப்பதால், எங்கள் போராட்டப் பாதை மாறவில்லை, மாறவும் மாட்டோம்” என்றார் உறுதியான குரலில்.

``மார்க்சிஸ்ட்டோடு ஒப்பிட்டால், இந்திய கம்யூனிஸ்ட் சுத்தமாகப் போராடவில்லையே?’’ என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டோம். “தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உரசல் ஏற்படுமா என்று வகுப்புவாத சக்திகள் காத்திருக்கின்றன. அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தி.மு.க உறுதியாக இருப்பதால், அவர்களுடன் இணைந்து நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் மீதான அக்கறையில், போராட்டக் குணம் குறைந்துவிட்டதாகக் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது போராடிய விஷயங்களையும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதையும் அவர்களாகவே நிறைவேற்றிவருவதால், பல பிரச்னைகளை நாங்கள் பேசவேண்டிய அவசியமில்லாமல் போய்விடுகிறது. தி.மு.க-வுடன் உறவு நீடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தற்காலிகப் பணி நியமன விவகாரத்திலும், ஓய்வூதியப் பிரச்னையிலும் களத்தில் செய்யவேண்டிய கோரிக்கைப் போராட்டத்தை முதல்வரிடமே நேரடியாக வைக்கிறோம்” என்றார்.

கூட்டணி முக்கியம்தான்... அதைவிட முக்கியம் கொள்கை!