Published:Updated:

`பொங்கல் பரிசும், விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணமும் போதுமானதாக இல்லை!' - சொல்கிறார் கிருஷ்ணசாமி

பொங்கல் பரிசு என அறிவித்துவிட்டு, வெறும் பச்சரிசி மட்டும் கொடுத்தால், அது பொங்காது. குறைந்தது ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500 வழங்கினால் மட்டுமே இன்று இருக்கக்கூடிய சூழ்நிலைக்குப் போதுமானதாக இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில், கோவில்பட்டியைத் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும், கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய கூடுதல் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ``வடகிழக்குப் பருவமழை காரணமாகக் கடந்த 15 நாள்களாகப் பெய்த பரவலான மழையால் சென்னை, கன்னியாகுமரி, வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் அதிக பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.

மழையில் மூழ்கிய பயிர்கள்
மழையில் மூழ்கிய பயிர்கள்

டெல்டா மாவட்டங்களில் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் அறுவடை நேரத்தில் சேதமடைந்திருக்கின்றன. அந்த விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கும், `ஹெக்டேருக்கு ரூ.20,000' என்பது எந்தவிதத்திலும் போதுமானதாக இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வழங்கினால் போதுமானதாக இருக்கும். எனவே, இழப்பீட்டுத்தொகையை அரசு கூடுதலாக வழங்கிட வேண்டும். தமிழக அரசு விவசாயிகளுக்கான நிவாரணத்தை உயர்த்தித் தர வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு, ரொக்கம் வழங்காமல், வெறும் உணவுப் பொருள்களை மட்டுமே அரசு வழங்கவிருப்பதாகத் தெரிகிறது.

இது பொங்கல் கொண்டாடப் பயன்பெறாது. ஒருபுறம் மழை வெள்ளத்தால் பாதிப்பு. மற்றொரு பக்கம் வேலையின்மையால் நஷ்டம். தென்மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் பாதிப்பு. இந்தச் சூழலில் பொங்கல் பரிசு என அறிவித்துவிட்டு, வெறும் பச்சரிசி மட்டும் கொடுத்தால், அது பொங்காது. அது உண்மையான பொங்கலாக இருக்காது. குறைந்தது ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.2,500 வழங்கினால் மட்டுமே இன்று இருக்கக்கூடிய சூழ்நிலைக்குப் போதுமானதாக இருக்கும். இதைத் தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும். தமிழகத்திலிருந்த பல கண்மாய்களை ஆக்கிரமித்து வீட்டுமனைப் பட்டாக்களாக மாற்றப்பட்டதும், கல்வி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதும் மோசமான செயல். மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையையே ஒரு குளத்துக்குள்தான் அமைத்துக் கொடுத்திருக்கின்றனர்.

 முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது போன்ற எண்ணற்ற குளங்களைப் பலர் தவறுதலாக ஆக்கிரமிப்பதற்கும், பட்டா போடுவதற்கும் 1967-க்கும் பின்னர் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் தெரிந்தும் தெரியாமலும் மிகப்பெரிய தவறிழைத்திருக்கின்றனர். அதன் விளைவாகத்தான் சாதாரண பருவமழை பெய்தால்கூட வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. தற்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. வரவிருக்கும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.சி என்று 1952-ம் ஆண்டு மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் சமுதாயம், கல்வி, பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய பல சமூகங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்திய, மாநில அரசுத்துறைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழகத்தில் 76 சமூகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், குறிப்பாக ஏழு சமுதாயங்கள் சேர்ந்து தேவேந்திர குல வேளாளர் என்றழைக்கப்படுகின்றனர். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பட்டியலிலிருந்து விலக்கிவிடுங்கள் என்பதுதான் புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

எங்கள் கோரிக்கையின் பேரில், கடந்த தேர்தலுக்கு முன்பாக ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒற்றைப் பெயரில் அழைப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஆனால், எங்களுடைய கோரிக்கை தேவேந்திர குல வேளாளர்களை `எஸ்.சி’ என்றழைக்கக்கூடிய பட்டியல் பிரிவில் வைத்திருக்கக் கூடாது. அவர்களுக்குப் புதிதாக 'தேவேந்திர குல வேளாளர்' என்ற அடையாளத்தோடு அல்லது மிகவும் பின்தங்கிய பிரிவினர் என்பதை உருவாக்கி, அந்த மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை" என்றார்.

தேவேந்திர குல வேளாளர் சட்டத் திருத்தம்; சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? #TNElection2021
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு