Published:Updated:

`பெரியார் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்தும்!’- ரஜினிகாந்த் மீது புதுச்சேரியில் புகார்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50-ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து 1971-ம் ஆண்டு நடைபெற்றதாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.

தந்தை பெரியார்
தந்தை பெரியார்

ரஜினியின் கருத்து பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும்விதமாக இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பா.ஜ.க அவருக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி காவல்நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த புகார் மனுவில், `துக்ளக் பத்திரிகையின் விழாவில் கலந்துகொண்ட திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், `1971-ல் பெரியார் தலைமையில் சேலத்தில் நடத்தப்பட்ட ஒரு பேரணியில் கடவுள் என்று பொதுமக்களால் கருதப்படுகிற ராமன் மற்றும் சீதையை மோசமாக சித்திரித்து அவற்றுக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்து அழைத்துச் சென்றார்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்
தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்து பொய்யானது மட்டுமல்ல உண்மைக்குப் புறம்பானதும் கூட. இதுபோன்ற கருத்துகள் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்களிடம் பெரியார் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்தும். இந்தக் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை.

அப்படி எந்தவோர் ஆதாரமும் அவரிடம் இல்லை. பெரியாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், துணை குடியரசுத் தலைவர் போன்ற பிரபலங்கள் கலந்துகொள்ளும் ஒரு விழாவில் ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்து பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும். மேலும், அவரின் அந்தக் கருத்து பொது அமைதியையும் சீர்குலைக்கும் என்பதால் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லோகு அய்யப்பன்
லோகு அய்யப்பன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு. அய்யப்பன்,``1971-ல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் என்ன நடந்தது என்ற வரலாறு தெரியாமல், துக்ளக் ஆண்டுவிழாவில் யாரோ கூறிய கருத்தை உதிர்த்திருக்கும் ரஜினிகாந்த்துக்கு, போதிய வரலாற்றுத் தெளிவோ அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்குப் பக்குவமோ கிடையாது.

ரஜினிகாந்த்தை தற்போது இயக்கிக்கொண்டிருப்பவர்கள் அவரின் பிரபலத்தைப் பயன்படுத்தி ஆதாயம் அடைய நினைக்கின்றனர். ரஜினிகாந்த்தின் கருத்து பொது அமைதியைக் கண்டிப்பாக சீர்குலைக்கும் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி காவல் நிலையத்தின் கிழக்கு கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பெரிய கடை காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறோம்.

புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார்
புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார்

உடனடியாக ரஜினிகாந்த் தனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டரீதியாக வழக்கு தொடரவும் அவரின் திரைப்படத்தை திரையிட முடியாத அளவுக்கு திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபடுவோம்” என்றார்.

பின் செல்ல