Published:Updated:

7.5%-லிருந்து 12%... வசூல் புகாரில் உள்ளாட்சித்துறை!

நேரு
பிரீமியம் ஸ்டோரி
நேரு

கட்டட அனுமதி தொடங்கி அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளாட்சியைத் தேடிவரும் மக்களிடம் லஞ்சம் வாங்குவதைத்தான் இந்த கப்பம் முறை ஊக்குவிக்கும்.

7.5%-லிருந்து 12%... வசூல் புகாரில் உள்ளாட்சித்துறை!

கட்டட அனுமதி தொடங்கி அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளாட்சியைத் தேடிவரும் மக்களிடம் லஞ்சம் வாங்குவதைத்தான் இந்த கப்பம் முறை ஊக்குவிக்கும்.

Published:Updated:
நேரு
பிரீமியம் ஸ்டோரி
நேரு

“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதுதான்” என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சவால்விடுத்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க ஆட்சிக்கு வந்த ஓராண்டில், ‘வேலுமணியையே மிஞ்சும் அளவுக்கு இன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு செயல்படுகிறார்’ என்று அதிரவைக்கும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. தி.மு.க-வினரே புலம்புவதுதான் ஹைலைட்!

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள், “வேலுமணி அமைச்சராக இருந்தபோது அனைத்துத் திட்டப் பணிகளுக்கும் 7.5 சதவிகிதம், ‘உள் ஒதுக்கீடாகச்’ சென்றுவிடும். ஆனால், இப்போது பணிகளைப் பொறுத்து 10 – 12 சதவிகிதத்தை ‘உள் ஒதுக்கீடாக’க் கேட்கின்றனர். உண்மையில் மாநகராட்சி தொடங்கி நகராட்சிவரை எல்லாமே நிதிப்பற்றாக்குறையில் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடிவதில்லை. ஆனால், மாதம்தோறும் பேரூராட்சிகள் 2 லட்சம் ரூபாய், நகராட்சிகள் 5-லிருந்து 15 லட்சம் ரூபாய், மாநகராட்சிகள் ஒரு கோடி ரூபாய் டார்கெட் என்று வாய்மொழி உத்தரவு போட்டுள்ளனர். ‘நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. மேலிடத்தில் வாக்கு கொடுத்துவிட்டோம்’ என்று சொல்லி ‘கப்பம்’ கட்ட வலியுறுத்துகின்றனர்.

நேரு
நேரு

கட்டட அனுமதி தொடங்கி அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளாட்சியைத் தேடிவரும் மக்களிடம் லஞ்சம் வாங்குவதைத்தான் இந்த கப்பம் முறை ஊக்குவிக்கும். எனவே, இது மக்களைத்தான் நேரடியாக பாதிக்கும். ஆட்சிக்கும் அவப்பெயர் வரும். அடுத்து, இவர்கள் கைகாட்டுபவர்களுக்குத்தான் ஒப்பந்தம் கிடைக்கிறது. ‘எல்லாப் பணிகளையும் தரமாகச் செய்ய வேண்டும்’ என்கின்றனர். எல்லாவற்றிலும் பணம் விளையாடினால் பணி எப்படித் தரமாக இருக்கும்... எனவே, அந்தந்த மண்டலத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து பேசி அமைச்சர் கே.என்.நேருவிடம் இது குறித்து நேரடியாகப் பேசத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றனர்.

நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்துவரும் இந்த வசூல்வேட்டை வழிமுறைகள் குறித்துப் பேசுகிறவர்கள், “நகராட்சி நிர்வாகத்துறையில், அமைச்சர் நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் நேர்முக உதவியாளர் ரமேஷ், அசோக், சீனிவாசன் ஆகியோரது தலையீடு அதிகமாக இருக்கிறது. மாநிலம் முழுவதுமுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளைக் கண்காணிக்க ‘Urban Tree’ என்று ஒரு சாஃப்ட்வேர் இருக்கிறது. இதைக் கண்காணித்து ‘எந்த வகையிலெல்லாம் வருவாய் ஈட்டலாம்’ என்று முடிவெடுக்கிறது ஒரு குழு.

நகராட்சி நிர்வாக இயக்குநராக இருப்பவர் பொன்னையா. இவர் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக இருந்தார். வேலுமணி ஆசியில்தான் இவர் ஐ.ஏ.எஸ்- ஆகப் பதவி உயர்வு பெற்றார். அவரை உடன் வைத்துக்கொண்டு வேலுமணியைக் குறை சொல்வதில் என்ன பயன்?

கடந்தகாலங்களில் வேலூர் மாநகராட்சியில் செயற்பொறியாளராக இருந்து ஏராளமான புகார்களில் சிக்கிய சீனிவாசன், இப்போது அமைச்சர் நேருவின் உதவியாளராக இருக்கிறார். நேருவுடன் இணைந்து அதிகாரிகளுக்கு பிரஷர் கொடுப்பது இவர்கள்தான். அதிகாரிகளை, அமைச்சர் ஏகத்துக்கும் திட்டித் தீர்க்கிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள அதிகாரிகள் கடும் மன அழுத்தத்துக்கு மத்தியில்தான் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்” என்றனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து நேருவின் உதவியாளர் சீனிவாசனிடம் விளக்கம் கேட்டபோது, ‘‘நான் அலுவல் சார்ந்த பணிகளை மட்டும்தான் கவனிக்கிறேன். இது முற்றிலும் தவறான தகவல்” என்று மறுத்தார்.

நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனோ, “எனக்குத் தனிப்பட்ட தொழில் இருக்கிறது. அரசியலைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அதில் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

வேலுமணி
வேலுமணி

நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பொன்னையாவையும் விளக்கம் கேட்பதற்காகத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. எனவே, அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறோம்.

இறுதியாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடமே விளக்கம் கேட்டோம். “நீங்கள் சொல்லித்தான் நான் இதைக் கேள்விப்படுகிறேன். உள்ளாட்சித்துறையில் இப்படியெல்லாம் செய்ய முதல்வர் ஒப்புக்கொள்ள மாட்டார். யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இருக்கும்போது எப்படி ‘டார்கெட்’ வைக்க முடியும்... ஒப்பந்த விஷயத்தில் நான் தலையிடுவதே இல்லை. தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் டெண்டரில் கலந்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது. தகுதியுள்ள நிறுவனங்களுக்குத்தான் ஒப்பந்தம் கொடுக்க முடியும் என அதிகாரிகள் சொல்கின்றனர். எனக்கு வயது 70. அதிகாரிகளைத் தவறான வார்த்தைகளில் பேச மாட்டேன். அதிகாரிகளிடம் மிகவும் மரியாதையாகத்தான் நடந்துகொள்கிறேன். எங்கள் ஆட்களை (தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள்) ஒழுக்கமாக இருங்கள் என்றால், ‘நீங்கள் ஒழுக்கமா?’ என்று கேட்கின்றனர். கழகத்துக்குக் கெட்ட பெயர் வருவதற்காக யாரோ இந்தப் புகாரைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். மற்றபடி எந்தத் தவறும் இல்லாமல்தான் நிர்வாகம் செய்கிறோம்” என்றார்.

“மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை, எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். முறைகேடாக நடந்துகொண்டால் சர்வாதிகாரிபோல நடவடிக்கை எடுப்பேன்” என்பது முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய எச்சரிக்கை!