Published:Updated:

கேரளாவில் வலுக்கும் முதல்வர் - கவர்னர் மோதல்... யார் இந்த ஆரிப் முகமது கான்?!

பினராயி விஜயன் மற்றும் ஆரிப் முகமது கான்
பினராயி விஜயன் மற்றும் ஆரிப் முகமது கான்

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தீவிரமாக எதிர்த்துவரும் நிலையில், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, மத்திய பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) கடுமையாக எதிர்த்துவருகிறது. சி.ஏ.ஏ-வை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் முதல்வர் பினராயி விஜயன் உறுதியாக இருக்கிறார். கேரளாவில் இடதுசாரி கட்சிகள் மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான காங்கிரஸையும் இணைத்துக்கொண்டு சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்ட்கள் முன்னெடுத்து வருகின்றன. அத்துடன், சி.ஏ.ஏ-வைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் விடுவதாக இல்லை. சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று 11 மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார் பினராயி விஜயன்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான கேரள அரசின் தீவிரச் செயல்பாடுகளை பா.ஜ.க-வினர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று மாநில அரசால் சொல்ல முடியாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். ஆனால், சி.ஏ.ஏ-வை எந்த அளவுக்கு எதிர்க்க முடியுமோ, அந்த அளவுக்கு அனைத்தையும் செய்துவருகிறது கேரள அரசு. சமீபத்தில், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.

இத்தகைய சூழலில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க-வின் மகளிரணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி, ``குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டிலேயே மிகவும் வலுவான குரல் கொடுத்துவருபவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆறு பேர் போராடினால் அவர்களைக் கைது செய்ய 60 போலீஸார் வருகிறார்கள். கேரளத்தில் எந்த இடத்திலும் போராடலாம் என்ற நிலை இருக்கிறது. அதற்கு, இங்குள்ள அரசின் தைரியம்தான் காரணம்” என்று பேசினார்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம்
சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம்

சி.ஏ.ஏ விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகளால் கொந்தளித்துப் போயிருக்கிறார் மாநில ஆளுநரான ஆரிப் முகமது கான். மத்திய பா.ஜ.க அரசால் கேரள ஆளுநராகக் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட இவர், “எல்லாவற்றையும் நான் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்” என்று குமுறியிருக்கிறார். சி.ஏ.ஏ-வுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் வழக்கு தொடர்வது குறித்து தன்னிடம் மாநில அரசு ஆலோசிக்கவில்லை என்று கவர்னர் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றியே தீர வேண்டும், வேறு வழியே இல்லை என்றும் கவர்னர் கூறியிருக்கிறார்.

சி.ஏ.ஏ விவகாரத்தில் கேரள அரசுக்கும் கவர்னருக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி, யார் இந்த ஆரிப் முகமது கான் என்று பலரும் ஆராய்ந்து வருகிறார்கள். பா.ஜ.க அரசால் கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி கேரள கவர்னராக நியமிக்கப்பட்ட ஆரிப் முகமது கான், ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 1973-74 காலகட்டத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அங்கு மாணவர் பேரவைத் தலைவராக இருந்துள்ளார். பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 1984-ம் ஆண்டு பஹ்ரைச் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முஸ்லிம் தனிநபர் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸிலிருந்து விலகினார்.

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

பிறகு, ஜனதா தளத்தில் சேர்ந்த ஆரிப் முகமது கான் 1989-ம் ஆண்டு மீண்டும் மக்களவைக்குத் தேர்வானார். ஜனதா தள ஆட்சியில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தார். பின்னர், ஜனதா தளத்திலிருந்து விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து 1998-ம் ஆண்டு பஹ்ரைச் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். 1984 முதல் 1990 வரை மத்திய அமைச்சராக இருந்தார். பிறகு, பா.ஜ.க-வில் இணைந்த ஆரிப் முகமது கான், கைசர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து, கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.

பா.ஜ.க-வின்`துக்டே துக்டே கேங்க்' பிரசாரம்!- ஆர்.டி.ஐ கேள்வியும் உள்துறை அமைச்சகத்தின் பதிலும்

தம்மிடம் ஆலோசிக்காமல் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து கேரள அரசின் தலைமைச் செயலாளரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தார். அதையடுத்து, இன்று கவர்னரை சந்தித்து தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் விளக்கம் அளித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போது, வேண்டுமென்றே அரசு எந்தவொரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்று அவர் விளக்கம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளைக் கேரளாவில் மேற்கொள்ளவும், அதற்கு ஒத்துழைப்பு அளிப்பது சாத்தியமில்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கு தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் மற்றும் ஆரிப் முகமது கான்
பினராயி விஜயன் மற்றும் ஆரிப் முகமது கான்

இந்தியாவில் சி.ஏ.ஏ-வை பல தலைவர்களும் பல கட்சியினரும் பல அமைப்பிரும் எதிர்த்துவருகிறார்கள் என்கிற போதிலும், சி.ஏ.ஏ எதிர்ப்பதில் முன்னணியில் இருந்துவரும் பினராயி விஜயன், இதன் காரணமாகவே பா.ஜ.க மற்றும் மத்திய அரசின் கடும் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார். ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் பினராயி விஜயன்.

பின் செல்ல