Published:Updated:

அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி! - ஆஃபர் தரும் காங்கிரஸ்; ஏற்க மறுக்கும் எம்.எல்.ஏக்கள்

சத்யா கோபாலன்

ராஜினாமா செய்த 13 கர்நாடக எம்.எல்.ஏக்களில் 10 பேர் தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளனர்

கர்நாடக எம்.எல்.ஏக்கள்
கர்நாடக எம்.எல்.ஏக்கள்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி மீதும் அவரின் ஆட்சி மீதும் அதிருப்தியில் உள்ள 10-க்கும் அதிகமான ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினம் தங்களின் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடிதத்தைச் சபாநாயகரிடம் அளித்துள்ளனர்.

குமாரசாமி
குமாரசாமி

ராஜினாமாவைத் தொடர்ந்து அனைவரும் மும்பையில் உள்ள சோஃபிடெல் ஹோட்டலில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாடு சென்றிருந்த முதல்வர் குமாரசாமி நேற்று இரவு கர்நாடகா வந்தடைந்தார். அவர் கர்நாடகா வந்த பிறகு முதல் வேலையாக தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்.

நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் மஜத நிர்வாகி தேவகவுடா, முதல்வர் குமாரசாமியுடன் இணைந்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் சில அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பரமேஷ்வரா
பரமேஷ்வரா

ஆனால், தங்களின் ராஜினாமாவைத் திரும்பப் பெறப்போவதில்லை என்ற உறுதியில் உள்ளனர் மும்பையில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏக்கள். மேலும், அவர்கள் ‘எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம். முதல்வரை மாற்றுங்கள் போதும்’ எனக் கோரிக்கை வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில துணை முதல்வர் பரமேஷ்வரா, `காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவருடனும் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. தற்போது கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கவுள்ளோம். பா.ஜ.க என்ன செய்யத் திட்டமிடுகிறது என்பதை நாங்கள் அறிவோம். அவர்களின் எண்ணம் என்றும் பலிக்காது. ஒருவேளை அப்படி நடக்கும் தருணத்தில் நாங்கள் அனைவரும் எங்கள் பதவியை ராஜினாமா செய்வோமே தவிர எம்.எல்.ஏ-க்களின் கட்சி தாவலுக்கு இடமளிக்க மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.