Published:Updated:

`சூத்ரதாரிகள் பட்டியல்; களையெடுப்புப் படலம்?' - சோனியா, ராகுலைச் சீண்டிய அந்த 2 பேர்!

காணொலிக் கூட்டத்தில் சோனியா
காணொலிக் கூட்டத்தில் சோனியா

மூத்த தலைவர்களின் கடிதத்தால் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில், சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு ஆதரவாக ஒரு ட்வீட்கூட சிதம்பரம் பதிவிடவில்லை.

`முழுநேரம் பணியாற்றக் கூடிய தலைவர் வேண்டும்' என்ற ஒற்றை வார்த்தையை மையமாகக்கொண்டு 23 பேர் எழுதிய கடிதம், காங்கிரஸ் தலைமையில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. `கடிதத்தின் சூத்ரதாரிகள் யார் என்பதைத் தலைமை அடையாளம் கண்டுவிட்டது. இந்த விவகாரத்தில் சிலரிடம் விசாரணை நடந்துவருகிறது' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தில்.

சோனியா காந்தி குடும்பம்
சோனியா காந்தி குடும்பம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த 24-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த காணொலிக் கூட்டத்தில், 53 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னால் ஆகஸ்ட் 7-ம் தேதி மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 பேர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, சோனியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கடிதத்தால், சோனியா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் சிலர் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

Congress CWC: `7 மணிநேரக் கூட்டம் நிறைவு!' - புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்காத காங்கிரஸ் கட்சி #NowAtVikatan

கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தியும், `இந்தக் கடிதம் எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. பலவீனமாக இருக்கும் நிலையில், அவர் (சோனியா) மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். கட்சித் தேர்தலுக்குக் கால அளவை நிர்ணயிப்போம். அதற்கான நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டுவோம்' எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

`கடிதத்தின் பின்னணியில் என்ன நடந்தது?' என காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் பேசினோம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

``தற்போது சோனியா காந்தி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார். கொரோனா தொற்று அதிகரிப்பால், தனக்கு எந்தவொரு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார். கொரோனா தொற்றின் ஆரம்பகாலகட்டத்தில் ஒரே ஒரு சமையல்காரருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு, அதில் `நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்ததும், அவரை மட்டும் அனுமதித்துவிட்டு உதவியாளர்கள் மாதவன், ஜார்ஜ் உட்பட அனைவரையும் வீட்டுக்குப் போகுமாறு அனுப்பிவிட்டனர்.

கடந்த நான்கு மாதங்களாக எந்த அரசியல் தலைவரையும் சோனியா காந்தி சந்திக்கவில்லை. ஏதாவது தகவல் சொல்ல வேண்டுமென்றால், கே.சி.வேணுகோபால் மட்டும் செல்போனில் அவரைத் தொடர்புகொண்டு பேசுவார். அதற்குரிய உத்தரவுகளை சோனியா பிறப்பிப்பார். மற்றபடி, சுதந்திரதின விழாவுக்குக்கூட ராகுல் காந்திதான் வந்தார். கொரோனா தொற்றுப் பரவலால் கடந்த நான்கைந்து மாதங்களாகக் கட்சித் தலைமையின் நிலை இதுதான். இதை அடிப்படையாகவைத்து, `கட்சி செயல்படவில்லை, முழுநேரம் செயல்படக்கூடிய தலைவர் தேவை’ எனக் கடிதம் எழுதியுள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன" என விவரித்தவர்கள்,

``இந்தக் கடிதத்தில் கையொப்பம் போடாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் அகமது படேல், மற்றொருவர் ப.சிதம்பரம். தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேருக்கும் நாளைக்குச் சிக்கல் வந்தால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இவர்கள் தேவைப்படுவார்கள் என்பதும் ஒரு காரணம். மூத்த தலைவர்களின் கடிதத்தால் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில், சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு ஆதரவாக ஒரு ட்வீட்கூட சிதம்பரம் பதிவிடவில்லை. ராகுலுக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் நிறைய இடைவெளி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், இன்னொருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற டிராஃப்டைத் தயார் செய்தனர். இந்தக் கடிதத்தை எழுதியவர் கபில் சிபல். இதில் திருத்தங்களைச் செய்தவர் யார் எனத் தலைமை கண்டறிந்துவிட்டது. இந்தக் கடிதத்தை ஊடகங்களில் கசியவிட்டவர்கள் சஞ்சய் ஜா மற்றும் அருண் யாதவ். தற்போது, அருண் யாதவிடம் விசாரணை நடந்துவருகிறது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

அதேநேரம், இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் கூறிய வார்த்தைகளையும் தலைமை உற்று கவனித்துவருகிறது. சிதம்பரம் பேசுகையில், `சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியவர்கள் அனைவரும் ராகுல் காந்தி மற்றும் தன்னைப்போல் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்ப்பவர்கள். கருத்துகளைத் தெரிவிக்கும்போதுதான், அதற்கான விடையும் கிடைக்கும். அத்தகைய கருத்தை வெளிப்படுத்தும் வகையில், `காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரைந்து நியமிக்க வேண்டும்' என்று அவர்கள் கேட்டார்கள்.

`கட்சி அமைப்புகளில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில், விரும்பிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சோனியா காந்திக்கு அதிகாரம் அளிப்போம்' என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நான் சொல்லவில்லை. கடலில் எழும் அலைகள் என்றைக்காவது அமைதியாக இருந்ததுண்டா... அலை இல்லையென்றால், அது சவக்கடலாக இருக்கும். எப்போதும் சில கேள்விகள், அதிருப்திகள் இருக்கும். ஓர் அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது. மேலும், கட்சி கூடுதல் வீரியத்துடனும் சுறுசுறுப்புடனும் முன்னோக்கிச் செல்ல இது வழிவகுக்கும்' என்றார். தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேருக்கும் ஆதரவாக சிதம்பரத்தின் இந்த வரிகள் இருப்பதை காங்கிரஸ் தலைமை ரசிக்கவில்லை.

கோப சோனியா, கொந்தளித்த ராகுல்... கட்சிக்குள் எதிர்ப்பு ஏன்?

தவிர, மத்திய அரசில் அமைச்சராக இருந்து பதவிகளை அனுபவித்துவிட்டு, தற்போது தலைமைக்கு எதிராகச் சிலர் குரல் கொடுப்பதைத் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் பா.ஜ.க-வை எதிர்ப்பதில் எந்த அளவுக்குக் கட்சி வேலை பார்த்தார்கள் எனவும் தெரியவில்லை. இந்தக் கடிதத்தால் சோனியாவும் ராகுலும் மன வேதனைப்பட்டுள்ளனர். `அரசியலுக்கு வர வேண்டும்’ என சோனியா விரும்பியதில்லை. ஒதுங்கியிருந்தவரை இவர்கள்தான் சென்று அழைத்து வந்தனர். 98-ல் கட்சிப் பதவிக்கு வந்தார் சோனியா. மத்தியில் 2004-ல் ஆட்சியை அமைத்தார். அப்போதுதான் ராகுலும் அரசியலுக்குள் வந்தார். எந்த அரசுப் பதவிகளையும் சோனியா ஏற்கவில்லை. தற்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருபவரை இந்தக் கடிதம் வெகுவாகப் பாதித்துவிட்டது.

கோப சோனியா, கொந்தளித்த ராகுல்... கட்சிக்குள் எதிர்ப்பு ஏன்?

கொரோனா தொற்றின் காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. இன்னும் சில மாதங்களில் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 1,100 பேர் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஒன்றுகூடி புதிய தலைவரைத் தேர்வு செய்வார்கள். இதில் தலைமைப் பொறுப்பை ஏற்காமல் ராகுல் ஒதுங்கிவிட முடியாது. அவரைவிட்டால் தலைமைக்கு வேறு யாரும் இல்லை. அதன்பிறகு களையெடுப்புகள் தொடங்கும்" என்றார் விரிவாக.

சோனியா காந்தி
சோனியா காந்தி

`` காங்கிரஸ் கட்சி என்பது பெரிய குடும்பம். நம்மிடையே கருத்து வேறுபாடுகளும், பல பிரச்னைகளில் மாறுபட்ட கருத்துகளும் உண்டு. இறுதியில், நாம் ஒருவராகவே வருவோம். இந்திய மக்களுக்காகவும், இந்த நாட்டுக்குத் தோல்வியை ஏற்படுத்திய சக்திகளுக்கு எதிராகவும் இந்த நேரத்தில் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்ற சோனியாவின் வார்த்தைகளை தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் கதர்க்கட்சித் தொண்டர்கள்.

அடுத்த கட்டுரைக்கு