Published:Updated:

கேரள ஆதிக்கம்... 2-ம் முறை பறிபோன வாய்ப்பு... சீதாராம் யெச்சூரி எம்.பி-யாகத் தேர்வாகாத பின்னணி!

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

2017-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்து யெச்சூரியை ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்க அந்த மாநில சி.பி.எம் நிர்வாகிகள் விரும்பியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி 2005 மற்றும் 2017-க்கு இடையில் தொடர்ச்சியாக இரண்டு முறை மாநிலங்களவை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2017-ம் ஆண்டில் அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தது. இதன்பின் மீண்டும் அவர் மாநிலங்களவைக்கு தேர்வாகாமல் இரண்டு வருடங்களாக அவர் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், மீண்டும் அவர் மாநிலங்களவைக்குத் தேர்வாகாமல் இருப்பதுக்கு வேறு காரணம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு மேற்குவங்கத்திலிருந்து யெச்சூரியை ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்க அந்த மாநில சி.பி.எம் நிர்வாகிகள் விரும்பியுள்ளனர்.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

மேற்கு வங்கத்தில் சி.பி.எம் கட்சிக்கு 26 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருப்பதால் அவரை எம்.பி-யாக்க காங்கிரஸின் உதவி தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்குவங்க காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசி அவர்களின் ஆதரவுடன் தேர்வு செய்ய முன்வந்துள்ளனர். மேற்குவங்க காங்கிரஸும் யெச்சூரித் தேர்வு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளது. ஆனால், கட்சியின் பொலிட் பீரோவில் மாநில நிர்வாகிகள் இதைச் சொன்னபோது, அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆதரவுடன் எம்.பி-யாக வேண்டாம் என்று வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் ஆகிய இரண்டு கட்சிகளை எதிர்த்துதான் மாநில சி.பி.எம் அரசியல் செய்கிறது என்பதால், மாநிலங்களவைத் தேர்தலுக்காக அந்தக் கட்சியின் உதவியைப் பெறுவது கொள்கைகளுக்கு எதிரானது எனக் கூறியுள்ளனர்.

Vikatan

இதற்கிடையே, தற்போதும் 5 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் மேற்குவங்கத்தில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் நான்கு இடங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிடுகிறது. மீதமுள்ள ஒரு இடம் 2014-ம் ஆண்டு முதல் சி.பி.எம் வேட்பாளராக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ரிதபிரதா பந்தோபாத்யாய் இருந்த இடம். ஆனால், அவர் 2017-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதால் இடம் காலியாக உள்ளதையடுத்து, இதில் மீண்டும் சி.பி.எம் போட்டியிட வேண்டும் என்றும், யெச்சூரியை வேட்பாளராக்க வேண்டும் என்றும் கூறி மீண்டும் மேற்குவங்க நிர்வாகிகள் பொலிட் பீரோவை அணுகியுள்ளனர்.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

ஆனால், மீண்டும் போதிய எம்.எல்.ஏ-க்கள் பலம் இல்லாததைக் காட்டி அவரை தேர்வு செய்வதைத் தடுத்துள்ளனர் பொலிட் பீரோ நிர்வாகிகள். இந்த நிராகரிப்பின் பின்னணியில் இருப்பவர்கள் பொலிட் பியூரோவில் கேரள சகாக்கள்தான் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள நிர்வாகிகள், ``தற்போது கட்சியின் பொலிட் பீரோ கேரள பிரிவின் ஆதிக்கத்தில் இருக்கிறது.

இவர்கள்தான் காங்கிரஸின் உதவியுடன் சீதாராம் யெச்சூரியை மாநிலங்களவைக்கு அனுப்பும் திட்டத்தை நிராகரித்தனர். மாநிலத்தில் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்வதால் அவர்களின் உதவியுடன் யெச்சூரியை மாநிலங்களவைக்கு அனுப்புவதில் கேரள சகாக்கள் விரும்பவில்லை. கட்சிக்குள் இருக்கும் போட்டியே, சீதாராம் யெச்சூரி மாநிலங்களவைக்கு தேர்வாகாததற்கு முழுக்காரணம்" எனக் கூறியுள்ளனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு