Published:Updated:

``உச்சத்தில் கோஷ்டிப்பூசல்... கடுப்பான ராகுல் காந்தி!"

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தங்களை கலாய்ப்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல், மேடையிலிருந்தவர்கள் அதை ரசித்து சிரித்ததுதான் காமெடி.

``உச்சத்தில் கோஷ்டிப்பூசல்... கடுப்பான ராகுல் காந்தி!"

ராகுல் காந்தி தங்களை கலாய்ப்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல், மேடையிலிருந்தவர்கள் அதை ரசித்து சிரித்ததுதான் காமெடி.

Published:Updated:
ராகுல் காந்தி

முதல்வர் ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' சுயசரிதை புத்தகத்தை வெளியிட, பிப்ரவரி 28-ம் தேதி சென்னை வந்திருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே அவர் உரையாற்றுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக வாழைத் தோரணங்களுடன் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால், இந்த உரையாடல் நிகழ்ச்சியே சச்சரவில் முடிந்ததுதான் 'ஹைலைட்.’ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசலால், தன் உரையை ஐந்தே நிமிடங்களில் சுருக்கமாக முடித்துக்கொண்டு சிட்டாகப் பறந்திருக்கிறார் ராகுல்.

மேடையில் தலைவர்கள்
மேடையில் தலைவர்கள்

சத்தியமூர்த்தி பவனில் விழா தொடங்குவதற்கு முன்னரே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மேடைக்கு வந்தபோது அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. கடுப்பான அவர் தரப்பினர், சீட் ஒதுக்கப்படாததைக் கண்டித்து கோஷமிட்டனர். உடனடியாக மைக் பிடித்த இளங்கோவன், "இந்த மேடையில் இடமில்லாமல் போனால் என்ன... உங்கள் மனதில் எனக்கு இடமிருக்கிறது" என்று பன்ச் வைக்கவும், கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக, அவருக்கு மேடையில் இருக்கையை ஒதுக்கினார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். கட்சிக்காகச் செலவழிப்பவர்களும், ஆக்டிவ் அரசியலில் ஈடுபடுபவர்களும் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்டதாக குமுறுகிறது காங்கிரஸ் வட்டாரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், "இந்த உள்ளாட்சித் தேர்தலில், 592 வார்டுகளில் காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளை பலமாக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தவர் மறைந்த தலைவர் ராஜீவ் காந்தி. இதையெல்லாம் கோடிட்டுக் காட்டி, புதிதாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு உத்வேகம் அளிக்கும் எண்ணத்தில்தான் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு வந்தார். ஆனால், இங்கு நடைபெற்ற கோஷ்டிக் கலகம், அவரை மின்னல் வேகத்தில் சத்தியமூர்த்தி பவனிலிருந்து வெளியேற்றிவிட்டது. இந்த விழா ஏற்பாடே அலங்கோலமாகத்தான் இருந்தது.

விழாவுக்கு வந்திருந்தவர்கள்
விழாவுக்கு வந்திருந்தவர்கள்

கட்சிக்காக அதிகம் செலவழிப்பவர் ரூபி மனோகரன். அவரை மேடையேற்றவில்லை. சமூக வலைதளங்கள் வாயிலாக கட்சியின் கொள்கைகளைப் பேசிவருபவர் சசிகாந்த் செந்தில். அவரையும் புறக்கணித்துவிட்டனர். கோவா தேர்தலைக் காரணம் காட்டி ப.சிதம்பரம் இந்தக் கூட்டத்துக்கு வரவில்லை. வழக்கமாக, விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காகவாவது ஒரு பெண் நிர்வாகியை மேடையில் அமரவைப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்படியோர் ஏற்பாடும் இல்லை. ஆண்கள் மட்டுமே மேடையை அலங்கரித்திருந்தார்கள். மேடையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கை மறுக்கப்பட்ட விவகாரம் தெரிந்தவுடனேயே ராகுல் அப்செட் ஆகிவிட்டார். போதாத குறைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்புக்குப் போட்டிப் போடுபவர்களெல்லாம், தங்கள் எதிர்த்தரப்பைப் பற்றிக் குறை சொல்வதிலேயே ராகுலின் நேரத்தை விழுங்கிவிட்டனர். கட்சிக்குள் நிலவும் இந்த கோஷ்டிப்பூசலை தன் பேச்சிலேயே மறைமுகமாகச் சுட்டிக்காட்டிவிட்டார் ராகுல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேடையில் தான் பேசும்போது, 'ஓர் அறைக்குள் 50 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை அடைத்தால், அவர்கள் 500 பேர் எழுப்பும் சத்தத்தை எழுப்புவார்கள்' என்று கோஷ்டி கானத்தைப் போட்டு உடைத்துவிட்டார் ராகுல். அவர் தங்களைக் கலாய்ப்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாமல், மேடையிலிருந்தவர்கள் அதை ரசித்துச் சிரித்ததுதான் காமெடி. தமிழ் மொழி, பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் ராகுல். 'என்னை ஒரு தமிழனாகவே உணர்கிறேன்' என்று பல இடங்களிலும் மேற்கோள் காட்டியிருக்கிறார். அப்படிப்பட்டவர் பேசுவதற்காக வந்தபோது, மொழிபெயர்ப்பாளர் ஒருவரைக்கூட கட்சியிலிருந்து அமர்த்தவில்லை. 'நான் ஆங்கிலத்திலேயே பேசலாமா... மொழிபெயர்ப்பாளர் வேண்டாமா?' என்று ராகுலே கேட்டும், 'பரவாயில்லை, நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள். எல்லோரும் புரிந்துகொள்வார்கள்' என்று மேடையில் இருந்தவர்கள் கூறினர்.

ராகுல் நிகழ்ச்சி
ராகுல் நிகழ்ச்சி

தன் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்காவிட்டால், இதைவைத்தே, 'ஆங்கிலத்தில் மட்டும் உரை நிகழ்த்திய ராகுல். தமிழைப் புறக்கணித்த ராகுல்' என பா.ஜ.க பிரசாரம் செய்யுமென்பது ராகுலுக்கு நன்கு தெரியும். இந்த அரசியல் புரிதல்கூட இல்லாமல்தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். கடைசியில், கடுமையான குரலில் ராகுல் உத்தரவிட்ட பிறகுதான், திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் எழுந்து மொழிபெயர்ப்பாளராக மாறினார். அவரும்கூட, ராகுலின் பேச்சை முழுதாக உள்வாங்கி மொழிபெயர்க்கவில்லை. 'காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பெண்கள்தான் கட்டமைக்க முடியும்' என்று ராகுல் பேசியதை அப்படியே மாற்றிவிட்டார் ஜெயக்குமார். இப்படிக் குளறுபடிகளும் கோஷ்டிப்பூசல்களும் அதிகமிருந்ததால், தன் பேச்சை ஐந்தே நிமிடங்களில் முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் ராகுல்" என்றனர்.

ராகுலின் இந்த சென்னை விசிட்டின்போது, 'அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்?' என்கிற பஞ்சாயத்துதான் களைகட்டியிருக்கிறது. தலைவர் பதவிக்குக் குறிவைத்திருக்கும், ஶ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, ராகுலுடன் நெருக்கம் காட்ட பலமாக முயன்றிருக்கிறார். ஆனால், அவரை ராகுல் சட்டை செய்யவில்லை என்கிறார்கள் விவரமறிந்த கதர்க் கட்சியினர். தான் டெல்லி கிளம்புவதற்கு முன்னதாக, "நீங்கள் பலமான கட்டமைப்பை உருவாக்கினால் மட்டுமே, அதைவைத்து தி.மு.க-விடம் அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெற முடியும். கட்சியை வளர்க்கும் வேலையை முதலில் பாருங்கள்" என்று தமிழகத் தலைவர்களை எச்சரித்துவிட்டே கிளம்பியிருக்கிறார் ராகுல். காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிப்பூசலைப் பார்த்தால், ராகுலின் எச்சரிக்கை காற்றோடு போனதாகத்தான் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism