Published:Updated:

``வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடும் பட்ஜெட் இது!”- தூத்துக்குடியில் சஞ்சய் தத்

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

``தற்போதைய மத்திய அரசின் பட்ஜெட் வெறும் அறிவிப்புகளோடு நின்று விடும் பட்ஜெட்டாக உள்ளது” என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் விரைவில் நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு மாநகர காங்கிரஸ் கமிட்டியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இதுவரை மோடி அரசு வெறும் அறிவிப்புகள் மட்டும்தான் வெளியிட்டுள்ளதே தவிர, உருப்படியாக எதையும் செயல்படுத்தவில்லை. அதேபோலத்தான் இந்த பட்ஜெட்டும் வெறும் அறிவிப்பு பட்ஜெட்தான். அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த வகையில் எந்த அம்சமும் இதில் இல்லை.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

பெரிய வேலைவாய்ப்புக்கானதும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஏற்கெனவே வேலைவாய்ப்பில் இந்தியா, உலகளவில் பின்தங்கியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றம் தரும் பட்ஜெட். நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. 8.5 சதவிகிதமாக இருக்க வேண்டிய பொருளாதார வளர்ச்சி, தற்போது வெறும் 3.8 சதவிகிதம்தான் உள்ளது. இதனால், சிறிய வர்த்தகர்கள், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைவாக இருந்தாலும் நமது நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது. டெல்லியில் ஜாமியா பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், துப்பாக்கியால் சுட்ட நபரை சமூக வலைதளங்களில் அடையாளம் காட்டிய பின்னரும், அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மோடியின் அடிமை ஆட்சியாக இ.பி.எஸ் ஆட்சி உள்ளது. முதல்வர், துணை முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த தமிழகத்தில் ஊழல் ஆட்சிதான் நடக்கிறது.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

மோடியிடம் தமிழர்களின் சுயமரியாதையை இ.பி.எஸ் அடகு வைத்துவிட்டார். தமிழகத்துக்கு வரவேண்டிய திட்டங்கள் அனைத்தும் வட மாநிலங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பெரியளவிலான முறைகேடு நடைபெற்றுள்ளது. உயரதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் ஆதரவு இருப்பதால்தான் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு