Published:Updated:

'பெரியண்ணன்' போக்கு, ரஜினி அரசியல், 'மீண்டும்' சசிகலா..! - திருநாவுக்கரசர் பதில்கள்

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

தமிழக அரசியலில் 43 வருடங்களாக வலம்வரும் மூத்த தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்துப் பேசினேன்...

"டெல்லி தலைமை சொல்லி கே.எஸ்.அழகிரி அறிக்கை விட்டாரா... அல்லது, ப.சிதம்பரம் சொல்லித்தான் அறிக்கை விட்டாரா... கே.எஸ். அழகிரியை சிதம்பரம்தான் ரிமோட்டில் இயக்குகிறார் என்று பேசிக்கொள்கிறார்களே?"

"சோனியா, ராகுல் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளருக்குத் தெரிந்து விடப்பட்ட அறிக்கையாக நான் நினைக்கவில்லை. சிதம்பரத்துக்குத் தெரியுமா இல்லையாங்கிறது எனக்குத் தெரியாது. அதை ப.சிதம்பரம்கிட்ட கேட்கணும். இல்லைன்னா... அழகிரிகிட்டதான் நீங்கள் கேட்க வேண்டும்."

"இந்த அறிக்கைக்காக டெல்லியில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளாதது சரியா?"

"எங்களுடைய அகில இந்தியத் தலைமை, தி.மு.க தலைமையுடன் சுமுகமான நட்பில் இருக்கிறது. அதேபோன்று, நான், அழகிரி போன்றவர்களுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் எந்தக் கருத்துவேறுபாடும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலால் ஏற்பட்ட சிறு வருத்தத்தை வைத்து, டெல்லி கூட்டத்தை தி.மு.க புறக்கணித்திருக்கக் கூடாது. மதவாத பி.ஜே.பி-யையும், அவர்கள் கொண்டு வந்திருக்கிற சட்டங்களையும் எதிர்ப்பதற்காக தேசிய அளவில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் அது. அதில் கலந்துகொண்டு தி.மு.க தன் கருத்துகளைச் சொல்லியிருக்கலாம். தமிழக காங்கிரஸ் தலைமைமீதான அதிருப்தியை சோனியா, ராகுலிடம் தனியாகத் தெரிவித்துவிட்டு வந்திருக்கலாம். அவர்கள் கூப்பிட்டுப் பேசியிருப்பார்கள்."

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

"பெரியண்ணன் போக்கை தி.மு.க கையாளுகிறது என்று காங்கிரஸார் பேசுகிறார்களே?"

"எங்கள் கூட்டணியில் தமிழக அளவில் தி.மு.க-தான் பெரியகட்சி. அகில இந்திய அளவில் காங்கிரஸ்தான் பெரிய கட்சி. எனவே, ஒருவரை ஒருவர் மதித்துச் செயல்பட வேண்டியது அவசியம். இதில் பெரியண்ணன் மனோபாவமோ, அடிமை என்கிற மனோபாவமோ யாருக்கும் தேவையில்லை. ஒருவரை ஒருவர் அனுசரித்துதான் போகவேண்டும். அப்படித்தான் இரு தரப்பிலும் இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதும் அதனால்தான். அதேபோல இருந்தால்தான் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறமுடியும்." முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/38xtYmz

"தி.மு.க கூட்டணியைப்போலவே அ.தி.மு.க கூட்டணியிலும் பி.ஜே.பி-யுடன் உரசல் அதிகமாகியிருக்கிறதே...இதனால் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டா?"

"இன்றைய நிலவரப்படி... நத்திங். தினகரன், சீமான் போன்றவர்களின் சிறிய கட்சிகளைத் தவிர்த்து, இரண்டு கூட்டணிகளில்தான் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அணிவகுக்கின்றன. கட்சிகள் மாறிக் கூட்டணி போடுவதற்கான அறிகுறிகளோ சூழலோ இப்போது இல்லை."

"ரஜினியும் நீங்களும் நண்பர்கள். தமிழக அரசியலில் அவர் சொல்லும் அதிசயம் அவரை மையமாக வைத்து நடக்குமா?"

"ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. சினிமாவில் அவர் எனக்கு நண்பர். முக்கிய நாள்களில் இருவரும் சந்தித்துப் பேசுகிறோம். அவர் என்ன பெயரில் கட்சி ஆரம்பிக்கப்போகிறார், அவருடைய கொள்கை என்ன, யாரோடு கூட்டணி என ஆயிரத்து எட்டு விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் அவர்தான் முடிவு செய்து தெளிவாகச் சொல்ல வேண்டும்."

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

"சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால், தமிழக அரசியலில் குறிப்பாக அ.தி.மு.க-வில் திடீர் திருப்பங்கள் நடக்குமா?"

"ஒன்றுமே நடக்காது... அவர் எதற்காக உள்ளே போனார்... சொத்துக் குவிப்பில்தானே? அவரின் வயது, ஜெயலலிதா இறப்பில் நீடிக்கும் மர்மம், நீதி விசாரணையிலும் வெளிவராத உண்மைகள்... இத்தகைய சூழ்நிலையில சசிகலா வெளியே வந்து என்ன பண்ணமுடியும்? எதுவும் செய்ய முடியாது.

சசிகலா ஜெயலலிதாவின் உதவியாளர், அவ்வளவுதான். அவரை அரசியல் தலைவராக மக்கள் அங்கீகரித்து மக்கள் அவர் பின்னால் நின்று வாக்களிப்பார்கள் என்று யாராவது நினைத்தால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. சொத்து, பணம், வசதி வாய்ப்பு இருக்கலாம். அதைவைத்து நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டியதுதானே தவிர, அரசியலில் புகுந்து இனிமேல் கட்சித் தலைவராவது, முதல்வர் ஆவது இதெல்லாம் கனவு. நிறைவேற வாய்ப்பேயில்லை. மக்களும் ஏற்கவே மாட்டார்கள்!"

- திருநாவுக்கரசர் நேர்காணலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சசிகலாவை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது பைத்தியக்காரத்தனம்!" https://www.vikatan.com/government-and-politics/local-bodies/how-local-body-elections-created-tremors-in-party-alliances

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு