Published:Updated:

`பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார்!’ - ராகுல் காந்தி குறித்து ஒபாமா

ஒபாமா
ஒபாமா ( Instagram )

768 பக்கங்கள்கொண்ட ஒபாமா-வின் `எ பிராமிஸ்டு லேண்ட்’ புத்தகம் நவம்பர் 17-ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து, தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, `பதற்றத்தோடு இருப்பவர், பக்குப்படாமல் இருக்கிறார்’ என்று விமர்சித்திருக்கிறார்.

பராக் ஒபாமா, `எ பிராமிஸ்டு லேண்ட்’ என்ற பெயரில் தனது நினைவுகளைப் புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள், திருமண வாழ்க்கை எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒபாமா பகிர்ந்திருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பற்றி, `பதற்றத்தோடு இருப்பவர்; நன்றாகப் படித்து ஆசிரியரைக் கவர வேண்டும் என நினைக்கும் மாணவர்போல் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறக்கூடிய விருப்பமோ, தகுதியோ பெறாமலிருக்கிறார்’ என்று ஒபாமா விமர்சித்திருக்கிறார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் குறித்து பாசிட்டிவ்வான கருத்துகளை ஒபாமா பகிர்ந்திருக்கிறார். அதிகம் பேசாத பொருளாதார மேதையான மன்மோகன் சிங்கை ஒபாமா பலமுறை பொதுவெளியில் வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறார். அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் ஆகிய இருவரும் அசைக்க முடியாத ஒருமைப்பாட்டு உணர்வுகொண்டவர்கள் என்று ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல், ரஷ்ய அதிபர் புதின் குறித்தும் தனது கருத்தை ஒபாமா அந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். சிகாகோ மெஷின்களை இயக்கிய கண்டிப்பான உரிமையாளர்களைப்போல் கண்டிப்பு மிக்கவர் புதின் என்று குறிப்பிட்டிருக்கும் ஒபாமா, `நேரில் வியப்பளிக்கக்கூடியவர்’ என்றும் தெரிவித்திருக்கிறார். அதிபர் பதவியிலிருந்த நாள்களில் தனது மனைவி மிச்செல் ஒபாமா, மனரீதியாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்ததாகவும் பராக் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.

பராக் ஒபாமா, மிச்சேல் ஒபாமா
பராக் ஒபாமா, மிச்சேல் ஒபாமா
twitter.com

அமெரிக்க அதிபராக 2008 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவிவகித்த பராக் ஒபாமா, அந்நாட்டின் முதல் கறுப்பின அதிபர். அவர், தனது பதவிக் காலத்தில் 2010, 2015 என இரண்டு முறை இந்தியா வந்திருக்கிறார். 768 பக்கங்கள்கொண்ட ஒபாமா-வின் `எ பிராமிஸ்டு லேண்ட்’ புத்தகம் நவம்பர் 17-ம் தேதி விற்பனைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன்பாக ஊடகங்கள் புத்தகம் குறித்து வெளியிட்டிருக்கும் விமர்சனக் கட்டுரையில் மேற்கூறிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ராகுல் காந்தி குறித்த விமர்சனத்துக்கு ஒபாமாவுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று பதிலளிக்கப்பட்டது. இருப்பினும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஒபாமாவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

கோப சோனியா, கொந்தளித்த ராகுல்... கட்சிக்குள் எதிர்ப்பு ஏன்?

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ், ``ஐந்து முதல் 10 நிமிடங்களில் ஒருவரின் குணாதிசயத்தை நம்மால் எப்படி முடிவு செய்ய முடியும்... அதைத் தெரிந்துகொள்ள சில நேரங்களில் பல ஆண்டுகள் ஆகும். ராகுல் காந்தி குறித்து நீங்கள் தவறாக கணித்திருக்கிறீர்கள். உங்கள் கணிப்பு பொய்யானது என்பது விரைவிலேயே தெரியவரும்’’ என்று காட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு