Published:Updated:

பிரியங்காவுக்கு எதிராகக் காங்கிரஸிலேயே கலகக் குரல்! - விஸ்வரூபமெடுக்கும் உ.பி `பேருந்து அரசியல்’

காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி, பொதுச் செயலாளர் பிரியங்கா
காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி, பொதுச் செயலாளர் பிரியங்கா

பிரியங்கா காந்தி நேரடியாகத் தொடர்புடைய இந்த விவகாரத்தில் கட்சிக்கு எதிராக அதீதி கருத்து தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களை, செய்திகள் மூலமாகவும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் அறிந்து வருகிறோம். பணி செய்யும் இடத்தில் வேலை இல்லை, வருமானம் இல்லை. சொந்த ஊர்களுக்குப் பயணமாகலாம் என்றால் போக்குவரத்து வசதி இல்லை. வேறு வழியின்றி நடந்து செல்ல முடிவெடுக்கும் இவர்களுக்கு வழியில் உணவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழல்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Representational image | AP

இத்தனைக்கும் மத்தியில் சில அரசியல் விஷயங்களும் அரங்கேறத்தான் செய்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல மாநிலங்களில் சிக்கியுள்ளனர். அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அழைத்து வருவது தொடர்பாக மாநில பா.ஜ.க அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் யுத்தமே நடந்து வருகிறது.

இந்த மோதல், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் ட்வீட்டில் இருந்து தொடங்குகிறது. கடந்த 16-ம் தேதி பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் மாநில அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார். கஸிப்பூர் மற்றும் நொய்டா எல்லைகளில் இருந்து தலா 500 பேருந்துகள் என 1,000 பேருந்துகளைத் தொழிலாளர்களுக்காக அனுமதிக்க வேண்டும். அதன் செலவை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் எனப் பதிவிட்டார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இது தொடர்பான கடிதத்தையும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் வழங்கினர். இந்த நிலையில் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒருவர், `ராஜஸ்தானில் இருந்து தனியார் பேருந்து மூலம் தொழிலாளர்களை அனுப்ப தயாராக இருக்கிறோம். ஆனால், உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது” என்று சொல்ல பிரச்னை பூதாகரமானது.

`பேருந்துகள் என்ற பெயரில் டூவீலர் பதிவு எண்கள்!' - உ.பி-யில் மீண்டும் வெடித்த காங்கிரஸ்-பா.ஜ.க மோதல்

இதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை அன்று, மாநில அரசு பிரியங்கா காந்தியின் கோரிக்கைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தது. கூடவே, தயாராக இருக்கும் பேருந்துகளின் விவரங்கள், ஓட்டுநர்களின் விவரங்கள், உரிமம், உடல்நிலை குறித்த தகவல்களை உடனே தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. உடனடியாக காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆவணங்கள் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கூடுதலாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்து ட்வீட் பதிவிட்டார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி | யோகி ஆதித்யநாத்
பிரியங்கா காந்தி | யோகி ஆதித்யநாத்

பின்னர் திங்கள்கிழமை இரவு 11.40 மணிக்கு, மாநில அரசு சார்பாக, பேருந்துகளை லக்னோவில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. தேவையில்லாமல் பேருந்துகளை லக்னோ வரச் சொல்லி இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள் எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. தொடர்ந்து உ.பி அரசு, மாநில எல்லை பகுதிகளான காஸியாபாத் மற்றும் நொய்டாவில் பேருந்துகளை வரச் சொன்னது. அங்கு மாவட்ட மாஜிஸ்டிரேட் ஆய்வு செய்து பேருந்துகளை உதவிக்கு பெற்றுக்கொள்வார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் அளித்த பேருந்துகளின் பட்டியலில் இருக்கும் பல்வேறு பதிவு எண்கள், இருசக்கர வாகனம், கார் மற்றும் மூன்று சக்கர வானங்களின் பதிவு எண் என்று குற்றம்சாட்டியது உ.பி அரசு. மேலும், பல பேருந்துகளின் பதிவு காலம் முடிந்துவிட்டது எனவும் குற்றம் சாட்டியது. எனினும், காங்கிரஸ் இந்தக் குற்றசாட்டை மறுத்தது. தேவைப்பட்டால் ஆக்ரா பகுதியில் வரிசையாக நிற்கும் பேருந்துகளை எண்ணிப் பாருங்கள் எனப் பதிலளித்தது.

அதே போன்று பேருந்துகளை மாநிலத்துக்குள் விடாமலும் ஆர்.டி.ஓ மூலம் பேருந்து உரிமையாளர்களுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. தொடர்ந்து ராஜஸ்தான் உத்தரப்பிரதேச எல்லையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பேருந்துகளை அனுமதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் மாநில தலைவர் உள்ளிட்ட பலரை வலுக்கட்டாயமாக போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல்கள் வெளியாக, உ.பி போலீஸார் அதை மறுத்தனர். அவர்கள் அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டனரே தவிர கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் உத்தரப்பிரதேச அரசு, காங்கிரஸ் அளித்த 1,000 பேருந்துகளின் பட்டியலில் 79 பேருந்துகள் காலம் கடந்தது எனவும், 140 பேருந்துகளுக்கு இன்ஷூரனஸ் இல்லை எனவும் இதில் 78 பேருந்துகளில் இவை இரண்டும் இல்லை எனவும் பட்டியல் வெளியிட்டது. இந்த நிலையில் இன்று வீடியோ மூலம் பேசிய பிரியங்கா காந்தி, ``நாம் நமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களே நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் ரத்தத்திலும் வேர்வையிலும்தான் இந்த நாடு செயல்படுகிறது. அரசியலுக்கு இது நேரம் கிடையாது” என்று தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏ ஆன அதீதி சிங், திடீரென காங்கிரஸ் கட்சியையும் பேருந்து விவகாரத்தில் பிரியங்கா காந்தியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ``இது போன்ற பேரிடர் காலத்தில், இப்படியான கீழ்த்தரமான அரசியல் எதற்காக... 1,000 பேருந்துகள் தயார் என்கிறார்கள். அதில் பாதி போலி எண்களாக இருக்கின்றன. 297 குப்பை பேருந்துகளாக இருக்கின்றன. 98 ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஆம்புலன்ஸ்கள், 68 பேருந்துகளுக்கு ஆவணங்கள் இல்லை. என்ன ஒரு காமெடி இது? உண்மையிலே பேருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன என்றால் ஏன் தொழிலாளர்களை ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். அவர் குறிப்பிட்ட ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்ட்ரா மாநிலரங்கள் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவு ஆட்சி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், ``ராஜஸ்தானில் மாணவர்கள் சிக்கி இருந்தபோது இந்தப் பேருந்துகள் எங்கே இருந்தன? அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம். குறைந்தபட்சம் எல்லை வரையாவது விட்டிருக்கலாமே... ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் பேருந்துகள் அனுப்பி அழைத்து வந்தார். ராஜஸ்தான் முதல்வரே இது தொடர்பாகப் பாராட்டியுள்ளர்” எனப் பதிவிட்டுள்ளார் அதீதி.

பிரியங்காவுக்கு எதிராகக் காங்கிரஸிலேயே கலகக் குரல்! - விஸ்வரூபமெடுக்கும் உ.பி `பேருந்து அரசியல்’

இவர் சோனியா காந்தி குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த ரேபரேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர் பா.ஜ.க- வுக்கு ஆதரவாகக் கருத்து கூறியுள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பிரியங்கா காந்தி நேரடியாகத் தொடர்புடைய இந்த விவகாரத்தில் கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீதி சிங்
அதீதி சிங்

இந்தநிலையில் அவர் பெயருக்குத்தான் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரே தவிர, எப்போதோ பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸுக்கு எதிராக அதீதியைக் களமிறக்கும் திட்டமும் பா.ஜ.க-வுக்கு இருப்பதாகப் பேசப்படுகிறது. எது எப்படியோ, தொழிலாளர்களை மீட்டுக் கொண்டுவரும் விவகாரத்தில் பெரும் அரசியல் நடக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

அடுத்த கட்டுரைக்கு