Published:Updated:

`பொன்.ராதாகிருஷ்ணன் படித்தவர் என்று நினைக்கிறேன்!' - கொதிக்கும் வசந்தகுமார் எம்.பி

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி

``வில்சன் விவகாரத்தில், அறிவுசார்ந்து பேச வேண்டிய பொன்.ராதாகிருஷ்ணன் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் பேசுகிறார்’’ என்று வசந்தகுமார் எம்.பி விமர்சித்திருக்கிறார்.

`களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு பொறுப்பேற்று குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ-க்களும் வெட்கப்பட்டு பதவி விலக வேண்டும்' என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்திருந்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, வேலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வசந்தகுமார் எம்.பி காட்டமாகப் பேசினார். அவர் பேசுகையில், ``காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிலைகளை அசிங்கப்படுத்துவதும் சேதப்படுத்துவதும் மனநிலை சரியில்லாதவர்கள் செய்யும் வேலை.

அவர்களைப் பற்றிப் பேசி காலநேரத்தை வீணாக்க வேண்டாம். காவல்துறை பார்த்துக்கொள்ளும். அவர்கள் இரவில் குடித்துவிட்டு வேண்டுமென்றே சிலைகள் மீது சாணம் வீசுவார்கள், செருப்பைத் தூக்கிப் போடுவார்கள். சிலைகளைச் சேதப்படுத்தும் நபர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.

பெரியார் சிலை சேதம்
பெரியார் சிலை சேதம்

பொன்.ராதாகிருஷ்ணன் படித்தவர் என்று நினைக்கிறேன். அரசியல் தெரிந்த அவர், அமைச்சராக இருந்துள்ளார். ஆனாலும், அவர் பத்திரிகைகளை சரியாகப் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். வில்சன் இறந்த தகவல் தெரிந்த உடனே முதலில் அங்கு சென்றது, நானும் எங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினரும்தான்.

வில்சன் குடும்பத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தோம். சாலை மறியல் செய்து கலெக்டர், எஸ்.பி-யை வரவழைத்து ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை வாங்கிக் கொடுத்தோம். அன்று மாலையிலேயே தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் அறிவித்தது. மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுகிறார்.

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி

அவரின் பேச்சு எனக்குப் புரியவில்லை. தினமும் பத்திரிகைகளை படிக்க வேண்டும். சிலர், படித்தும் பண்பில்லாமல் இருப்பார்கள். அறிவுசார்ந்து பதில் சொல்ல வேண்டிய அவர், 6 எம்.எல்.ஏ-க்களும்தான் வில்சன் கொலைக்கு காரணம் என்று சொல்வதற்கு என்ன அர்த்தம்? அவர் மனநிலை சரியில்லாமல் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்’’ என்றார் காட்டமாக.

பின் செல்ல