Published:Updated:

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டிருக்கிறது! - விளக்கும் ஜோதிமணி

ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

தொழில்நுட்பரீதியில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாகத் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டிருக்கிறது! - விளக்கும் ஜோதிமணி

தொழில்நுட்பரீதியில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாகத் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன.

Published:Updated:
ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியிருந்தார் அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி. அவரிடம் சிந்தனை அமர்வு மாநாட்டின் நோக்கம், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துக் கேள்விகளை முன்வைத்தேன்...

“உதய்பூரில் நடந்த சிந்தனை அமர்வு மாநாட்டின் நோக்கம் என்ன?”

“காங்கிரஸ் கட்சி தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொண்டு, காலத்துக்குத் தேவையான தீவிரமான மாற்றங்களை முன்னெடுத்து, மக்கள் விரோத நரேந்திர மோடியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்.”

“இப்போதுதான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனையே உருவானதா?”

“தொடர்ச்சியாகச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் இறுதி யுத்தம் என ஒன்றிருக்கிறது இல்லையா... அதுதான் இந்த மாநாடு. ‘அனைத்து மாநிலங்களிலும் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும். கட்சியின் அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்காகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்றெல்லாம் முடிவெடுத்திருக்கிறோம். அதையொட்டி சமீபத்தில்தான் இளைஞர் அமைப்பு, மாணவர் அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தியிருக்கிறோம். இந்த மாதிரி அனைத்துப் படிநிலைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறோம். இவையெல்லாம் கடந்த எட்டு ஆண்டுகளாக நாங்கள் செய்துகொண்ட சுயபரிசோதனையின் விளைவாகத்தான் நடந்தன.”

“இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களெல்லாம் எப்போது அமலுக்கு வரும்?”

“சில தீர்மானங்களை மட்டுமே அறிவித்திருக்கிறோம். அறிவிக்கப்படாத முக்கியத் தீர்மானங்களும் இருக்கின்றன. அவையெல்லாம் விரைவில் அறிவிக்கப்பட்டு படிப்படியாக அமல்படுத்தப்படும். இந்த மாநாட்டில் அரசியல் விவகாரங்கள், தேர்தல் பணிக்குழு, பாரத ஒற்றுமை யாத்திரைக்குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். இவற்றின் மூலம் ஒவ்வோர் இந்தியக் குடிமகனையும் சந்தித்து, காங்கிரஸை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.”

“2024-ல் தேர்தலை வைத்துக்கொண்டு இப்போதுதான் தொடங்குகிறோம் என்று சொல்வதை எப்படிப் பார்ப்பது?”

“இந்தக் குறுகிய காலகட்டத்தில் எதையும் புதிதாகச் செய்ய முடியாது என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், ஏற்கெனவே மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள், உருவாக்கப்பட்ட அமைப்புகளை வலுப்படுத்துவது, வேட்பாளர்களை ஆய்வுசெய்து தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த நடைமுறையில் இருக்கும் சின்ன சின்னக் குறைபாடுகளைச் சரிசெய்யவே அடுத்த 18 மாதங்களைப் பயன்படுத்தப்போகிறோம். அதற்கான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பதும் இந்த மாநாட்டில் பேசப்பட்டது.”

“இந்தத் தீர்மானங்களெல்லாம் நேரு குடும்பத்துக்கும் பொருந்துமா?”

“நிச்சயமாக அவர்களுக்கும் பொருந்தும். அவர்களும் காங்கிரஸ் கட்சியின் ஓர் அங்கம்தானே...”

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டிருக்கிறது! - விளக்கும் ஜோதிமணி

“இவ்வளவு திட்டமிடலுக்குப் பிறகும் பிரசாந்த் கிஷோர் அல்லது சுனில் போன்றோர் காங்கிரஸின் வெற்றிக்குத் தேவைப்படுகிறார்களா?”

“தொழில்நுட்பரீதியில், சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாகத் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. அப்படித்தான் பி.கே., சுனில், ஐபேக் என ஏதாவது ஓர் அமைப்பு ஒவ்வொரு கட்சிக்கும் தேவைப்படுகிறார்கள். ஆனால், இவர்களால் வெற்றி பெறவே முடியாது என்றிருக்கும் கட்சியை வெற்றிபெற வைத்துவிட முடியுமா... தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-தான் வெற்றிபெறும் என்பதைத் தெரிந்துகொண்டுதான், பி.கே அவர்களோடு இணைந்து பணியாற்றினார். தி.மு.க-வின் வெற்றிக்கு அக்கட்சித் தொண்டர்களின் உழைப்பும், தலைவர்களின் வழிநடத்தலும்தான் காரணம். பி.கே அதைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்திக் கொடுத்தார். அதற்காக தி.மு.க-வின் வெற்றிக்கே பி.கே-தான் காரணம் எனச் சொல்ல முடியுமா... தேர்தல் வியூக வகுப்பாளர்களால் யாருக்கும் வெற்றி சாத்தியப்படாது. ஆனால், சிறிய அளவில் பங்களிக்க முடியும். அவ்வளவுதான் அவர்களின் எல்லை.”

“ஆனால், ‘காங்கிரஸை நான்தான் தவிர்த்தேன்’ என பி.கே சொன்னபோது உங்கள் கட்சித் தரப்பில் யாரும் எதுவும் சொல்லவில்லையே?”

“எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்ற வேண்டும் என்றில்லை. அது காங்கிரஸின் பாணியும் இல்லை. அப்படித்தான் எங்களின் சாதனைகளையும் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் விட்டுவிட்டோம். அதன் விளைவையும் அனுபவித்துவிட்டோம். இனி அப்படி இருக்கப்போவதில்லை.”

“எதன் அடிப்படையில் 2024 தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறீர்கள்?”

“இலங்கையில் ராஜபக்சேவை கொண்டாடிய அளவுக்கு வேறு யாரையும் அந்த மக்கள் கொண்டாடவில்லை. ஆனால், இன்றைக்கு அவர்களாலேயே ராஜபக்சே துரத்தியடிக்கப்படவில்லையா... அப்படி 2024 தேர்தலில் மோடி வீழ்த்தப்படுவார் ராகுல் காந்தி பிரதமர் ஆவார்!”

“பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து உங்கள் பார்வை என்ன?”

“பா.ஜ.க செய்வதெல்லாம் விளம்பரத்துக்கான ஸ்டன்ட்டுகள் மட்டும்தான். அதனால்தான் யார் என்ன பேசினாலும் அது விளம்பரமாகவே அவர்களுக்குப் படுகிறது. நிதி ஒதுக்கீடு தொடங்கி, மாநில உரிமை வரை அனைத்து வகையிலும் ஒன்றியத்தால் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வராக அவற்றையெல்லாம் கொடுக்க வேண்டும் எனப் பிரதமரிடம் கேட்பதில் என்ன பிரச்னை இருக்கிறது?”

“ஆனால் அண்ணாமலை ‘முதல்வரின் பேச்சைக் கேட்டு வெட்கப்படுகிறேன்’ என்றிருக்கிறாரே?”

“அரசாங்க நிகழ்ச்சியில் தி.மு.க-வுக்காகப் பேசியிருந்தால் அவர் அவமானப்பட்டிருக்கலாம்.மக்களுக்காகப் பேசியதற்காக ஏன் அவர் வெட்கப்படுகிறார்... மோடிபோலவே மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளக் கூடாது என நினைக்கிறார்போல. மோடியை ஊர்வலம் கூட்டி வந்து தமிழ்நாட்டில் காலூன்றலாம் எனக் கனவு கண்டார்கள். ஆனால், தமிழ் மக்கள் இப்போதும் #GoBackModi எனச் சொல்லிவிட்டார்கள். இப்படி அம்பலப்படுகிறோமே என்ற பதற்றம்தான் அண்ணாமலையைப் புலம்பவைத்திருக்கிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism