Published:Updated:

இந்து முன்னணி தலைவருக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் எம்.பி! -தொண்டர்கள் கோஷத்தால் சலசலப்பு

தாணுலிங்கநாடார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வசந்தகுமார்
தாணுலிங்கநாடார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய வசந்தகுமார்

``அங்கிருந்த சிலர் சிஏஏ-வை ஆதரிப்போம் என்று கோஷமிட்டனர். நான் எதுவும் கூறாமல் வந்துவிட்டேன்.''

இந்து முன்னணி அமைப்பின் முதல் மாநிலத் தலைவராக இருந்தவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாணுலிங்கநாடார். அவரது 105-வது பிறந்த தினத்தையொட்டி இந்து முன்னணி அமைப்பு சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலிலிருந்து பைக் பேரணி நடந்தது. பின்னர் கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடி பகுதியில் உள்ள தாணுலிங்கநாடார் நினைவிடத்தில் இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது திடீரென கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தனது ஆதரவாளர்களுடன் தாணுலிங்கநாடார் நினைவிடத்திற்குச் சென்றார். அங்குள்ள சில நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

அஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினர்
அஞ்சலி செலுத்திய இந்து முன்னணியினர்

அதே சமயம் அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் கோஷம் போட்டனர். முதலில் பாரத் மாதாகீ ஜே, ஓம் காளி, ஜெய் காளி என கோஷம் போட்டனர். பின்னர் சிஏஏ விற்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். வசந்தகுமார் அதைக் கண்டுகொள்ளாமல் அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்தவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மிசா சோமனிடம் பேசினோம், ``இந்து முன்னணியின் முதல் மாநிலத் தலைவர் தாணுலிங்கநாடார் நினைவிடத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தலாம். ஆனால், இதுவரை ஒவ்வொரு ஆண்டும் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் வசந்தகுமார் வந்தது இல்லை. இந்த ஆண்டுதான் வசந்தகுமார் வந்திருக்கிறார். அவர் விளம்பரத்துக்காக வந்ததாகக் கருதுகிறோம்" என்றார்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

வசந்தகுமார் எம்.பி. கூறுகையில், ``தாணுலிங்கநாடார் கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சொந்தகாரர். அவர் ஒரு கொள்கை வைத்திருந்ததால் அவர்கள் அவரது பின்னால் செல்கிறார்கள். மேடையில் இருந்த அனைவரும் எனக்கு தெரிந்தவர்கள்தான். இருந்தாலும் அங்கிருந்த சிலர் சிஏஏ-வை ஆதரிப்போம் என்று கோஷமிட்டனர். நான் எதுவும் கூறாமல் வந்துவிட்டேன்" என்றார்.

இதுவரை பா.ஜ.க தவிர வேறு எந்தக் கட்சி நிர்வாகிகளும் தாணுலிங்கநாடார் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் செல்வது இல்லை. முதன் முதலாக காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் அஞ்சலி செலுத்தச் சென்றது பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு