Published:Updated:

காங்கிரஸ் சந்திக்கும் தொடர் பின்னடைவுகள்.. மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஜோதிராதித்யா சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா

காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால் அதிருப்தியில் உள்ள இளம் தலைவர்கள், கட்சியிலிருந்து விலகும் முடிவில் உள்ளனர்.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துவிட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டார். பா.ஜ.க-வில் இணையப்போகிறாரா அல்லது புதிய கட்சி தொடங்கப்போகிறாரா என்று தெரியவில்லை. மம்தா பானர்ஜி தொடங்கி தற்போது ஜோதிராதித்யா சிந்தியா வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மாநிலத் தலைவர்களின் பட்டியல் ஏராளம். இரண்டு பொதுத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு, இது மேலும் பின்னடைவாகவே அமைந்துள்ளது.

ஜோதிராதித்யா சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா

சிந்தியாவைத் தொடர்ந்து, மேலும் சில மாநில காங்கிரஸ் தலைவர்களும் கட்சியிலிருந்து விலகக்கூடும் என்று ஆரூடம் சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட இளம் தலைவர்களை வளர்த்தெடுக்காததும், கட்சியில் உள்ள இளம் தலைவர்களைப் புறக்கணிப்பதுமே காங்கிரஸ் கட்சியின் தொடர் சரிவுக்குக் காரணம். வரலாறும் அவ்வாறே சொல்கிறது. 'காங்கிரஸ் கட்சியில் திறமைக்கு மரியாதை இல்லை' என்கிற அரசியல் பழமொழி, காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கிறது.

`17 ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாயம்.. `ஸ்விட்ச்-ஆஃப்' சிந்தியா!'- சிக்கலில் கமல்நாத் அரசு

1970-களில் காங்கிரஸிலிருந்து விலகிய பல தலைவர்களும் ஜனதா கட்சியில் இணைந்தனர். இவையே பிற்காலத்தில் பல்வேறு பிராந்தியக் கட்சிகளாக உருப்பெற்றன. தற்போதும் வட இந்திய மாநிலங்களில் ஆதிக்கம்செலுத்தும் பல்வேறு பிராந்தியக் கட்சிகள், காங்கிரஸிலிருந்து பிரிந்து உருவானவைதான். காங்கிரஸிலிருந்து விலகிய தலைவர்களும் புதிய கட்சிகளைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தனர்.

மம்தா பானர்ஜி:

’திதி’ என்று வங்கத்து மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மம்தா பானர்ஜி, முதலில் அரசியல் பயணத்தைத் தொடங்கியது காங்கிரஸில்தான். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, 1998-ம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸைத் தோற்றுவித்தார் மம்தா. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் ஆட்சியைத் துடைத்தெரிந்த மம்தா பானர்ஜி, காங்கிரஸையும் இல்லாமல் ஆக்கிவிட்டார். மேற்கு வங்கத்திலிருந்துதான் ஒவ்வொரு மாநிலமாக இழக்கத் தொடங்கியது காங்கிரஸ்.

மமதா - சரத் பவார்
மமதா - சரத் பவார்

சரத் பவார்:

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சரத் பவார், காங்கிரஸிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸை (என்.சி.பி) 1999-ம் ஆண்டு தோற்றுவித்தார். மகாராஷ்டிரத்தில் பிரதான கட்சியாக உருப்பெற்ற தேசியவாத காங்கிரஸ், இறுதியில் காங்கிரஸுடனே கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆட்சியில் நிலைக்க ,சரத் பவாருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய தேவையும் காங்கிரஸுக்கு எழுந்தது. இன்று வரை மகாராஷ்டிராவில் வலுவான பிராந்தியக் கட்சியாக என்.சி.பி விளங்கிவருகிறது.

முப்தி முகம்மது சயித்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கிய முப்தி முகம்மது சயித், 1999-ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி, மக்கள் ஜனநாயகக் கட்சியைத் (பி.டி.பி) தோற்றுவித்தார். ஜம்மு - காஷ்மீர் முதல்வருமானார். அதன் பிறகே, ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் தன்னுடைய செல்வாக்கை இழக்கத் தொடங்கியது.

முப்தி முகம்மது - ஜெகன் மோகன்
முப்தி முகம்மது - ஜெகன் மோகன்

ஜெகன் மோகன்:

இரண்டு முறை காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமர உதவிய மாநிலம் - ஆந்திரப்பிரதேசம். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் 2004-லிருந்து 2014 வரை ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் எதிர்பாராத மறைவு, காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவருடைய மகன் ஜெகனிடம் பொறுப்பை வழங்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. காங்கிரஸிலிருந்து விலகி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைத் தொடங்கிய ஜெகன், 2019-ம் ஆண்டு ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தார். அதோடு, ஆந்திரப் பிரிவினையைச் சரிவர கையாளாததால் ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் தன்னுடைய செல்வாக்கை முற்றிலுமாக இழந்துவிட்டது.

ஹிமந்து பிஸ்வ சர்மா:

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த ஹிமந்து பிஸ்வ சர்மா, பா.ஜ.க-வில் இணைந்தார். 2017ல் அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை ஆட்சியில் அமரச் செய்ததில் இவருக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அதோடு, வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜ.க-வை வளரச் செய்ததிலும் முக்கியப் பங்காற்றிவருகிறார். வடகிழக்கில் காங்கிரஸைத் துடைத்தெரிய வேண்டும் என்பதை வாழ்நாள் குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டுவருகிறார். காங்கிரஸ் கோட்டையாக இருந்த இந்தியாவின் வடகிழக்கு, இன்று காவிக் கோட்டையாக மிளிர்கிறது.

ஹிமந்து பிஸ்வ சர்மா - பிரத்யோத் கிஷோர் தெபர்மன் - மகுவா மொய்த்ரா:
ஹிமந்து பிஸ்வ சர்மா - பிரத்யோத் கிஷோர் தெபர்மன் - மகுவா மொய்த்ரா:

பிரத்யோத் கிஷோர் தெபர்மன்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பிரத்யோத் கிஷோர் தெபர்மன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். திரிபுராவில் 2% என இருந்த காங்கிரஸின் வாக்கு வங்கியை 30% வரை உயர்த்தியவர் பிரத்யோத். 'காங்கிரஸ் மேலிடம் தன்னை மாநிலத் தலைவர்கள் சிலருடன் சமரசம் செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டது' என்று கூறியே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, பல மூத்த திரிபுரா காங்கிரஸ் தலைவர்களும் ராஜினாமா செய்தனர்.

மகுவா மொய்த்ரா:

தற்போது நாடாளுமன்றத்தை அதிரவைத்துக்கொண்டிருப்பவர், திரிணாமூல் எம்.பி மகுவா மொய்த்ரா. இவர், தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதும் காங்கிரஸில்தான். ஆனால், தன்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி, காங்கிரஸிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். தற்போது, கிருஷ்ணா நகர் எம்.பியுமாகி நாடாளுமன்றத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

தேர்தலில் தோற்றுப்போன சிந்தியா, பதவிக்கு ஆசைப்பட்டு ராஜினாமாசெய்துவிட்டார் என்கிறது காங்கிரஸ். 9-ம் தேதி ராஜினாமா கடிதம் அளித்தவரை 10-ம் தேதி கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிக்கை வெளியிடுகிறது காங்கிரஸ் மேலிடம். கடந்த ஒரு வருடமாகவே சிந்தியா அதிருப்தியிலிருந்தது ஊரறிந்ததே. ஆனால், காங்கிரஸ் அதை தணிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய, சோனியா காந்தி மீண்டும் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். ராகுல் காந்தி எந்நேரமும் மீண்டும் தலைவராக வரலாம் எனச் சொல்லப்படுகிறது. நிலையற்ற தலைமை, பா.ஜ.க-வை எதிர்கொள்ள தெளிவான திட்டமில்லை. இளைஞர்களின் பிரதிநிதித்துவமே இல்லாத காங்கிரஸ் காரிய கமிட்டி என மூழ்குகின்ற கப்பலாக காங்கிரஸ் தவித்துவருகிறது. கட்சியில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற குரல் வெளிப்படையாகவே ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

காந்தி குடும்பம்+
காந்தி குடும்பம்+

தற்போது, காங்கிரஸ் கட்சியின் முன் உள்ள பரிந்துரைகள் - காங்கிரஸின் உச்சபட்ச அமைப்பான காரியக் கமிட்டியை கலைத்துவிட்டு, கட்சிப் பதவிகளுக்கு தேர்தலை நடத்துவது. காந்தி குடும்பத்தைத் தாண்டி காங்கிரஸ் தலைமைக்கும் தேர்தலை நடத்துவது. பா.ஜ.க-வை எதிர்கொள்ளத் தெளிவான சித்தாந்த நிலைப்பாடு எடுக்கவேண்டியது. மாநிலங்களில் நிலவும் தலைவர்களின் முரண்பாடுகளைத் தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவருவதும்தான்.

நாட்டிற்கு ஜனநாயகத்தைப் பெற்றுத்தந்ததாக மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் பேரியக்கம், தற்போதைய காலத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளுமா... இல்லை வரலாறாகிப் போகுமா... பதில், காங்கிரஸ் தலைமையிடமே உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு