Published:Updated:

பிகே-வின் சிஷ்யனுடன் தேர்தல்களம் காணும் காங்கிரஸ்; யார் இந்த சுனில்... பின்னணி என்ன?

காங்கிரஸ்

காங்கிரஸின் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுனில் தமிழ்நாடு அரசியல் அரங்கில் நன்கு அறியப்படுபவர்.

பிகே-வின் சிஷ்யனுடன் தேர்தல்களம் காணும் காங்கிரஸ்; யார் இந்த சுனில்... பின்னணி என்ன?

காங்கிரஸின் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுனில் தமிழ்நாடு அரசியல் அரங்கில் நன்கு அறியப்படுபவர்.

Published:Updated:
காங்கிரஸ்

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய சிந்தனை அமர்வு மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றியும், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் முக்கியமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் அரசியல் விவகாரக் குழு, டாஸ்க் ஃபோர்ஸ் 2024, அகில இந்திய பாதயாத்திரை ஒருங்கிணைப்புக்குழு ஆகிய முக்கியமான குழுக்களை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருக்கிறார். இந்த மூன்று குழுக்களுமே சோனியா காந்தி தலைமையில் செயல்படும். இதில் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவில் இடம்பெற்றிருக்கும் சுனில் தமிழ்நாடு அரசியல் அரங்கில் நன்கு அறியப்படுபவர். சுனில் 2014-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்கு பிரசாந்த் கிஷோரோடு இணைந்து தேர்தல் பணியாற்றினார். சுனிலுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இறுதியில், பிரசாந்த் கிஷோர் ‘காங்கிரஸுக்கு அமைப்பு ரீதியான மாற்றம் மட்டுமே தேவை... வேறு யாரும் தேவையில்லை’ என்று அந்தக் கட்சிக்கு சில ஆலோசனைகளை மட்டும் வழங்கிவிட்டு காங்கிரஸின் ஆஃபரை மறுத்துவிட்டார். கட்சியில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் மறுத்து ஒதுங்கிய நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் இடம்பிடித்திருக்கிறார்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

யார் இந்த சுனில்... இவரின் தேர்தல் வியூக அனுபவம் என்ன?

பிரசாந்த் கிஷோரும் சுனிலும் ஒருகாலத்தில் அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் பணி செய்தவர்கள். அப்போது இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த திட்டம் ஒன்றில் பணியாற்றுவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு குஜராத்துக்கு வந்தார் பிரசாந்த் கிஷோர். அப்போது முதல்வராக இருந்த மோடியுடன் தனக்கான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்ட கிஷோர், 2012 குஜராத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு வியூக வகுப்பாளராக களத்தில் இறங்கினார். அதன் தொடர்ச்சியாக 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பணியாற்றியனார் பிரசாந்த் கிஷோர். அந்த நேரத்தில் கிஷோரின் அணியில் இருந்தவர்தான் சுனில். மோடிக்கு வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகம் வெற்றி பெற்றதும், பீகாரில் நிதிஷ்குமார், பஞ்சாப்பில் அமரீந்தர் சிங், டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி என அடுத்தடுத்து வெற்றி வியூகங்களை வகுத்துக் கொடுத்து அனைவராலும் கவனிக்கப்படும் நபராக பிரசாந்த் கிஷோர் மாறினார். ஆனால் 2015-ம் ஆண்டு கிஷோருடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக ‘ஐ–பேக்’ நிறுவனத்திலிருந்து வெளியேறினார் சுனில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர், அமித் ஷாவுடன் நெருக்கமாகப் பணியாற்றிய சுனில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு ஆலோசனை வழங்கினார். ‘ஐ–பேக்’-லிருந்து விலகிய சுனில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் `நமக்கு நாமே' பிரசாரத்தை வடிவமைத்ததன் மூலம் மீண்டும் அரசியல் நீரோட்டத்துக்குத் திரும்பினார். இந்த பிரசாரம் வெற்றிகரமாக அமைந்து ஸ்டாலினின் இமேஜை உயர்த்திய போதிலும், தி.மு.க தேர்தலில் தோல்வியடைந்தது. இருந்தாலும் ஜெயலலிதா, கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, நமக்கு நாமே திட்டம் பிரசாரம் மூலம் ஸ்டாலின் தலைவராக உருவாகினார். அந்த தேர்தலுக்குப் பிறகு அமித் ஷாவுடன் 2018 வரை நெருக்கமாகப் பணியாற்றிய சுனில், 300 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கர்நாடக மாநிலத் தேர்தல்கள் உட்பட பா.ஜ.க-வுக்காக வெற்றிகரமான பிரசாரங்களை வடிவமைத்தார். இதனையடுத்து மீண்டும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வுக்குத் திரும்பிய சுனில், 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 இடங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற உதவினார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியதையடுத்து, சுனில் தி.மு.க-விலிருந்து விலகி அந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வியூகங்கள் வகுத்தார்.

நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்
நமக்கு நாமே பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சுனிலை சந்தித்திருக்கின்றனர். அதே நேரத்தில் பிரசாந்த் கிஷோருடனும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இறுதியில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சுனிலின் `மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ்' நிறுவனத்துக்கு கர்நாடக பிரசாரத்திற்கான ஒப்பந்தத்தை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது. வெளியே இருந்து காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய கட்சிக்கு வியூகம் வகிக்கும்போது பல்வேறு அழுத்தங்கள் இருக்கும். செயல்படும் முறையும் வேறுபடலாம். அவ்வாறான வேறுபாடு உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றியபோது பிரசாந்த் கி‌ஷோருக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சுனில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர், பல மொழிகளைப் பேசுபவர் என்பதால் அவருக்குப் பலன் கிடைக்கும். பிரசாந்த் கிஷோரைப் போலல்லாமல், சுனில் கட்சியிலிருந்து ஒரு அணியை உருவாக்குகிறார். அந்த அணி தேர்தலுக்குப் பிறகும் அப்படியே இருக்கும் என்கிறார்கள் அவருடன் வேலை பார்த்தவர்கள்.

``சிந்தனை அமர்வு மாநாடு" - காங்கிரஸ்
``சிந்தனை அமர்வு மாநாடு" - காங்கிரஸ்

இந்த இருவரின் புரொஃபைல் மட்டுமல்ல, அவர்களின் செயல் முறையும் பெரிய அளவில் வேறுபடுகிறது. இதுமட்டுமல்லாமல் சுனில் தென்னிந்தியாவின் அரசியலையும், உள்ளுணர்வையும் நன்கு புரிந்துகொண்டவர். வட இந்தியாவின் நாடித் துடிப்பையும் அறிந்தவர். இவர் குழுவில் உள்ளவர்கள், பப்ளிக் பாலிசி, சட்டம் போன்ற துறைகளில் வல்லுநர்கள். சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சி, பிரசாரம், சமூக ஊடகங்கள், புள்ளிவிவரங்கள், பகுப்பாய்வு என பல துறைகளில் பணிபுரியும் ஐஐடி, ஐஐஎம் போன்ற பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் என்பது அவருடைய பலமாக இருக்கிறது. இந்த பலத்தை பயன்படுத்தி வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்வாரா என்பதே இப்போது தேசிய அரசியல் களத்தில் எழுந்திருக்கும் கேள்வியும், எதிர்பார்ப்பும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism