Election bannerElection banner
Published:Updated:

``கரையும் காங்கிரஸ் கட்சி... கண்டுகொள்ளாத தலைமை” - கதர்ச் சட்டைக்காரர்கள்  கதறல்!

காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

2011-ம் ஆண்டு தேர்தலில் 60 தொகுதியைக் கொடுத்தார்கள். 2016-ல் அதை 40-ஆகக் குறைத்தார்கள். இப்போது அதிலும் 20-ஐ குறைத்துக் கொடுக்க தி.மு.க முடிவெடுத்துள்ளது என்று காங்கிரஸார் புலம்பல்.

``கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக காங்கிரஸ் கட்சியின் நிலை தமிழகத்தில் இருக்கிறது” என்று வேதனைப்படுகிறார்கள் அந்தக் கட்சியின் தொண்டர்கள். சிலரின் சுயநலத்துக்காக ஒரு கட்சியின் எதிர்காலத்தையே அடகு வைக்கிறார்கள் என்பதே அவர்களின் புலம்பலாக இருக்கிறது.

கே.எஸ்.அழகிரி!
கே.எஸ்.அழகிரி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அங்கம்வகிக்கும் என்று அந்தத் தலைவர்கள் பல மாதங்களாகவே சொல்லிவந்தனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க-வுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் சுர்ஜித் வாலே, உம்மன்சாண்டி, தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டவர்கள் தி.மு.க-வுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், எட்டு தொகுதிகளில் மட்டுமே அந்தக் கட்சி வெற்றிபெற்றது. இதனால் தி.மு.க தரப்பு இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்கும் திட்டத்தில் இருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும், முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் 54 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து, தங்களுக்கு கடந்த முறை கொடுத்த எண்ணிக்கையில் இந்த முறையும் சீட் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், பதினைந்து தொகுதி முதல் இருபது தொகுதிகள் வரை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்க முடியும் என்பதை தி.மு.க தெளிவுபடுத்திவிட்டது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம்

இந்தநிலையில், ராகுலிடம் இந்தத் தகவல் சொல்லப்பட்டதும், `நாற்பதுக்கு குறைவாக நாம் வாங்கினால் நமது இமேஜ் பாதிக்கப்படும்’ என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் அவர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ``இந்த முறை தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை உள்ளது. அ.தி.மு.க-வுக்கு எதிரான அலையும் இருப்பதால், குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் முழு வெற்றியை நம்மால் பெற முடியும்” என்று காரணம் கற்பித்திருக்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாத ராகுல் `முப்பது தொகுதிகள் வரை கேட்டுப் பெறுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் தி.மு.க தரப்புக்கு சொல்லப்பட்டது.

ஆனால், அதற்கும் தி.மு.க இறங்கி வரவில்லை. ``22 தொகுதிகள் முதல் 24 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முடியும். கடந்த முறை நீங்கள் வாங்கிய தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் அ.தி.மு.க அதிக வாக்கு வித்தியாசசத்தில் வெற்றி பெற்றதை மறந்துவிடாதீர்கள்” என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால்,`` இந்த முறை நாங்கள் வெற்றி பெறும் தொகுதிகளை மட்டுமே பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறோம்” என்று காங்கிரஸ் தரப்பு வலியுறுத்தியும், தி.மு.க 24 என்ற எண்ணிக்கையிலிருந்து இறங்கி வரவில்லை. இதனால் காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு இதுவரை முடியாமல் இழுபறியாகிக்கொண்டே இருக்கிறது.

காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
காங்கிரஸ் - தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

இந்தநிலையில் தி.மு.க கூட்டணியை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ``நமக்கான இடங்களை உறுதியாகக் கேட்டுப் பெறுவோம். ஆனால், கடந்த முறை போன்று இந்த முறை தி.மு.க தொகுதிகளை விட்டுத்தர மறுக்கிறது” என்று சூசகமாகச் சொல்லியிருக்கிறார். கே.எஸ்.அழகிரியின் பேச்சில் ``நாம் தொடர்ந்து தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருகிறோம். குறிப்பிட்ட எண்ணிக்கையை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு தேர்தலில் 60 தொகுதிகளைக் கொடுத்தார்கள். 2016- ல் அதை 40-ஆகக் குறைத்தார்கள். இப்போது அதிலும் இருபதை குறைத்துக் கொடுக்க தி.மு.க முடிவெடுத்துள்ளது. நமது கட்சிக்கான இடங்களைத் தொடர்ந்து குறைத்துவருகிறார்கள்.ஆனால் 15 ஆண்டுகளாக இருக்கும் கூட்டணி இது என்பதால் நாமும் பொறுத்துப்போக வேண்டியிருக்கிறது. கொடுக்கும் இடங்களில் நாம் சிறப்பாக வேலை செய்வோம்” என்று பேசியிருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி பேசிக்கொண்டிருந்தபோதே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ``தி.மு.க கூட்டணியே வேண்டாம்” என்று சொல்ல ஆரம்பித்தனர். ஆனால், அதை அழகிரி காதில் போட்டுக்கொள்ளவில்லை. தி.மு.க தரப்புடன் நாளை தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் மூடுக்கு காங்கிரஸ் கட்சி வந்துவிட்டது என்கிறார்கள். 24 தொகுதிகள் முதல் 27 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தரப்பு ஒதுக்கவிருக்கிறதாம். அதிலும் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற எட்டு தொகுதிகளைத் தவிர்த்து பிற தொகுதிகள், காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 5,000-க்கும் குறைவான வாக்குகளில் தோற்ற தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும்” என்று தி.மு.க டிமாண்ட் வைத்திருக்கிறது. இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாகும் என்கிறார்கள். 5,000-க்குக் குறைவான வாக்குகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த தொகுதிகளின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாம். இதனால் சீட் எண்ணிக்கையை தி.மு.க மேலும் குறைக்கக்கூடும் என்று அச்சப்படுகிறார்கள் கதர்ச் சட்டைக்காரர்கள்.

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

சீட் ஒதுக்கீடு முடியாத நிலையில், காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களின் நேர்காணலும் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சி கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்குழுவில் கலந்துகொண்டவர்கள் நம்மிடம் பேசும்போது, ``தி.மு.க இவ்வளவு சீட் குறைத்துக்கொடுக்கிறது என்று தலைவரே சொல்கிறார். பிறகு எதற்கு அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும்... இருபது இருபது தொகுதிகளாக ஒவ்வொருமுறையும் குறைத்துவந்தால் அடுத்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் சீட் கொடுப்பார்கள். அகில இந்திய அளவிலேயே காங்கிரஸ் கட்சியின் நிலை பரிதாபத்தில் இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களும் தங்கள் சுயநலத்துக்காகக் கட்சியை அடகுவைக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், இந்தத் தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாரிசுகளைச் சட்டமன்றத்துக்கு அனுப்பிவிடலாம் என்கிற கனவில் இருக்கிறார்கள். பத்து தொகுதிகளை தி.மு.க அளித்தால்கூட வாங்கிக்கொண்டு தங்கள் வாரிசுகளை மட்டும் போட்டியிட வைத்துவிடுவார்கள் . கட்சிக்குப் பல காலமாக உழைத்தவர்களைப் பற்றி எண்ணம் அவர்களிடம் துளியும் இல்லை. `ஒன்று வாரிசுக்கு சீட் கேட்கிறார்கள், அல்லது காசுக்கு சீட்டை விற்கிறார்கள்’ இதுதான் இன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலை. இப்படி இருந்தால் தமிழகத்தில் இந்தக் கட்சி எப்படி வளரும்...’’ என்கிறார்கள் கதர்ச் சட்டைத் தொண்டர்கள்.

``தமிழகத்தை பல ஆண்டுகள் ஆண்ட கட்சி, கடந்த ஐம்பதாண்டுகளில் கட்டெறும்புபோல தேய்ந்துவருகிறது. காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டதாலேயே காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியைத் தொடர்ந்து சந்தித்துவருகிறது” என்ற புலம்பலும் கட்சிக்குள் பலமாக இருக்கிறது. இந்த முறை தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறி, தனித்துக்கூட நிற்கலாம். அப்போதாவது நமது பலம் நமக்கும் புரியும், பிற கட்சிகளுக்கும் புரியும் அல்லது கமலுடன் அணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடலாம் என்கிற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பலமாகக் கேட்கிறது.

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி; கே.எஸ்.அழகிரி கண்ணீர் - காங்கிரஸை அவமதித்ததா தி.மு.க? - நிலவரம் என்ன?

தி.மு.க தரப்பில் கேட்டால் ``அந்தக் கட்சியிலுள்ள தலைவர்கள் ஏற்கெனவே தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட்களை புக் செய்துவிட்டார்கள். அது எங்களுக்குத் தெரிந்துதான் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டோம். அதோடு, பா.ஜ.க ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குகிறது. நாளை தமிழகத்திலும் அது நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்” என்று கேட்கிறார்கள்.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய காங்கிரஸ் தலைமை அமைதியாக இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு