Published:Updated:

காங்கிரஸ் தலைவர் பதவி: ஆதரவு, எதிர்ப்பு அணிகள் உருவாகினவா?!

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா, ராகுல் காந்தியின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பெயரும், ஜி-23 தலைவர்கள் சார்பில் சசி தரூர், மணீஷ் திவாரியின் பெயர்களும் அடிபடுகின்றனவாம்.

காங்கிரஸ் தலைவர் பதவி: ஆதரவு, எதிர்ப்பு அணிகள் உருவாகினவா?!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா, ராகுல் காந்தியின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பெயரும், ஜி-23 தலைவர்கள் சார்பில் சசி தரூர், மணீஷ் திவாரியின் பெயர்களும் அடிபடுகின்றனவாம்.

Published:Updated:
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

கடந்த 2014, 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. குறிப்பாக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்விக்குத் தார்மிகப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகினார். அவரைப் பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி வற்புறுத்தியது. ஆனால், ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை. அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்படவும் இல்லை, தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை. இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருந்துவருகிறார். இந்தச் சூழலில், 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி தலைவர்கள் 23 பேர் (ஜி23) கீழ் மட்டத்திலிருந்து காங்கிரஸ் தலைவர் பதவி வரை உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கடிதம் எழுதிய அதிருப்தி தலைவர்களைத் தவிர்த்து, மற்ற மூத்த நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கவும், தலைவர் தேர்தலில் போட்டியிடவும் ராகுல் காந்தியைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்கத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவருகிறார். சில மூத்த நிர்வாகிகள் ராகுல் காந்தியிடம் தனிப்பட்ட முறையிலும் பேசினார்கள். ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை. இதேபோல், சோனியா காந்தியே தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் யோசனை தெரிவித்துவருகின்றனர். ராகுல் காந்தி, சோனியாவைத் தவிர்த்து பிரியங்கா தலைவர் பதவிக்கு வர வேண்டும் எனவும் ஒரு குழுவினர் வலியுறுத்திவருகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வலுவாக ஏற்படும் என்பதால் பிரியங்காவும் தலைவராக வர மாட்டார் என்கின்றனர் சில மூத்த நிர்வாகிகள். காங்கிரஸுக்குச் சரியான தலைவர் இல்லாததுதான் தொடர் தோல்விகளுக்குக் காரணம் என மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் வேளையில்தான் குலாம் நபி ஆசாத், கபில் சிபில் ஆகியோர் கட்சியிலிருந்து விலகினர்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்
ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

இதில், குலாம் நபி ஆசாத், "ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்துகொள்கிறார். குழந்தைத்தனமாக நடந்துகொள்ளும் ஒருவர் கையில், கட்சியின் தலைமை கடந்த எட்டு ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டதுதான் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம்’’ எனவும், ``கனத்த இதயத்தோடு காங்கிரஸிலிருந்து விலகுகிறேன்" என்றும் தெரிவித்தார்.

காங்கிரஸ் சின்னம்
காங்கிரஸ் சின்னம்

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். ஒருவேளை ராகுல் காந்தி போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்தால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைப் பிடிக்க மூத்த நிர்வாகிகள் இடையே போட்டி நிலவுகிறதாம்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

சோனியா, ராகுல் காந்தியின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தலைவர் பதவிக்குப் போட்டியிட வாய்ப்புள்ளது. இதேபோல், ஜி-23 தலைவர்கள் வேட்பாளரை நிறுத்தலாம் எனவும் கூறப்படுகிறது. இதில், சசி தரூர், மணீஷ் திவாரியின் பெயர்கள் அடிபடுகின்றனவாம்.

இந்தச் சூழலில், `அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யான சசி தரூர் போட்டியிட வேண்டும். அவர்தான் தகுதியானவர்’ என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் குரல் எழுப்பியுள்ளார். இது குறித்து, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சசி தரூர், "காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. விரைவில் ஒரு நிலையான முடிவு எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில் கட்சியின் தலைவரைத் தேர்தல் நடத்தித் தேர்வுசெய்வது நல்ல செயல் திட்டம்தான். இந்தி தெரிந்தவர்கள்தான் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்றால், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதில் வெற்றிபெற்று தலைவராக வரட்டும்" என்றார்.

சசிதரூர்
சசிதரூர்

காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க நடைபெறும் போட்டா போட்டியால் காங்கிரஸ் இரண்டு குழுவாகப் பிரிந்து செயல்படுகிறது என்றும், ஒரு வலுவான தலைவர் காங்கிரஸுக்குக் கிடைத்தால் மட்டுமே 2024 மக்களவைத் தேர்தலை காங்கிரஸால் முழுமுயற்சியுடன் எதிர்கொள்ள முடியும் என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.