Published:Updated:

`விவசாயிகள் போராட்டத்துக்குக் காரணம் அரசியல் அல்ல; சட்டங்கள்தான்!’ - கே.எஸ்.அழகிரி

ஏர்கலப்பைப் பேரணி - கே.எஸ்.அழகிரி
ஏர்கலப்பைப் பேரணி - கே.எஸ்.அழகிரி

`உயர் நீதிமன்றம் எடப்பாடி அரசின் மீது தவறு இருக்கிறது என்று கூறுகிறது. இடைக்காலத் தடை வாங்கி சி.பி.ஐ விசாரணை செய்ய முடியாமல் செய்துவிட்டனர்’ - கே.எஸ்.அழகிரி.

``4ஜி அலைக்கற்றை வந்த பின்னர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் ஏன் தனியார் நிறுவனங்களுக்கு மோடி கொடுத்தார்... மத்திய அரசின் தவறான நடைமுறையால் பி.எஸ்.என்.எல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துப்போய்விட்டது. இன்னும் பல துறைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இவர் மக்களுக்கான பிரதமர் அல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் நண்பன் என்பது அவர்கள் வெளியிட்ட பட்ஜெட்டில் நன்றாகத் தெரிகிறது’’ என்று மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தனர் காங்கிரஸ் கட்சியினர்.

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி

திருச்சி மாவட்டம், முசிறியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் `ஏர்கலப்பை பேரணி’ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசியச் செயலாளர் சஞ்சய் தத், விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி, திருச்சி காங்கிரஸ் வடக்கு மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏர்கலப்பை பேரணி என்கிற தலைப்பில் நாடாளுமன்ற வளாகம்போல் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எம்.எல்.ஏ விஜயதாரணி பேசுகையில்,``மத்திய அரசின் வேளான் சட்டங்கள் விவசாயிகளுக்குத் தேவையில்லை. முழுக்க முழுக்க கார்ப்ரேட்டுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கவே மத்திய பா.ஜ.க அரசு திட்டம் போடுகிறது. இதை மாநில அரசு உணர வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள்மீது நடத்தப்படும் தாக்குதல் மிகவும் கொடுமையானதாக இருக்கிறது.

விஜயதாரணி
விஜயதாரணி

தமிழகம் முழுவதும் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் தலைமையில் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடைபெற்றுவருகிறது. இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை நம்முடைய பேரணி தொடரும். போலீஸாரை வைத்துக்கொண்டு நம்மை அடக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் முடியாது. அடக்க அடக்கத்தான் வீறுகொண்டு எழுவார்கள். அதுபோலத்தான் நாமும் எழ வேண்டும்’’ என்று ஆவேசமாகப் பேசினார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் தத் பேசுகையில், ``விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் வேளாண் சட்டங்களை அ.தி.மு.க அரசு எதிர்க்காதது ஏன்... விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என்று தெரிந்தும் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காதது ஏன்? இவர்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே இது போன்ற சட்டங்களை ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க அரசைத் தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டார்கள், அதற்கான நேரம் வந்துவிட்டது. உலகிலேயே தலைசிறந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற காங்கிரஸார் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏர்கலப்பை பேரணி
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏர்கலப்பை பேரணி

அதன் பின்னர் பேசிய கே.எஸ்.அழகிரி, ``ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகள் ஐந்து பேரிடம் இருந்தன. ஆனால், இன்று 500 பேரிடம் அதை நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதிகாரப் பரவல் காங்கிரஸ் கட்சியில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தில் 50 ஆண்டுகளாக நாம் அதிகாரத்தில் இல்லை. ஆனால், பலர் மத்தியில் ஒரு துடிப்பு இருக்கிறது, காங்கிரஸால்தான் சரியாக ஆட்சி செய்ய முடியும் என்று. விபத்தின் காரணமாக மட்டுமே பா.ஜ.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அவர்களைத் தூக்கி எறியும் தைரியம் ராகுல் காந்திக்கு இருக்கிறது. காங்கிரஸால் கொண்டுவரப்பட்டது 100 நாள் வேலைத் திட்டம், ஏழை, எளிய வயதான பலருக்கு அது உதவிகரமாக இருக்கிறது. மோடியையும் எடப்பாடியையும் பார்த்துக் கேட்கிறேன். உங்களால் உருப்படியான ஒரு திட்டத்தையாவது கொண்டு வர முடிந்ததா?

விவசாயிகளின் போராட்டத்துக்குக் காரணம் அரசியல் அல்ல; சட்டங்கள்தான். அதை முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். போராடுவதால் விவசாயிகளைத் தீவிரவாதிகள்போல் சித்திரித்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. 4 ஜி அலைக்கற்றை வந்த பின்னர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குக் கொடுக்காமல் மற்ற தனியார் நிறுவனங்களுக்கு மோடி கொடுத்தார். இதனால் அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சிறுகச் சிறுக செத்துப்போய்விட்டது.

பொதுமக்கள்
பொதுமக்கள்

பொதுத்துறை நிறுவனங்களை அழித்து தனியார் நிறுவனத்தை வளர்ப்பதே மோடியின் வேலை. இதைத்தான் ராகுல் காந்தி எல்லா இடங்களிலும் பேசிவருகிறார். உயர் நீதிமன்றம் எடப்பாடி அரசின் மீது தவறு இருக்கிறது என்று கூறுகிறது. இடைக்காலத் தடை வாங்கி சி.பி.ஐ விசாரணை செய்ய முடியாமல் செய்துவிட்டனர். மோடியின் நண்பர் எடப்பாடி என்பதால் சி.பி.ஐ வாய்மூடியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் பலம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பை எடப்பாடி வெளியிட்டிருக்கிறார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

அரசியல் காரணங்களுக்காகத்தான் எடப்பாடி இதைச் செய்திருக்கிறார் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். விவசாயிகளுக்கு நல்லது செய்வதாக இருந்தால் கண்டிப்பாக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, மத்திய அரசை அல்லவா குறை சொல்லியிருக்க வேண்டும்... இவர் அதைச் செய்வாரா? இத்தனை ஆண்டுக்காலமாக ஆட்சியிலிருந்துவிட்டு இப்போது கடனைத் தள்ளுபடி செய்திருப்பதாகப் பேசுகிறார். முதல்வரின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு