Published:Updated:

ராஜீவ் நினைவிடத்தில் அவதூறு டிக்டாக்! - நாம் தமிழர் நிர்வாகிக்கு எதிராகக் கொதிக்கும் காங்கிரஸ்

ராஜீவ் நினைவிடத்தில் அவதூறு டிக்டாக்
ராஜீவ் நினைவிடத்தில் அவதூறு டிக்டாக்

ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில், டிக்டாக் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பேசுபவர், ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று ஓப்பனாகப் பேசும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரப் பரப்புரையின்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசும்போது, `ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். அவரை நாங்கள் கொன்றது சரிதான் ` என்கிற ரீதியில் பேசியிருந்தார். இது, காங்கிரஸார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

``ராஜீவ் படுகொலையில், சீமானுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும்!'' - தங்கபாலு

ராஜீவ் காந்தியை அவமதித்த சீமானைக் கைதுசெய்ய வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், சீமான் மீது விக்கிரவாண்டி போலீஸார் இரு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.

சீமான் பேச்சு குறித்த சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் அவரது பேச்சை ஒருவர் டிக்டாக் செய்து வெளியிட்ட விவகாரம் மீண்டும் அரசியலில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ராஜீவ் காந்தி நினைவிடம் அமைந்துள்ள இடத்தின் முன்பாக நின்றபடி, அந்த நபர் டிக்டாக் செயலியில் பேசுகிறார். 

அவதூறு டிக்டாக் பதிவு செய்த நபர்.
அவதூறு டிக்டாக் பதிவு செய்த நபர்.

அதில், ``பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்தான். இந்த இனத்துக்குப் பெருமை இருக்கு. நீ எப்பேர்ப்பட்ட கொம்பனாவும் இரு. நீ எந்த நாட்டு அதிபனாகவும் இரு. என் இனத்தைத் தொட்டால் உன்னை...” என்று ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் உள்ள படத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அந்தக் காட்சிகள் காங்கிரஸ் கட்சியினரைக் கொந்தளிக்கச்செய்துள்ளது.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான சங்கரபாண்டியன் தலைமையிலான கட்சியினர், நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து, டிக்டாக் செயலியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய நபர்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

புகார் அளித்த நெல்லை காங்கிரஸ் காட்சியினர்
புகார் அளித்த நெல்லை காங்கிரஸ் காட்சியினர்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ``மேடையில் சிலர் வாய்க்கு வந்ததைப் பேசுவார்கள். அதை அரசியல் என்று கடந்து சென்று விடலாம். ஆனால், நாங்கள் மதிக்கும் தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தின் முன்பாக நின்றுகொண்டு, அவரை அவமரியாதையாகப் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ராஜீவ் நினைவிடத்துக்குச் சென்று அவமரியாதையாகப் பேசுவது என்பது, என் வீட்டுக்குள் வந்து என்னையே சட்டையைப் பிடித்து இழுப்பதற்குச் சமமானது. ராஜீவ் காந்தி குடும்பம், இந்த நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம். அவரை அவமரியாதை செய்வதன்மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். 

காங்கிர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன்
காங்கிர மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன்

ஏற்கெனவே இது போன்று சீமான் பேசினார். இப்போது அவரது கட்சியைச் சேர்ந்தவர் பேசியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிக் கலவரங்கள் பற்றியெல்லாம் வாய் திறக்காமல் மௌனம் காக்கும் சீமானும் அவரது கட்சியினரும், தேவையில்லாமல் எங்களைச் சீண்டினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ராஜீவை அவமரியாதை செய்த நபரைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளோம்” என்றார்.

டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டவர், நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி நிர்வாகி துரைமுருகன் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் காங்கிரஸார் சார்பிலும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யவும் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரனிடம் பேசினோம். ``ராஜீவ் காந்தி என்ற மாபெரும் தலைவரை தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நாங்கள் இழந்தோம். ராஜீவ் காந்தி இறந்த இடம் என்பதால், அந்த இடம் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் இதயங்களிலும் உணர்வுபூர்மாக கலந்து இருக்கிறது. நாங்கள் மதித்துப் போற்றும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், அவரின் படத்திற்கு முன்பு நின்று கொண்டு டிக்டாக் வீடியோ மூலம் அவமரியாதை செய்து வெளியிடுவது, காங்கிரஸ் தொண்டர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. இதை இப்படியே விட்டுவிட்டால், இதே போன்று சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி எனத் தலைவர்களின் சமாதிகளின் முன்பு டிக்டாக் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். இதில் தொடர்புடையவரை வழக்குப்பதிவு செய்து கைது செய்துவிடுவோம் எனக் காவல்துறையினர் உறுதி அளித்திருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டி.ஜி.பி-யைச் சந்திக்க இருக்கிறார்கள். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள்“ என்றார்.

ரூபி மனோகரன்
ரூபி மனோகரன்

ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் விநாயகத்திடம் பேசினோம். ``வீடியோவில் உள்ளவர், திருச்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் எனச் சொல்கிறார்கள். இதனால் நாங்கள் திருச்சி காவல்துறையினருக்கு அந்த வீடியோவை அனுப்பி விசாரிக்கச் சொல்யிருக்கிறோம். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்ய இருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு