சமீபத்தில் காங்கிரஸ் தலைமை உதய்பூரில் நடத்திய `சிந்தன் அமர்வு' மாநாட்டில் ராகுல் காந்தி, ``மாநிலக் கட்சிகளுக்குச் சித்தாந்தம் இல்லாததால், அவை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்த்துப் போராட முடியாது. ஆனால் காங்கிரஸால் எதிர்த்துப் போராட முடியும்.
பா.ஜ.க காங்கிரஸைப் பற்றிப் பேசும், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றிப் பேசும், காங்கிரஸ் தொண்டர்களைப் பற்றிப் பேசும். ஆனால், மாநிலக் கட்சிகளைப் பற்றிப் பேசாது, ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், மாநிலக் கட்சிகளால் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியாது. அதற்கென ஒரு சித்தாந்தம் இல்லை" என்று பேசியிருந்தார். இதற்கு சில மாநிலக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், இன்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) தலைவருமான கல்வகுந்த்லா கவிதா ராகுல் காந்திக்குப் பதிலளிக்கும் விதமாக, ``காங்கிரஸைப் போல அல்லாமல் தெளிவான செயல்திட்டத்தைக் கொண்டிருப்பதால் மாநிலக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் விரைவில் `சிறிய கூட்டணிக் கட்சி'யாக மாறும். மாநிலக் கட்சிகளிடம் மக்களுக்குத் தேவையான தெளிவான திட்டங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில்கூட காங்கிரஸ் ஆட்சியில் இருப்பது அங்கிருக்கும் மாநிலக் கட்சியால்தான் என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ளவேண்டும்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஒரு சிறிய கூட்டணிக் கட்சி, நாளை நாட்டிலும், மாநிலத்திலும் அது சிறிய கூட்டணிக்கான கட்சியாக மாறும். அப்போது மாநிலக் கட்சிகள் முன்னிலை வகிக்கும். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியைப் போல அல்லாமல், மாநிலக் கட்சிகளுக்குத் தலைமை நெருக்கடி இல்லை" என காங்கிரஸைச் சாடியிருக்கிறார்.