Published:Updated:

`முதலில் நீங்கள் ஃபாலோ செய்யுங்கள்!’- வைத்திலிங்கத்தை விளாசிய காங்கிரஸ் மகளிர் அணி

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்
காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

காங்கிரஸ் கட்சியின் 135-வது ஆண்டுவிழாவில், முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுச்சேரியின் எம்.பி-யுமான வைத்திலிங்கத்தை நோக்கி மகளிர் அணியினர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி, இன்று தனது 135-வது நிறுவன தினத்தைக் கொண்டாடிவருகிறது. புதுச்சேரி வைசியாள் வீதியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் இன்று தொடக்க நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், “நமது காங்கிரஸ் கட்சி 135 வயதை எட்டியிருக்கிறது.

கட்சியின் துண்டை அணியாமல் இருக்கும் வைத்திலிங்கம் எம்.பி (வட்டத்திற்குள்)
கட்சியின் துண்டை அணியாமல் இருக்கும் வைத்திலிங்கம் எம்.பி (வட்டத்திற்குள்)

மாநிலங்களில் 10, 20 ஆண்டுகளில் தொடங்கிய கட்சிகள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், நமது கட்சி இன்றும் இளமையோடு இருக்கிறது. அதற்குக் காரணம், புதியதை நாம் ஏற்றுக்கொள்வதுதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு 16 கோடி பேரும், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தனித்து 12 கோடி பேரும் வாக்களித்திருக்கின்றனர்.

அந்த 12 கோடி வாக்குகளை 24 கோடியாக நாம் மாற்ற வேண்டும். இந்த சக்தி வேறு யாருக்கும் கிடையாது. பா.ஜ.க தற்போது வெற்றி பெற்றதாக தம்பட்டம் அடிக்கலாம். ஆனால், அவர்கள் மக்களை ஏமாற்றித்தான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். புதுச்சேரியில் நமது காங்கிரஸ் கட்சி பலமாகத்தான் உள்ளது.

துண்டு அணிந்து அமர்ந்த வைத்திலிங்கம்
துண்டு அணிந்து அமர்ந்த வைத்திலிங்கம்

அண்டை மாநிலங்களுக்குச் செல்லும்போது, நாம் காங்கிரஸ்காரர்கள் என்பதை அடையாளப்படுத்த வேண்டும். பெண்கள், தங்கள் அலங்காரப் பொருள்களில்கூட கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை அடையாளப்படுத்தும் வகையில் அணிய வேண்டும். வாகனங்களில் கட்சிக்கொடியையும் கை சின்னத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

அப்போதுதான், மற்றவர்களுக்கு நாம் காங்கிரஸ்காரர்கள் என்று தெரியவரும்” என்று தொண்டர்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தபோது, ஆவேசமாக எழுந்த மகளிர் அணியினர், ”நீங்கள் கட்டியிருக்கும் வேட்டியில் கட்சியின் கரை இல்லை. முதலில் நீங்கள் கட்சியின் கரை வேட்டியைக் கட்டுங்கள். நம் முதல்வர் நாராயணசாமி அவர்கள், எப்போதும் கட்சிக் கொடியுடன்கூடிய துண்டை கழுத்தில் அணிந்திருக்கிறார்” என்று வைத்திலிங்கத்தை விளாசத் தொடங்கினர். அதையடுத்து, இன்று முதலே கட்சியின் கரை வேட்டியை அணிவதாக அவர் வாக்குறுதி கொடுத்துவிட்டு அமர்ந்தார்.

நாராயணசாமி
நாராயணசாமி

தொடர்ந்து பேச வந்த முதல்வர் நாராயணசாமி, தனது காரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துண்டை எடுத்துவரச் சொல்லி, அதை அணிந்துகொள்ளும்படி வைத்திலிங்கத்திடம் கொடுத்தார். அப்போது அங்கிருந்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், வைத்திலிங்கத்துக்கு அணிவித்தார். அப்போது, “ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு நாம் அதைக் கடைபிடிக்கிறோமா என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்று வைத்திலிங்கத்தைப் பார்த்துக் கூறிவிட்டு, தனது பேச்சைத் தொடர்ந்தார் முதல்வர் நாராயணசாமி.

அடுத்த கட்டுரைக்கு