Published:Updated:

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜஸ்தானில் முகாம்... 'கை' கட்சிக்குக் கைகொடுக்குமா சிந்தனை அமர்வு மாநாடு?

காங்கிரஸ்

இதற்கு முன்பாக பலமுறை ஆட்சியை இழந்தாலும், குதிரை போன்று சட்டென்று காங்கிரஸ் எழுந்துவிடும். ஆனால், தற்போது யானையைவிடவும் மெல்லிய அசைவுகளை காங்கிரஸ் மேற்கொள்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜஸ்தானில் முகாம்... 'கை' கட்சிக்குக் கைகொடுக்குமா சிந்தனை அமர்வு மாநாடு?

இதற்கு முன்பாக பலமுறை ஆட்சியை இழந்தாலும், குதிரை போன்று சட்டென்று காங்கிரஸ் எழுந்துவிடும். ஆனால், தற்போது யானையைவிடவும் மெல்லிய அசைவுகளை காங்கிரஸ் மேற்கொள்கிறது.

Published:Updated:
காங்கிரஸ்

2ஜி ஊழல் வழக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சியின் பிரசாரங்களைக் கண்டுகொள்ளாமையும், உட்கட்சிப் பூசலாலும் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிக்காத்த காங்கிரஸ் பேரியக்கம் 2014-ம் ஆட்சியை இழந்தது. இதற்கு முன்பாக பலமுறை ஆட்சியை இழந்தாலும், குதிரை போன்று சட்டென்று காங்கிரஸ் எழுந்துவிடும். ஆனால், தற்போது யானையைவிடவும் மெல்லிய அசைவுகளைக் காங்கிரஸ் மேற்கொள்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முன்னிறுத்தப்பட்டார். ஆனால், பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாகப் பொறுப்பேற்றார். காங்கிரஸோ படுதோல்வியைச் சந்தித்து, மொத்தமாக 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுத் தடுமாறியது. பெருந்தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் கட்சிப் பதவியிலிருந்து விலகினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சரிவு, உட்கட்சி மோதல் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன என்றே சொல்லலாம். இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி, சரிவிலிருந்து மீள்வதற்கு எடுத்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. பா.ஜ.க-வின் பலமே உத்தரப்பிரதேசம்தான். எனவே, அதை முதலில் சாய்க்க வேண்டும் என்று 'டார்கெட் உ.பி'-யை பிரியங்கா காந்தி கையில் எடுத்தார். தேசிய அரசியலைத் தாண்டி உ.பி-யின் உள்ளூர் அரசியலில் பிரியங்கா இறங்கி அடித்தார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. 403 தொகுதிகளைக்கொண்ட உ.பி.யில் இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது. ஆட்சியிலிருந்த பஞ்சாப்பிலும் 18 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

தர்ணாவில் பிரியங்கா காந்தி
தர்ணாவில் பிரியங்கா காந்தி

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்காவின் வருகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிய காங்கிரஸ் தலைவர்களுக்குச் சம்மட்டி அடியாகத் தேர்தல் முடிவு அமைந்தது. இதனால், காங்கிரஸுக்குப் பிரியங்காவைத் தலைவராக்க வேண்டும் என்ற கூட்டம் இருட்டு அறைக்குள் சென்றது. அதேபோல, பஞ்சாப் உட்கட்சிப் பிரச்னை, ஆம் ஆத்மி வளர்ச்சியால், அங்கும் ஆட்சியை இழந்தது. கர்நாடகா, ராஜஸ்தான், கோவா என வலுவாக இருந்த இடத்திலும் கோஷ்டிப்பூசல் வெடித்துவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர் தோல்விக்கும், கோஷ்டிப்பூசலைச் சமாளிக்கவும் காங்கிரஸுக்கு வலுவான தலைவர் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம் எனக் கருதப்பட்டது. இதனால், தலைமைமீது அதிருப்தியிலிருந்த கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கட்சியில் சரியான சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனத் தலைமைக்குக் கடிதம் எழுதினர்.

காங்கிரஸ் ஜி23 கூட்டம்
காங்கிரஸ் ஜி23 கூட்டம்

தேசிய காங்கிரஸ் இப்படி என்றால், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைவைத்து காங்கிரஸ் தலைவர்கள் காலத்தை ஓட்டிவருகின்றனர். கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வின் தோல்வி குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, 'திமுக, அதிமுக-வின் தோள்களில் மாறி மாறி சவாரி செய்யும் காங்கிரஸுக்கு அதிமுக-வைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை' என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மிகக் காட்டமாக பதிலளித்திருந்தார். இதற்கு `ஓபிஎஸ் சொல்வது சரிதானே...’ என்று காங்கிரஸாரே ஆமோதித்தனர்.

நல்ல ஜனநாயகத்துக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. காங்கிரஸ் மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது மனப்பூர்வமான விருப்பம்' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து தெரிவித்தார். தோல்வியின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் எம்.பி., `நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் என்ன படம் பார்க்கலாம்' என்று கேலியாக ட்வீட் செய்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடனான கொள்கை முரண், கோஷ்டிப் பிரிவினை எனக் கடுமையான உட்கட்சிப்பூசலில் சிக்கித் தவிக்கிறது. கட்சியைக் கரைத்துக்கொண்டிருக்கும் இது போன்ற பிரச்னைகளை தைரியமாக அணுக முடியாமல் காங்கிரஸ் தலைமையும் இருக்கிறது. இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தல், குஜராத், இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில்வரவிருக்கிறது.

அதற்கான பணிகளைத் தொடங்கினால்தான், வெற்றி பெற முடியும் என்பதால் வியூகங்களை வகுக்கவும், கட்சியை பலப்படுத்தவும் தலைமை முடிவு செய்தது. அதற்காக டெல்லியில் மார்ச் 14-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் சிந்தனை அமர்வு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸின் சிந்தனை அமர்வு மாநாடு 13-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கூட்டம்
காங்கிரஸ் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் உட்கட்சிப்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தலைவர்களை மாற்றவும் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, 2024-ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் வாக்குறுதிகள், அதிருப்தியில் உள்ள தலைவர்களைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள், பா.ஜ.க-வை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள், மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசப்படுகிறது. குறிப்பாக ‘ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'கை' கட்சிக்கு இந்தச் சிந்தனை அமர்வு மாநாடு கைகொடுக்குமா என்பது, தலைமை எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையில் தெரியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism