அலசல்
சமூகம்
Published:Updated:

‘மகா கொள்ளைக்காரர் கெஜ்ரிவால்!’ - ‘மோசடி மன்னன்’ சுகேஷின் குற்றச்சாட்டு உண்மையா?

சுகேஷ், அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்திர ஜெயின்
பிரீமியம் ஸ்டோரி
News
சுகேஷ், அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்திர ஜெயின்

குஜராத்தின் மோர்பியில் நடந்த பால விபத்தை திசைதிருப்பவே இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கி, சிறையிலிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த `மோசடி மன்னன்’ சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். தலைநகர் டெல்லி மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இந்த விஷயம் பேசுபொருளாகியிருக்கிறது. என்ன நடந்தது?

துணைநிலை ஆளுநருக்குக் கடிதம்!

டெல்லியின் துணைநிலை ஆளுநர் சக்சேனாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் சுகேஷ். அந்தக் கடிதத்தில், ``2015-ம் ஆண்டிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்திர ஜெயினை எனக்குத் தெரியும். தென்மாநில அளவில் கட்சியில் பொறுப்பு வாங்கித்தருவதாகவும், ராஜ்ய சபா சீட் வாங்கித் தருவதாகவும் சொன்னதால், இதுவரை ஆம் ஆத்மி கட்சிக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியிருக்கிறேன். 2017-ம் ஆண்டு, ‘இரட்டை இலைச் சின்ன’ வழக்கில் கைதாகி டெல்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டேன். அதன் பிறகு, டெல்லியின் சிறைத்துறை அமைச்சரான சத்யேந்திர ஜெயின் என்னைப் பலமுறை சந்தித்து, `விசாரணையில், ஆம் ஆத்மிக்கு பணம் கொடுத்தது பற்றி வாய்திறக்கக் கூடாது’ என மிரட்டினார்.

சத்யேந்திர ஜெயின்
சத்யேந்திர ஜெயின்

2019-ல் என்னை திகார் சிறையில் சந்தித்த அமைச்சர் ஜெயின், `சிறையில் பாதுகாப்பும், அடிப்படைத் தேவைகளும் வேண்டுமென்றால், எனக்கு மாதம்தோறும் ரூ.2 கோடி ரூபாயும், சிறைத்துறை அதிகாரி சந்தீப் கோயலுக்கு மாதம் 1.5 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும்’ என்று கூறி என்னிடம் பணம் பறித்தனர். இப்படி ஜெயினுக்கு 10 கோடி ரூபாயும், கோயலுக்கு 12.5 கோடி ரூபாயும் கொடுத்திருக்கிறேன்’’ என்று சொல்லியிருந்தார்.

இந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு திகார் சிறையிலிருந்து மண்டோலி (Mandoli) சிறைக்கு மாற்றப்பட்டார் சுகேஷ். அவரால் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தற்போது சிறையில்தான் இருக்கிறார். பண மோசடி வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட ஜெயின், விசாரணைக் கைதியாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

`கெஜ்ரிவால் மகா கொள்ளைக்காரர்!’

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், ஆம் ஆத்மிக்கு எதிராகப் பேசிவந்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலோ, ``குஜராத்தின் மோர்பியில் நடந்த பால விபத்தை திசைதிருப்பவே இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்’’ என்றார். இந்த நிலையில், நவம்பர் 5-ம் தேதி அன்று தனது வழக்கறிஞர் வழியாக ஊடகங்களுக்குக் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் சுகேஷ். அதில், ``நான் துணைநிலை ஆளுநருக்கு எழுதிய கடிதம் பொதுத் தளங்களில் வெளியான பிறகு, அமைச்சர் சத்யேந்திர ஜெயினும், முன்னாள் சிறைத்துறை அதிகாரி சந்தீப் கோயலும் என்னைத் தொடர்ந்து மிரட்டுகின்றனர். நான் அந்தக் கடிதத்தில் சொல்லியிருந்த அனைத்துத் தகவல்களும் உண்மைதான். அது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ விசாரணையின்போது வெளியிடுவேன்’’ என்றிருக்கிறார்.

மேலும், ``என்னை, ‘நாட்டின் மிகப்பெரிய கொள்ளைக்காரன்’ என்று சொன்ன கெஜ்ரிவால் அவர்களே... பிறகு எதற்காக என்னிடமிருந்து 50 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொன்னீர்கள்... அப்படியானால், நீங்கள்தான் `மகா கொள்ளைக்காரர்.’ 20, 30 பேரிடமிருந்து 500 கோடி ரூபாய் பெற்றுத் தந்தால், தேர்தலில் சில தொகுதிகளைத் தருவதாகச் சொன்னார் கெஜ்ரிவால். கர்நாடகா, தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியில் பதவி தருவதாகவும் சொன்னார்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 2016-ல், டெல்லியிலுள்ள ஹையாத் நட்சத்திர ஹோட்டலில், தான் நடத்திய இரவு விருந்தில் கெஜ்ரிவாலும் சத்யேந்திர ஜெயினும் கலந்துகொண்டதாகவும் சொல்லியிருக்கிறார் சுகேஷ்.

கெஜ்ரிவாலின் பதிலடி!

இது தொடர்பாகப் பேசிய கெஜ்ரிவால், ``பா.ஜ.க-வினர், எந்தச் சிறையிலுள்ள கிரிமினலையும் யாருக்கு எதிராகவும் பேசவைப்பார்கள். திருடன், கொள்ளைக்காரன் என எல்லா குற்றவாளிகளும் பா.ஜ.க-வில்தான் இணைவார்கள். அந்த வகையில், அடுத்த சில வாரங்களில் கிரிமினல் சுகேஷ் சந்திரசேகர் பா.ஜ.க-வில் இணையப்போவதாகக் கேள்விப்படுகிறேன். `குஜராத் தேர்தல் களத்திலிருந்து ஆம் ஆத்மி வெளியேறினால், சத்யேந்திர ஜெயினை சிறையிலிருந்து விடுவிக்கிறேன்’ என என்னிடமே டீல் பேசுகிறது பா.ஜ.க’’ என்று காட்டமாகப் பேசினார். இந்த நிலையில், `இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று துணைநிலை ஆளுநருக்கு மீண்டுமொரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார் சுகேஷ்.

‘மகா கொள்ளைக்காரர் கெஜ்ரிவால்!’ - ‘மோசடி மன்னன்’ சுகேஷின் குற்றச்சாட்டு உண்மையா?
‘மகா கொள்ளைக்காரர் கெஜ்ரிவால்!’ - ‘மோசடி மன்னன்’ சுகேஷின் குற்றச்சாட்டு உண்மையா?

தொடர்ந்து, ஊடகங்களுக்கான மற்றொரு கடித்ததில், ``தேர்தலையொட்டி உள்நோக்கத்துடன் இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முன்வைப்பதாகச் சொல்கின்றனர். ஆனால், இதை நான் சுயமாகத்தான் செய்கிறேன். ஆம் ஆத்மிமீது நான் சொன்ன குற்றச்சாட்டுகள் பொய் என்றால் என்னைத் தூக்கிலிடுங்கள்’’ என்றிருக்கிறார் சுகேஷ். மேலும் அந்தக் கடிதத்தில், கெஜ்ரிவால் தன்னிடம் தமிழ்நாட்டிலுள்ள பிற கட்சி எம்.எல்.ஏ-க்களை ஆம் ஆத்மியில் சேரவைக்குமாறும், பஞ்சாப், கோவா தேர்தல்களுக்கு நிதி கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

`குற்றவாளியிடமே லஞ்சம் பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி’ என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க-வினர் தங்கள் தேர்தல் பிரசாரத்துக்கும் பயன்படுத்திவருகிறார்கள். ஆம் ஆத்மியினரோ, ``குஜராத் தேர்தல் களம் எங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. அதனால்தான் இப்படியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜ.க-வினர் முன்வைக்கின்றனர். தமிழ்நாட்டு எம்.எல்.ஏ-க்களை ஆம் ஆத்மியில் சேர்க்க முயன்றோம் என்பதையெல்லாம் பச்சைக் குழந்தைகூட நம்பாது. இந்தத் தேர்தலில், பா.ஜ.க-வுக்குப் பிரசாரம் செய்யும் நட்சத்திரமாக மாறியிருக்கிறார் மோசடி மன்னன் சுகேஷ். ஒரு குற்றவாளியின் ஆதரவுடன் பா.ஜ.க-வால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது’’ என்று பதிலடி கொடுத்துவருகின்றனர்.

தேர்தல் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..!