Published:Updated:

ஒன் பை டூ: நாடாளுமன்றத்தில் ‘வாழ்க’ கோஷம் எழுப்பலாமா?

நாராயணன் திருப்பதி - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாராயணன் திருப்பதி - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பா.ஜ.க உறுப்பினர்கள்கூட `ஜெய் ஸ்ரீராம்’, `பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்

நாராயணன் திருப்பதி, செய்தித் தொடர்பாளர், பா.ஜ.க

“தி.மு.க எம்.பி ராஜேஸ்குமார் சற்றும் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டிருக்கிறார். தி.மு.க உறுப்பினர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை... எந்தக் கட்சி உறுப்பினராக இருந்தாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் மாண்பு என்ன, விதிமுறைகள் என்னென்ன, அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது, அவையில் எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்தெல்லாம் அந்தக் கட்சியின் மூத்த எம்.பி-க்கள், புதிதாக வருபவர்களுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டும். தங்கள் கட்சியின் தலைவர்களைப் புகழ்ந்து, அவர்களின் கடைக்கண் பார்வைக்காக இப்படித் தனிநபர் துதி பாடி கோஷமிடுவது தவறான முன்னுதாரணம். இதை அவர்களின் கட்சித் தலைமையே கண்டித்திருக்க வேண்டும். ஓர் உறுப்பினர் எந்தக் கட்சியின் பிரதிநிதியாக இருந்தாலும், மக்கள் பணி செய்வதற்காகத்தான் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது கடவுளின் பெயராலோ, மனசாட்சியின் பெயராலோ உறுதிமொழி எடுத்துக்கொள்வது என்பது வேறு... தனிமனித வழிபாடு, தனிநபர்களைப் புகழ்வது என்பது வேறு. இது போன்ற விதிமீறல்களைச் செய்வது, அடுத்து வரும் இளைய தலைமுறையினருக்கும் தவறான வழிகாட்டலாக அமைந்துவிடும். இதை அனைத்துக் கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.’’

ஒன் பை டூ: நாடாளுமன்றத்தில் ‘வாழ்க’ கோஷம் எழுப்பலாமா?
ஒன் பை டூ: நாடாளுமன்றத்தில் ‘வாழ்க’ கோஷம் எழுப்பலாமா?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“அதில் என்ன தவறு இருக்கிறது? இதற்கு முன்பாக, மக்களவையில் தி.மு.க எம்.பி-க்கள் பதவியேற்று முடித்த பிறகு `பெரியார் வாழ்க’, `கலைஞர் வாழ்க’, `தளபதி வாழ்க’ என்றெல்லாம் முழக்கம் எழுப்பியிருக்கிறார்கள். பா.ஜ.க உறுப்பினர்கள்கூட `ஜெய் ஸ்ரீராம்’, `பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். அதேபோலத்தான், தற்போது ராஜேஸ்குமாரும் தனக்குப் பிடித்தமான தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு ‘வாழ்க’ கோஷம் எழுப்பியிருக்கிறார். இதில் விதிமீறல் ஒன்றும் இல்லை. இவ்வளவு பெரிய சபையில், தானும் ஒரு நபராக வருவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கவே இப்படி கோஷமிட்டிருக்கிறார். அவரது மனநிலையையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக இளைஞரணியில் பொறுப்பு வகித்தவர் என்கிற வகையில், இளைஞரணிச் செயலாளரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். தலைவரின் ஆட்சியில் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியாத சிலர்தான், இந்த விஷயத்தை ஊதிப் பெருக்குகிறார்கள். சபாநாயகர் சுட்டிக்காட்டியதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், இதை அனைவருக்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் எங்களது வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.’’