கட்டுரைகள்
Published:Updated:

எம்.பி., எம்.எல்.ஏ சீட்டுக்கு வாழாதீர்கள்... அட்வைஸ் அழகிரி!

அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
அழகிரி

வீடுதோறும் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்வை, தான் தலைவராகப் பொறுப்பேற்றதும் முன்னெடுத்தவர் அழகிரி. கட்சியில் தனக்கென கோஷ்டி அரசியலை ஊக்குவிக்காதவர்

காங்கிரஸ் கட்சி என்றாலே, கதகளிப் பேச்சுக்குப் பஞ்சமிருக்காது. வார்த்தைகள் வசவாகி, சத்தியமூர்த்தி பவனே சண்டைக்களமான காட்சிகள் ஏராளம். சமீபத்தில், தன்னுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, 23-ம் புலிகேசியுடன் தமிழக காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டுப் பேசியிருப்பது, கதர்க்கட்சிக்குள் கனலை உருவாக்கியிருக்கிறது. போதாத குறைக்கு, தி.மு.க கூட்டணியையும் சீண்டியிருக்கிறார் அழகிரி.

அக்டோபர் 22-ம் தேதி, சத்தியமூர்த்தி பவனில் நடந்த தன்னுடைய 71-வது பிறந்தநாள் விழாவில்தான், அழகிரியிடமிருந்து இந்த வார்த்தை வெடிகள் வந்து விழுந்தன.

விழாவில் பேசிய கே.எஸ்.அழகிரி, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பா.ஜ.க-வும்தான் இந்து மதத்திற்கு அத்தாட்சி என்பது போலவும், காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்பது போலவும் தொடர்ந்து சித்திரிக்கிறார்கள். அது உண்மையல்ல. காங்கிரஸ் கட்சிதான் இந்து மதத்தைத் தூக்கிப்பிடித்த கட்சி. காங்கிரஸுக்கும் - ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வுக்கும் இடையே 70 ஆண்டுக்காலப் பகை உள்ளது” என்று பா.ஜ.க-வை வசைபாடியவர், அடுத்து பேசியதுதான் மூத்த நிர்வாகிகளைத் திடுக்கிட வைத்தது.

எம்.பி., எம்.எல்.ஏ சீட்டுக்கு வாழாதீர்கள்... அட்வைஸ் அழகிரி!

“கூட்டணியில் ஒரு எம்.எல்.ஏ., எம்.பி சீட்டு பெற்றுவிடலாம் என்று வாழாமல், இனியாவது கொள்கை அடிப்படையில் வாழ வேண்டும். உங்களது தெருவில் காங்கிரஸ் கொடியை ஏற்றுங்கள். சிறந்த படை இருந்தால்தான் போரிட முடியும். இம்சை அரசன் 23-ம் புலிகேசியில் வருவதுபோல் வாள் கிடையாது, கேடயம் கிடையாது, யானை கிடையாது என்றால் எப்படி யுத்தத்திற்குச் செல்ல முடியும். எனவே, அதைச் செய்தால்தான் யுத்தத்திற்குச் செல்ல முடியும். சிறந்த தலைமையைக் கொடுக்கும் பண்பு ராகுல் காந்திக்கு உள்ளது. ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வோடு நமக்கு நடக்கும் இந்த யுத்தத்தில் நாம் வெற்றிகரமாகப் போரிட்டு வெல்ல வேண்டும்” என்றார் ஆவேசமாக.

அழகிரியின் இந்தப் பேச்சை மேடையில் அமர்ந்திருந்த கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த தலைவர்களே ரசிக்கவில்லை. நம்மிடம் பேசிய காங்கிரஸ் சீனியர் நிர்வாகிகள் சிலர், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, பிப்ரவரி 2019-ல் நியமிக்கப்பட்டார் அழகிரி. அவர் பதவியேற்று மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்று, ‘கட்சி 23-ம் புலிகேசி போல உள்ளது’ என்று விமர்சனம் செய்பவர், இந்த மூன்று வருடங்களில் கட்சியைப் பலப்படுத்தியிருக்கலாமே. தி.மு.க கூட்டணியில் பேசி, காங்கிரஸ் கட்சிக்கு உரிய மேயர், துணை மேயர் பதவிகளைக்கூட அவரால் வாங்கித் தர முடியவில்லை. தென்மாவட்டங்களிலுள்ள பல பஞ்சாயத்துகளில், காங்கிரஸ் கட்சிக்கென வாக்கு வங்கி இருந்தும், அங்கேயெல்லாம் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவிக்குத் தேர்வானார்கள். ஆனால், ‘கூட்டணி என்றாலே வருத்தமும் நெருடலும் இருக்கத்தான் செய்யும்’ என்று எங்கள் மனதைத் தேற்றினார் அழகிரி. கிராமங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்ற வேண்டுமென்பவர், இதுவரை எத்தனை கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்வை நடத்தியிருக்கிறார்? காங்கிரஸ் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் பல மாதங்களாகிவிட்டன.

எம்.பி., எம்.எல்.ஏ சீட்டுக்கு வாழாதீர்கள்... அட்வைஸ் அழகிரி!

கட்சிக்காரர்களிடம், ‘கூட்டணியில் எம்.எல்.ஏ., எம்.பி சீட் பெறுவதற்காக வாழக்கூடாது’ என்று அட்வைஸ் செய்கிறார். அவர் அப்படிப் பேசுவதில் பல காரணங்கள் ஒளிந்திருக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலருடன் அழகிரிக்குக் கருத்து முரண்பாடு இருக்கிறது. அந்த மூத்த தலைவர்கள், தங்களின் தேர்தல் வெற்றிக்காக தி.மு.க-வோடு பயணிக்கவே விரும்புகிறார்கள். அவர்களைச் சீண்டுவதற்காகத்தான் இந்த வார்த்தைகளைத் தெறிக்கவிட்டிருக்கிறார் அழகிரி. அவர் கருத்தைத் தி.மு.க தவறாக எடுத்துக்கொண்டால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படும். அதைப்பற்றியெல்லாம் அழகிரிக்கு எந்தக் கவலையும் இல்லை. மல்லிகார்ஜுன கார்கே தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படவிருக்கிறார். புதிதாக நியமிக்கப்படுபவர்தான் தி.மு.க-வுடனான மனமாச்சரியங்களை இனி எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். ஆக, அழகிரியின் கருத்து தேவையில்லாத சர்ச்சையைத்தான் உருவாக்கியுள்ளது” என்று பொருமுகிறார்கள்.

அவர்களின் பொருமல் குறித்து அழகிரி வட்டாரத்தில் விசாரித்தபோது, “வீடுதோறும் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்வை, தான் தலைவராகப் பொறுப்பேற்றதும் முன்னெடுத்தவர் அழகிரி. கட்சியில் தனக்கென கோஷ்டி அரசியலை ஊக்குவிக்காதவர். அவர்மீதான மரியாதையில்தான், அவருடைய பதவிக்காலம் முடிந்தபின்னரும், பணி நீட்டிப்பை டெல்லி வழங்கியது. காழ்ப்புணர்ச்சியில் வெறுப்பை உமிழ்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை” என்றனர்.

அழகிரியின் பேச்சு சர்ச்சைத் திரியைப் பற்றவைத்திருக்கிறது. அது புஸ்வாணமா அல்லது அணுகுண்டா என்பது வெடிக்கும்போது தெரிந்துவிடும்.