Published:Updated:

இந்தியத் தேர்தல் ஆணையம்... கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்!

இந்தியத் தேர்தல் ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியத் தேர்தல் ஆணையம்

செந்தில் ஆறுமுகம், பொதுச் செயலாளர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

இந்தியத் தேர்தல் ஆணையம்... கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்!

செந்தில் ஆறுமுகம், பொதுச் செயலாளர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்

Published:Updated:
இந்தியத் தேர்தல் ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியத் தேர்தல் ஆணையம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சீமான் பேசிய விஷயம் காங்கிரஸ் கட்சியினரை உச்சக்கட்ட கோபத்தில் தள்ளியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, `நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்’ என அறிக்கைவிட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார். நாம் தமிழர் கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சியே அல்ல; பதிவுசெய்யப்பட்ட கட்சி மட்டுமே. ஆக, அடிப்படையில் கோரிக்கையே தவறு. நாம் தமிழர் கட்சியின் பதிவை ரத்துசெய்ய வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். சரி, அப்படி கோரிக்கை வைத்திருந்தாலும், தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சியின் பதிவை ரத்துசெய்ய முடியுமா என்றால், முடியாது. ஏன்..?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியக் கட்சிகள் 2,370

முதலில், அரசியல் கட்சிகள் எப்படிப் பதிவுசெய்யப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

இந்திய அரசியல் சாசனப் பிரிவு 324-ன்படி, தேர்தல் ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை (1951) அடிப்படையாகக்கொண்டு தேர்தலை நடத்துகிறது; அரசியல் கட்சிகளைப் பதிவு செய்கிறது. அந்தச் சட்டத்தின் 29(A) பிரிவின்கீழ் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்ய விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 100 உறுப்பினர்களின் வாக்காளர் பட்டியல் விவரங்கள், கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், உட்கட்சித் தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிர்வாகிகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். யாராவது, இந்தக் கட்சிப் பதிவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார்களா என்று, தேசிய, மாநில நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை தவிர, ஆணையம் கேட்கும் நுணுக்கமான கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கமளித்து கட்சியைப் பதிவுசெய்வதற்குள் பல மாதங்கள் கடந்துவிடும். இந்தக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின்போதும் பெறும் வாக்குகள், வெற்றிபெறும் இடங்கள் போன்றவற்றின் அடிப்படையில் மாநிலக் கட்சியாகவோ தேசியக் கட்சியாகவோ அங்கீகரிக்கப்படும். தேர்தலில் போட்டியிடாத அல்லது போதுமான வாக்குகள், இடங்கள் பெறாத கட்சிகளை மாநிலக் கட்சிகளாகவோ, தேசியக் கட்சிகளாகவோ தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காது. அவை பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக மட்டுமே வரையறுக்கப்படும்.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே தங்கள் கட்சிக்கென நிலையான சின்னத்தைப் பெற முடியும். அங்கீகாரம் இல்லாத, பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் பொதுவான சின்னத்தைப் பெற ஒவ்வொரு தேர்தலின்போதும் போராட வேண்டியிருக்கும். மார்ச் 2019 நிலவரப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் 62, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் 2,301 என மூன்று வகைகளிலும் சேர்த்து, மொத்தம் 2,370 கட்சிகள் உள்ளன.

அதிகாரம் இல்லை

நாம் தமிழர் கட்சியின் பதிவை ரத்துசெய்ய முடியாது எனச் சொல்வது ஏன்?

அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, அங்கீகரிக்கப்படாத அதாவது, பதிவு மட்டுமே செய்யப்பட்டிருக்கும் கட்சிகளின் பதிவை ரத்துசெய்யும் அதிகாரம் இல்லை.

இந்த அதிகாரம் தனக்குத் தரப்பட வேண்டும் என்றுதான் கடந்த 20 வருடங்களுக்கும்மேலாக தேர்தல் ஆணையம் கேட்டுவருகிறது. இந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே ஆணையத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை. இப்படிப்பட்ட அதிகாரம் இல்லாததால் தான், பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் 2,301 கட்சிகள் இருக்கின்றன. இல்லையெனில், அவை கணிசமாகக் குறைந்திருக்கும்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இருந்தபோது (2004), மத்திய அரசுக்கு பரிந்துரைப் பட்டியல் ஒன்றைக் கொடுத்தார். அதில் 22 தேர்தல் சீர்திருத்தங்களைச் சுட்டிக்காட்டி, சட்டத்திருத்தங்கள் கேட்டார். அதில் முக்கியமான பரிந்துரை, ‘கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்குத் தர வேண்டும்’ என்பதே. இந்தப் பரிந்துரைக்கு 15 வயது ஆகிவிட்டது.

நன்கொடைக்காக கட்சிப் பதிவு

அதேபோல், ‘சிறைத்தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டவர்கள், கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒரு தகவலைத் தெரிவித்தது.

‘தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், ஒருமுறைகூட தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு, வருமானவரி விலக்கு உண்டு. இந்தச் சலுகையை தேர்தலில் போட்டியிடாத இந்தக் கட்சிகள் முறைகேடாகப் பயன்படுத்தி பல கோடிகளை நன்கொடையாகப் பெறுகின்றன. குறுக்குவழியில் நன்கொடைகள் பெறுவதற்காக அரசியல் கட்சியாகப் பதிவு செய்துகொள்ளும் போக்கு ஆபத்தானது. இதைத் தடுக்கும்பொருட்டு, பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத இந்தக் கட்சிகளின் பதிவை ரத்துசெய்ய விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு அந்த அதிகாரம் தரப்படவில்லை’ என்று உச்ச நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் முறையிட்டது.

இதுகுறித்து மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆக, கட்சிப் பதிவைக் கண்ணுக்குத் தெரிந்தே தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ள விவகாரத்தில்கூட தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைதான் உள்ளது.

சரி... அரசியல் கட்சிகளின் பதிவைத்தான் தேர்தல் ஆணையத்தால் ரத்துசெய்ய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மீதாவது தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா? இந்தக் கேள்விக்கு, சற்றே ஆறுதலான பதில் கிடைக்கிறது.

தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டு உத்தரவு 1968 - பிரிவு 16A-ன்கீழ், குறிப்பிட்டதோர் அங்கீகரிக்கப் பட்ட கட்சியானது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவோ, அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்துசெய்யவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. ஆனாலும், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரை எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியே!

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டால், ஒரு கட்சி அதன் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது. ஆனால், பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சியாக தொடரலாம். இதுவரை, இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி எந்த ஒரு பெரிய கட்சிமீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ‘அப்படியானால், நாட்டில் பெரிய கட்சிகள் எல்லாம் கட்சியைப் பதிவுசெய்யும்போது ஆணையத்தில் எழுதிக் கொடுத்தபடி தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ஜனநாயக வழிமுறைகளைத்தான் பின்பற்றுகின்றனவா, அவை எந்தவிதமான தேர்தல் முறைகேடுகளிலும் ஈடுபடவே இல்லையா?’ என்ற கேள்விகளுக்கு பதில், ‘பெரும்பாலான கட்சிகளில் ஜனநாயகம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையே இருக்கிறது. விதிமுறைகளையெல்லாம் மதிக்காமல் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றுவதைத்தான் அவையெல்லாம் தொழிலாகவே வைத்துள்ளன’ என்பதுதான்.

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். மேற்கண்ட சட்டப்பிரிவு, அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். அந்தக் கட்சிகளை மட்டுமே தேர்தல் ஆணையம் கேள்வி கேட்க முடியும். எடுத்துக்காட்டாக, தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் ஆணையப் பதிவை இந்தச் சட்டப்பிரிவால் ரத்துசெய்ய முடியாது. ஏனெனில், நாம் தமிழர் கட்சி, பதிவுபெற்ற கட்சி மட்டுமே; தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியல்ல! என்ன முரண் பாருங்கள்... அங்கீகரிக்கப்பட்ட கட்சிமீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபடும் பெரிய கட்சிகளின்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதேசமயம், ‘பதிவுசெய்யப்பட்ட கட்சிகளான சிறிய கட்சிகளின் பதிவை நீக்க அதிகாரம் தாருங்கள்’ என முறையிடுகிறது.

அதிகாரம் தரலாம்தான்... ஆனால்?

கட்சிப் பதிவை ரத்துசெய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கும்போது, அந்த அதிகாரம் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வரையறுக்க வேண்டும். இல்லையெனில், அதிகாரத்தை மத்திய அரசுகள் துஷ்பிரயோகம் செய்யவும் ஏதுவாகிவிடும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசானது அரசியல் சாசனப் பிரிவு 356-ஐ அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தது என்பது வரலாறு. அதுபோல் இந்த அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்திவிட வாய்ப்பிருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே, `தேர்தல் ஆணையம், மத்திய ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறது’ என்று பல கட்சிகள் குற்றம்சாட்டின. இப்படிப் பட்ட சூழலில், கட்சிப்பதிவை ரத்துசெய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுக்கப்படும்பட்சத்தில், இந்த அதிகாரம் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு கழுத்தில் கத்தி வைக்கும் அதிகாரமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதற்கு, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் முறை, மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் அதிகாரம் போன்றவற்றில் சீர்திருத்தம் தேவை என்ற கோரிக்கையும் 2004-ல் வழங்கப்பட்ட 22 சீர்திருத்தங்களில் அடங்கியுள்ளது.

மத்திய அரசு, தன் விருப்பப்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரை நியமிக்கும் தற்போதைய முறை மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மிக முக்கியமானது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளடங்கிய குழு, தலைமை ஆணையரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது கோரிக்கை. இது நடைமுறைக்கு வந்தால் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை மேலும் அதிகரிக்கும். ஆணையரைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் பங்கு உண்டு என்ற நிலையில், எதிர்க்கட்சிகள் ஆணையத்தின்மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறையும்.

அதேபோல், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தித்தான் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க முடியும் என்ற நடைமுறை, மற்ற இரு தேர்தல் ஆணையர்களுக்குப் பொருந்தாது என்ற நிலையிருக்கிறது. அவர்களை எளிதாகத் தூக்கியடிக்க முடியும். ஆகவே, இந்த இரு தேர்தல் ஆணையர்களும் மத்திய அரசின் மறைமுக அழுத்தத்துக்கு அடிபணிய வேண்டியதாகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிய டி.என்.சேஷன் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தியபோது, தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவியை நீர்த்துப்போகச் செய்யவே, கூடுதலாக இரு தேர்தல் ஆணையர் பதவிகளை மத்திய அரசு ஏற்படுத்தியது என்கிற சர்ச்சையும் அப்போது எழுந்தது. எனவே, தலைமை ஆணையரை நீக்குவதற்கு உள்ள நடைமுறையை, மற்ற இரு ஆணையர்களுக்கும் அமல்படுத்த வேண்டியது அவசியம்.

இறுதியாக ஒன்று... வெயிலோ பனியோ மழையோ வரிசையில் நின்று வாக்களிக்கும் ஒவ்வொருவரும் ஜனநாயகத்தின் மீதும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்மீதும் நம்பிக்கைவைக்கிறார்கள். அதை தேர்தல் ஆணையம் காப்பாற்ற வேண்டும். சீர்திருத்தங்களை அமல்படுத்தி, இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லப்போவது யார் என்பதுதான் விடை தெரியாத கேள்வி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism