Published:Updated:

சர்ச்சையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள்... கோடிகளில் புரளும் குத்தகைதாரர்கள்!

சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம்

இவ்வளவு மைதானங்களையும் ஒரு தனிநபரிடம் கொடுத்ததே முதலில் தவறான விஷயம். ஓப்பன் டெண்டரும் விடப்படவில்லை...

சர்ச்சையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள்... கோடிகளில் புரளும் குத்தகைதாரர்கள்!

இவ்வளவு மைதானங்களையும் ஒரு தனிநபரிடம் கொடுத்ததே முதலில் தவறான விஷயம். ஓப்பன் டெண்டரும் விடப்படவில்லை...

Published:Updated:
சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம்

“தற்போதைய இறுக்கமான நவீன கல்வி அமைப்பிலிருந்து குழந்தைகளுக்குச் சற்று ஆசுவாசம் தரும் விஷயமாக இருப்பது விளையாட்டுகள்தான். ஆனால் ஒரு கோடிக்கும் மேலான மக்கள்தொகைகொண்ட சென்னை போன்ற பெருநகரங்களை முழுவதுமாகக் கட்டடங்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலையில், குழந்தைகள் விளையாட போதுமான மைதான வசதிகள் இல்லை. இந்தப் பிரச்னையைக் குறைந்தபட்சம் சமாளிப்பதற்காக, சென்னை மாநகராட்சியே சில மைதானங்களை உருவாக்கியது. ஆனால், அதன் பராமரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கப்போய், முழுக்க அந்த மைதானங்கள் வசூல் வேட்டைக்கான களமாக மாறிவிட்டன. இதனால், ஏழைக் குழந்தைகள், மாணவர்கள் மைதானங்களுக்குள் நுழைய முடியாதவாறு வெளியே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மைதானங்களைக் குத்தகைக்கு எடுத்தவர்களோ கோடிகளில் புரள்கிறார்கள்” எனக் கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

சென்னையைப் பொறுத்தவரை மாநகராட்சியிடமிருந்து, 19 பால் பாட்மின்டன் கோர்ட்டுகள், 16 ஸ்கேட்டிங் பார்க்குகள், 38 டென்னிஸ் கோர்ட்கள் என மொத்தம் 73 உள் விளையாட்டு அரங்குகளையும், தனியாக மூன்று நீச்சல்குளங்களையும் தன் மனைவி பெயரில் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் நீச்சல் பயிற்சியாளரான முனியாண்டி. இவர்மீதுதான் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

சர்ச்சையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள்... கோடிகளில் புரளும் குத்தகைதாரர்கள்!

இது குறித்து, பெயர் வேண்டாம் என்கிற வேண்டுகோளுடன் நம்மிடம் பேசிய மாநகராட்சி ஊழியர்கள் சிலர், ``முதலில் இந்த விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, தனியாரிடம் விடும் முடிவு எடுக்கப்பட்டது. முனியாண்டி என்கிற ஒரு நபருக்கே பெரும்பாலான மைதானங்களைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டார்கள். டென்னிஸ் கோர்ட் ஆகட்டும், ஜிம் ஆகட்டும், ஸ்கேட்டிங் பார்க் ஆகட்டும்... அனைத்துமே மக்களின் வரிப் பணத்திலிருந்து கட்டப்பட்டவையே. ஏழை மாணவர்களுக்குப் பயன்படும் வகையிலேயே இந்த சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பணம் இல்லாமல் இங்கே எந்தவொரு குழந்தையும் விளையாட முடியாது. 1,000 முதல் 3,000 ரூபாய் வரை பணம் வசூலிக்கப்படுகிறது. என்ன நோக்கத்துக்காக இந்த மைதானங்கள் உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கமே சிதைந்துவிட்டது. பணம் இருப்பவர்கள் பிரைவேட் அகாடமியில் விளையாடிக் கொள்வார்கள். பணம் இல்லாத ஏழைக் குழந்தைகள்தான் இங்கு வருவார்கள். ஆனால், இவர்களின் தடாலடியான வசூலால், அவர்கள் விளையாட முடியாமல் தவிக்கிறார்கள். அரசு டெண்டரில் ‘சென்னைப் பள்ளி மாணவர்களுக்கு இலவசம்’ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் ‘மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தான் இலவசம்’ என ஏமாற்றுகிறார்கள். அவர்களையும்கூட இலவசமாக அனுமதிப்பதில்லை என்பதுதான் கொடூரம். மாணவர்களிடம் வசூலிக்கும் பணத்துக்கும் உரிய ரசீதுகள் கொடுப்பதில்லை. யாராவது இது குறித்துக் கேட்டால், பிரச்னையாக்கினால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திச் சரிக்கட்டிவிடுகிறார்.

சர்ச்சையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள்... கோடிகளில் புரளும் குத்தகைதாரர்கள்!
சர்ச்சையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள்... கோடிகளில் புரளும் குத்தகைதாரர்கள்!

ஆரம்பத்தில் மைதானப் பராமரிப்பு என்கிற முறையில்தான் குத்தகைக்கு எடுத்தார்கள். ஆனால் தற்போது, ரெவின்யூ ஷேரிங் சிஸ்டம் என்கிற முறையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு மைதானத்திலேயே குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு லட்சம் வருமானம் வரும். ஆனால், ஒரு வருடத்துக்கே அந்தத் தொகையைத்தான் அரசாங்கத்துக்குக் கட்டுகிறார்கள். ஒரு மைதானத்தின் மாத வசூலே ஒரு லட்சம் என்றால், அனைத்து மைதானங்களிலிருந்தும் எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதேபோல, மெரினா நீச்சல்குளமும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அங்கு, வார இறுதி நாள்களில் மட்டுமே ஏழு, முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்கிறார்கள். இவ்வளவு வசூலித்தும், நீச்சல்குளத்தில் பயன்படுத்தவேண்டிய கெமிக்கல்களுக்கு பதிலாக, சுண்ணாம்பைக் கலக்கும் கொடுமையும் நடக்கிறது. அந்தக் குறிப்பிட்ட கெமிக்கல் ஒரு பேரல் 8,000 ரூபாய் வரை ஆகும். ஆனால், 250 ரூபாய் சுண்ணாம்பு டப்பாவில் முடித்துவிடுகிறார்கள். இதனால், குழந்தைகளின் உடல்நிலை படுமோசமாக பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ என்றார்கள்.

மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பெற்றோர் சிலர் பேசும்போது, ``அல்போன்ஸா கிரவுண்டிலுள்ள டேபிள் டென்னிஸ் கோர்ட்டை ராஜேஸ் என்பவர் தற்போது சப்-லீஸுக்கு எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு நடத்தியவர் ரீஸனபிளாதான் ஃபீஸ் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால், தனியாக அகாடமி நடத்திக்கொண்டிருக்கும் ராஜேஸ், அந்த மாணவர்களையெல்லாம் இங்கே கொண்டுவந்து, மூவாயிரம், நான்காயிரம் எனப் பணம் வசூலித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே இங்கே இருந்த லோக்கல் மாணவர்களை வெளியேற்றிவிட்டார்’’ எனக் கொந்தளித்தார்கள்.

நேரு
நேரு

விளையாட்டுப் பயிற்சியாளர்கள் சிலர் பேசும்போது, ``இவ்வளவு மைதானங்களையும் ஒரு தனிநபரிடம் கொடுத்ததே முதலில் தவறான விஷயம். ஓப்பன் டெண்டரும் விடப்படவில்லை... மொத்தமாக ஒரு நபரின் கைக்குப் போய்விட்டது என மெயில் மட்டுமே எங்களுக்கு வந்தது. மைதானங்களை இவர்கள் முறையாகப் பராமரிப்பதுமில்லை. சப்-லீஸுக்கு எங்களைப் போன்ற பயிற்சியாளர்கள் போய்க் கேட்டால், 7 லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கேட்கிறார்கள். பணம் கொடுத்ததற்கு எந்தவித டாக்குமென்டேஷனும் கிடையாது. தவிர, மாதத்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கிறார்கள். ஒரு தனிநபர் கோடி, கோடியாக லாபம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இப்படித் தனியாரிடம் கொடுப்பதைத் தவிர்த்து, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக இந்த மைதானங்களைப் பராமரித்தால் அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் வரும். அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்கள்.

இது தொடர்பாக, பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசும்போது, ``மாநகராட்சி மைதானங்களில் இருக்கிற உள்விளையாட்டு அரங்கங்கள் என்பவை அந்தப் பகுதி மக்களுக்கு, குழந்தைகளுக்குப் பயன்படும்விதத்தில்தான் கட்டப்பட்டவை. ஆனால், கடந்த அ.தி.மு.க அரசு இவற்றை ஒரேயொரு நபரிடம் குத்தகைக்கு விட்டது என்பது உண்மையிலேயே வருந்தத்தக்க செயல். இப்போதைய அரசும் அதே நிலைப்பாட்டைத் தொடர்வது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. இதில் உடனடியாக அரசு தலையிட்டு, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பயிற்சியாளர்களை நியமித்து, சென்னைவாழ் குழந்தைகள் அனைவரும் மைதானங்களைப் பயன்படுத்தும் வகையில் கொள்கை முடிவை மாற்றியமைக்க வேண்டும்’’ என்றார்.

முனியாண்டி
முனியாண்டி

இந்த மைதானங்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பதாகச் சொல்லப்படும் முனியாண்டியிடம் பேசினோம்... ``நான் ஒரு நீச்சல் பயிற்சியாளர். என் குடும்பத்தினர்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஓப்பன் டெண்டரில்தான் அனைத்து இடங்களையும் எடுத்து நடத்திவருகிறார்கள். ஒரு நாள், ஒரு மணி நேரம் விளையாட, மாதத்துக்கு ஸ்கேட்டிங்குக்கு 500 ரூபாய், டென்னிஸுக்கு 2,000 ரூபாய், பாட்மின்டனுக்கு 1,000 ரூபாய்தான் வசூலிக்கிறார்கள். அதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது. அதேசமயம், ஏழை மாணவர்களுக்கு இலவசமாகத்தான் பயிற்சி கொடுத்துவருகிறார்கள். சப்-லீஸுக்கெல்லாம் யாரிடமும் மைதானத்தைக் கொடுக்கவில்லை. அதேபோல நீச்சல்குளத்தில் சுண்ணாம்பைக் கலக்குகிறார்கள் என்று சொல்வதும் தவறான தகவல். அரசாங்கத்துக்கு முறையாகப் பணமும் கட்டிவருகிறார்கள். இதில், எந்த முறைகேட்டுக்கும் வாய்ப்பே இல்லை’’ என்றார் அவர்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்த விவகாரம் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசினோம். ``உடனடியாக இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் தகவல் சொல்லப்பட்டு, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என வாக்குறுதி அளித்தார்.

விளையாட்டு மைதானத்திலேயே இப்படி விளையாடலாமா?