அரசியல்
சமூகம்
Published:Updated:

அதிகார பெண் பிரமுகரைச் சுற்றும் சர்ச்சை!

விடிய விடிய டிஸ்கஷன்...
பிரீமியம் ஸ்டோரி
News
விடிய விடிய டிஸ்கஷன்...

விடிய விடிய டிஸ்கஷன்...

தமிழகத்தின் அதிகாரமட்டத்தில் வளர்ந்துவரும் பெண்மணி அவர். தன் மதிநுட்பமான நடவடிக்கைகளால் முன்னுக்கு வந்தவர். நடுத்தர வயதை நெருங்குபவர். மக்கள் பிரதிநிதியான அவருக்கு, துறைரீதியாக பல உதவியாளர்கள். ஆனாலும் ஓர் உதவியாளரிடம் மட்டும் அன்லிமிடெட் நெருக்கம் காட்டுவதுதான், இப்போது துறையில் மட்டுமன்றி அவரது குடும்பத்திலும் ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்திருக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் குடும்பத்துக்குத் தொடர்புடைய பிரமுகர்களே நம்மிடம் பேசினார்கள்.

‘‘காவிரி பாயும் மாவட்டங்களில் ஒன்றுதான் அந்தப் பெண் பிரமுகரின் சொந்த ஊர். கட்சியில் இணைந்த ஆரம்பக்காலத்தில் மகளிரணி நடத்தும் போராட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் தவறாமல் பங்கேற்பார். அந்தச் சமயத்தில்தான், மாவட்டத்தில் கோலோச்சிய ‘லொள்ளு சபா’ நடிகரின் பெயர்கொண்ட மாவட்டப் பிரமுகரின் பார்வையில் விழுந்தார். ‘களையாக இருக்கிறாரே’ என்று இவரைப் பார்த்துச் சிலாகித்தார் அந்த மாவட்டப் பிரமுகர். அப்புறமென்ன... இவரது அரசியல் வாழ்க்கை வளர்ச்சியடைய தொடங்கியது. மாவட்ட இணை பொறுப்பு கிடைத்தது.

இந்தச் சூழலில்தான் தேர்தலில் அந்தத் தொகுதியில் கட்சி வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற அரசியல் நெருக்கடி. தொகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பா ளராகத் தேர்ந்தெடுக்கும்படி மாவட்ட பிரமுகருக்கு உத்தரவிட்டது கட்சித் தலைமை. மாவட்ட பிரமுகர்தான் ஏற்கெனவே இவரை சிலாகித்தவராயிற்றே. தவிர, இந்த பெண் பிரமுகரும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். ‘வேறென்ன... வேறென்ன வேண்டும்... ஒருமுறை சொன்னால் போதும்... நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே...’ என வேட்பாளர் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். தேர்தலில், அந்தப் பெண் பிரமுகரும் தலைமையே விஞ்சும்வகையில் அதிகமான வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இதற்கு நன்றிக்கடனாக மாவட்ட பிரமுகரிடம் கூடுதல் பவ்யம் காட்டினார் பெண் பிரமுகர். அந்த பவ்யமே அவருக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பை தேடித் தந்தது. அதிலும் வெற்றிபெற்றார். பிரதிநிதித்துவ அடிப்படையில் இவர் சார்ந்த சமூகத்துக்கும் அதிகாரத்தில் பங்கைப் பிரித்து தர வேண்டிய சூழல். அந்த யோகமும் அடித்தது. மறுநாளே மாண்பை மறந்து மாவட்டப் பிரமுகரைத் தட்டிக்கழித்தார்... எட்டி உதைத்தார். அதுதானே அரசியல்.

விடிய விடிய டிஸ்கஷன்...
விடிய விடிய டிஸ்கஷன்...

ஒருகட்டத்தில் இவரது ஓரங்கட்டலால் வெறுத்துப்போன அந்த மாவட்டப் பிரமுகர், வேறொரு கட்சிக்குத் தாவிவிட்டார். அதன் பிறகு, மாவட்டத்தில் பெண் பிரமுகரின் ராஜாங்கமே கொடிகட்டிப் பறந்தது!

இந்தச் சூழலில்தான் கடவுள் பெயரைக் கொண்ட அந்த நபர், அதிகாரபூர்வ உதவியாளராக பெண் பிரமுகரின் வாழ்க்கையில் நுழைந்தார். இளம் வயது உதவியாளர் அவர். வந்த சில நாள்களிலேயே எப்படித்தான் அந்தப் பெண் பிரமுகரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

வந்தார் என்றே தெரியவில்லை. அதிகாரப் பெண்மணி ஆய்வுக்காக மாவட்டம்தோறும் பயணம் செய்யும்போது, அருகருகே அறை புக் செய்யப்படும். பாதுகாப்புக்கு இருப்பவர்களை முன்கூட்டியே வெளியே அனுப்பிவிடும் அதிகாரப் பெண்மணி, பிறகு விடிய விடிய உதவியாளருடன் டிஸ்கஷன் நடத்துவார். இரவிலும்கூட கண்விழித்து இருவரும் அப்படி என்னதான் கோப்புகளைப் புரட்டுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்” என்றவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண்மணியின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை குறித்தும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

“ஆரம்பத்தில் ஆய்வுக்காக வெளியூர் செல்லும்போது மட்டும் நடந்துகொண்டிருந்த இந்தக் கூத்து, இப்போது அவரது சொந்த மாவட்டத்திலும் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. சொந்த ஊருக்கே சென்றாலும் அன்றிரவு முழுவதும் சர்க்யூட் ஹவுஸில் பி.ஏ-வுடன் டிஸ்கஷனை முடித்த பிறகே புறப்படுகிறார். இந்த விஷயம் அந்தப் பெண் பிரமுகரின் குடும்பத்திலும் பெரும்பிரளயமாக வெடித்தது. அவரின் கணவரும் சகோதரரும் சேர்ந்து பெண் பிரமுகரைக் கண்டித்தும் பிரயோஜனமில்லை. ‘ஆமாம் அப்படித்தான். அவனின்றி நான் இல்லை’ என்று பகிரங்கமாகச் சொல்லிவிட்டாராம் பெண் பிரமுகர். இதை முன்வைத்து, சம்பந்தப்பட்ட துறையின் டிரான்ஸ்ஃபர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் எல்லாம் புகுந்து வசூல் வேட்டை நடத்த ஆரம்பித்துவிட்டார் உதவியாளர். தற்போது தன் சொந்த மாவட்டத்தில் கட்டிவரும் பங்களாவுக்கு மைசூரிலிருந்து விலை உயர்ந்த கிரானைட் கற்களை இறக்குமதி செய்திருக்கிறாராம் அந்த உதவியாளர்’’ என்றார்கள்.

சமீபத்தில், இந்த விவகாரம் கோட்டை வரை சென்றுவிட்டதாம். அழைத்து எச்சரித்திருக்கிறார்கள்!

- கே.ஜி.பி