Published:Updated:

அப்போது ஹெலிகாப்டருக்கு பில் அனுப்பினர்... இப்போது அரிசிக்கு பில் அனுப்பியுள்ளனர்!

கேரளாவை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?

பிரீமியம் ஸ்டோரி

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5,908 கோடி ரூபாயை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியாக ஏழு மாநிலங்களுக்கு வழங்க, சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடுத்தடுத்து பெருவெள்ளத்தில் சிக்கிய கேரளாவை மத்திய அரசு புறக்கணித்திருப்பது மட்டுமல்லாது, வெள்ளக் காலத்தின்போது கேரளாவுக்கு வழங்கிய அரிசிக்கு பில் அனுப்பிவைத்திருப்பது பெரும்சர்ச்சையாக வெடித்துள்ளது.

2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத் தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; லட்சக் கணக்கானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து பரிதவித்தனர். இந்தப் பேரழிவில், 40,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக கேரள அரசு மதிப்பிட்டது. 3,048 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணத்தொகையாக மத்திய அரசு வழங்கியது. இந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையால் வெள்ள பாதிப்புகளிருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்த கேரள அரசு, கூடுதலாக நிவாரண நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது.

அப்போது ஹெலிகாப்டருக்கு 
பில் அனுப்பினர்... இப்போது 
அரிசிக்கு பில் அனுப்பியுள்ளனர்!

மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிவாரண நிதி கிடைக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவு, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கேரளாவுக்கு நிதியுதவி செய்ய முன்வந்தன. ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாக பினராயி விஜயன் தெரிவித்தார். ஆனால், அதைப் பெறு வதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாளி களும் நிதியுதவி அளிக்க முன்வந்தனர். அவர்களிடம் நிதியுதவியைப் பெற அமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப கேரள அரசு முடிவுசெய்தது. ஆனால், அமைச்சர்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் அடுத்த குற்றச்சாட்டு எழுந்தது.

2018-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பி லிருந்து மீள்வதற்குள், 2019-ம் ஆண்டும் பெருவெள்ளம் கேரளாவைச் வதைத்தது. அதில் 20,000 கோடி ரூபாய் அளவுக்கான சேதங்கள் ஏற்பட்டன. இந்த முறை மத்திய அரசு நிவாரண நிதியாக ஒரு பைசாகூட வழங்கவில்லை என்று கேரள ஆட்சியாளர்கள் குமுறிவந்தனர்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்த நிலையில்தான், வெள்ளத்தின்போது மீட்புப்பணிக்காக விமானப்படை ஹெலிகாப்டர் களைப் பயன்படுத்தியதற்காக 102 கோடி ரூபாய் கட்டணம் செலுத்துமாறு, 2019 பிப்ரவரி மாதம் கேரளாவுக்கு பில் அனுப்பி அதிர்ச்சியளித்தது மத்திய அரசு.

இத்தகைய சூழலில், 2019-ம் ஆண்டு இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம், கர்நாடகம், திரிபுரா, அஸ்ஸாம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், இமாசலப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களுக்கு 5,908 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க முடிவுசெய்த மத்திய அரசு, கேரளாவை மட்டும் புறக்கணித்துள்ளது. மேலும், வெள்ளத்தின்போது இந்திய உணவுக்கழகம் கேரளாவுக்கு அனுப்பிய அரிசிக்காக, 205 கோடி ரூபாய்க்கு பில் அனுப்பி மீண்டும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

‘‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ, என்.ஆர்.சி உட்பட பல விவகாரங்களை சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, வெளிப்படையாக எதிர்க்கிறது. அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் ஆவதற்கு முன்பு, ‘ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே மொழியாக இந்திதான் இருக்க வேண்டும்’ என்று ட்வீட் செய்தபோது, கேரள முதல்வர் பினராயி விஜயன் அதை மிகக்கடுமையாக விமர்சித்தார். சபரிமலை விவகாரத்தின்போது, ‘நெருப்புடன் விளையாட நினைத்தால், முதல்வர் பினராயி விஜயன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார் அமித் ஷா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘பா.ஜ.க-வின் ஆதரவில் கேரள அரசு இயங்கவில்லை. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு’ என்று அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்தார் பினராயி விஜயன். அப்போது அமித் ஷா கட்சித் தலைவர் மட்டுமே; இப்போது உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். எந்தெந்த மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கலாம் என்பதை முடிவுசெய்தது அமித் ஷா தலைமையிலான குழுதான். இதிலிருந்தே கேரளா புறக்கணிக்கப் பட்டதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்கின்றனர் கேரள இடதுசாரிகள்.

தாமஸ் ஐசக் - சுரேந்திரன்
தாமஸ் ஐசக் - சுரேந்திரன்

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிடம் பேசினோம். ‘‘2018, 2019 என தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளம், பேரழிவை ஏற்படுத்தியது. வெளிநாடு களிலிருந்து எங்களுக்குக் கிடைக்க இருந்த உதவியைப் பெறவும் அனுமதிக்காத மத்திய அரசு, கேரளா வுக்கு வெள்ள நிவாரண நிதியையும் வழங்காதது துரதிர்ஷ்டவசமானது. இது, கேரளாவை வஞ்சிக்கும் செயல்’’ என்றார் வருத்தத்துடன்.

மத்திய அரசு மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, கேரள மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் சுரேந்திரனிடம் பேசினோம்.

‘‘மத்திய அரசு கேரளாவைப் புறக்கணிக்கிறது என்பது தவறான தகவல். 2018-ல் ஏற்பட்ட கேரள வெள்ளச் சேதத்துக்கு நிவாரண நிதியாக சுமார் 4,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. 2019-ல் ஏற்பட்ட வெள்ளத்துக்கான நிவாரண நிதியை மத்திய அரசு நிச்சயம் வழங்கும்’’ என்றார் உறுதியுடன்.

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் கேரளாவுக்கு கைகொடுக்குமா மத்திய அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு