Published:Updated:

`அ.தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்ட அந்த ஒருவர் யார்?' - புதுக்கோட்டை தி.மு.க புகைச்சல்

தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி
தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி

`மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களித்த தி.மு.க உறுப்பினர் யார் என்று அனைவரிடம் விசாரித்துவிட்டோம். அனைவரும் `நான் அவன் இல்லை' என்றுதான் கூறுகின்றனர். பலரும் எங்கள் மீது சந்தேகப்படுகிறீர்களா? என்று கூறி வீடு தேடி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்'.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிகளவில் கைப்பற்றி இருந்தாலும், மாவட்ட சேர்மன் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. இந்தநிலையில்தான் தோல்விக்கான காரணம் குறித்து விவாதித்தனர். இதில், ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன், திருமயம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய எம்.எல்.ஏ ரகுபதி,``மாவட்டத்தில் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களில் 11 இடங்களை தி.மு.க கைப்பற்றியது. காங்கிரஸ் 2 இடங்கள் கைப்பற்றியது.

தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி
தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி

தி.மு.க கூட்டணி மொத்தம் 13 இடங்களைக் கைப்பற்றியதால், கட்டாயம் தி.மு.க.கவுக்குத்தான் மாவட்ட சேர்மன் பதவி கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். இதற்கிடையேதான் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிகப்பெரிய துரோகத்தைச் செய்துவிட்டனர். தி.மு.க உறுப்பினர் ஒருவரும் அ.தி.மு.கவுக்கு வாக்களித்துள்ளார். காங்கிரஸ் உறுப்பினர்களின் துரோகம், தி.மு.க உறுப்பினர் கடைசி நேரத்தில் வஞ்சகம் செய்து அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களித்ததால்தான் தி.மு.க தோல்வியடைந்தது. `எங்களுக்கு சோனியா காந்தியைப் பற்றிக் கவலையில்லை. பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இருப்பது பற்றிக் கவலையில்லை. எங்களுக்குப் பணம் வாங்குவது, பதவி கிடைப்பது மட்டுமே லட்சியம்' என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியிருந்தால், அவர்களை நாங்கள் கண்டிப்பாகப் பாராட்டி இருப்போம். ஆனால், கோழைத்தனமாக எங்களை நம்ப வைத்து மாற்றி வாக்களித்து, ஏமாற்றி விட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல், தி.மு.க உறுப்பினர் ஒருவரே மாற்றி அ.தி.மு.கவுக்கு வாக்களித்தது மிகுந்த வேதனையளிக்கிறது. மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களித்த தி.மு.க உறுப்பினர் யார் என்று அனைவரிடமும் விசாரித்துவிட்டோம். அனைவரும் `நான் அவன் இல்லை' என்றுதான் கூறுகின்றனர். பலரும், `எங்கள் மீது சந்தேகப்படுகிறீர்களா?' என்று கூறி வீடு தேடி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மாற்றி வாக்களித்தவர்கள் யார் என்று தலைமைக்கழகம் கேட்டுள்ளது. அதைக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன'' என்று கூறினார். இதற்கிடையே, `எம்.எல்.ஏ ரகுபதியால்தான், மாவட்ட சேர்மன் பதவி போனதாகவும், 3 உறுப்பினர்களை எம்.எல்.ஏதான் அ.தி.மு.கவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்' எனத் திருமயம் ஒன்றியக்குழு கழகத்தொண்டர்கள் என்ற பெயரில் திருமயம் முழுவதும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி
தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் ஒதுக்குவதில் தொடங்கி, மறைமுகத் தேர்தல் இடங்கள் ஒதுக்குவது வரை மோதல் ஏற்பட்டது. சில காங்கிரஸ் உறுப்பினர்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்தநிலையில்தான், இரு கட்சித் தலைவர்களும் பேசிக்கொண்டு மோதல் பிரச்னையை முடித்து வைத்தனர். இனி, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து யாரும் பேசக்கூடாது என்று தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் எம்.எல்.ஏவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு