Election bannerElection banner
Published:Updated:

`அம்மா’ பெயரிலான திட்டத்தின் பெயர் மாற்றம்: `இதுதான் விசுவாசமா முதல்வரே?’ - உதவி மைய சர்ச்சை

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`ஏற்கனவெ ஆட்சியில் இருந்த கட்சியினால் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை, அடுத்து வரும் கட்சியினர் மாற்றுவது வழக்கம். ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் நிகழாத ஒரு விநோதம் தற்போதுதான் முதன்முறையாக நிகழ்ந்திருக்கிறது’ - வீரசேனன்

`தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை விரைவாகப் பெற மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே 1100 என்ற இலவச தொலைபேசி சேவை எண்ணை தொடர்புகொள்ளலாம்’ எனவும், இதற்காக முதலமைச்சர் உதவி மையம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த அம்மா அழைப்பு மையத்தின் பெயரை மாற்றி, புதிய சேவைத் திட்டம்போல் காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இதுதான் `முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தலைவி மீது காட்டும் விசுவாசமா?’ என தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், தி.மு.க பிரமுகருமான வீரசேனன் கேள்வி எழுப்புகிறார்.

செயலி
செயலி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய வீரசேனன், ``இது அம்மா ஆட்சி என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிவருகிறார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஏற்கெனவே செயல்பட்டுவரும் திட்டங்களுக்கு, தனது தலைவி ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை ஏனோ இவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால், `அம்மா அழைப்பு மையம்’ தொடங்கப்பட்டது.

1100 என்ற இலவச தொலைபேசி சேவை எண்களைத் தொடர்புகொண்டு, மக்கள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்து, அரசின் அனைத்துத் துறைகளின் சேவைகளையும் எளிதாகப் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. நான் பலமுறை தொடர்புகொண்டிருக்கிறேன். பெரும்பாலும் பிஸி டோன்தான் வரும். தி,மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடைகளில் இருந்தபடியே `1100-க்கு போன் பண்ணுங்க... அம்மா சேவை மையத்தை தொடர்புகொள்ள முடியுதானு பார்ப்போம்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் சொல்லுவார். அப்போதெல்லாம் இணைப்பு கிடைக்காததை அப்பட்டமாக நிரூபித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே செயல்பட்டுவந்த இந்தத் திட்டத்தில் தங்களுடைய தலைவியின் பெயர் இருப்பதை விரும்பாத, பழனிசாமி, இதை `முதலமைச்சர் உதவி மையம்’ என மாற்றி, புதிய சேவைத் திட்டம்போல் ஆளுநர் உரையில் இடம்பெறச் செய்திருக்கிறார். இதுதான் தங்களது தலைவியின் மீது இவர் காட்டும் விசுவாசமா... அம்மா உணவகம், அம்மா குடிநீர் என இருக்கும் மற்ற திட்டங்களின் பெயர்களையும் படிப்படியாக மாற்றியமைக்கப்போகிறாரா? பொதுவாக, ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சியால் தொடங்கப்பட்ட திட்டங்களின் பெயர்களை, அடுத்து வரும் கட்சியினர் மாற்றுவது வழக்கம். ஆனால், இதுவரை தமிழ்நாட்டில் நிகழாத ஒரு விநோதம் தற்போதுதான் முதன்முறையாக நிகழ்ந்திருக்கிறது.

வீரசேனன்
வீரசேனன்

இதே அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட, அதுவும் அந்தக் கட்சியின் தலைவியின் பெயரில் இருந்த திட்டத்தை, இதே கட்சியைச் சேர்ந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றியிருக்கிறார். ஜெயலலிதாவின் மீது இவர் வைத்திருக்கும் உண்மையான விசுவாசத்தை இனியாவது அ.தி.மு.க தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் பெயரை மாற்றுவது எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட விருப்பம். .அ.தி.மு.க-வினர் இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், இது மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படுகிறது. `அம்மா அழைப்பு மையம்’ என்ற பெயரை மாற்றி, `முதல்வர் உதவி மையம்’ எனப் புதுப்பித்த பிறகாவது, இது ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்’’” என தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. செய்திதொடர்பாளருமான வைகைச்செல்வனிடம் பேசினோம். ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அம்மாவின் புகழை நிலைநாட்டியவர் அவர். உயர்கல்வி நிலையத்தில் அம்மாவின் சிலையை நிறுவினார். அம்மாவுக்கு நினைவிடம் அமைத்தவர். அம்மா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றியவர்.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

அம்மாவின் ஆட்சியை நான்கு ஆண்டுகள் சிறப்பாகத் தொடர்ந்து, மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக பலரும் பேசுவதற்கு காரணமாக இருப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர், அம்மாவின் பெயரை மாற்ற வேண்டும் என என்றைக்கும் நினைக்க மாட்டார். முதல்வரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டு, வாய்ப்பிருக்கும்பட்சத்தில் `அம்மா உதவி மையம்’ என பெயர் மாற்றம் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு