Published:Updated:

கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்துகிறாரா ஹெச்.ராஜா?

பெரியார் பல்கலைக்கழகப் பஞ்சாயத்து...

பிரீமியம் ஸ்டோரி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாதபோது அவருடைய அறையில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ரகசியக்கூட்டம் நடத்தியதாக ஒரு பிரச்னை எழுந்தது. அது அடங்குவதற்குள் சேலம் அரசு கலைக்கல்லூரி வளர்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா வழங்கிய 50 லட்ச ரூபாய் நிதியை ஹெச்.ராஜா வழங்கியதாக அந்தக் கல்லூரியின் கையேட்டில் அச்சடிக்கப்பட்டிருப்பது அடுத்த சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

H.Raja
H.Raja

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி வளர்மதி, ‘‘தமிழகத்தில் பல துறைகளிலும் பா.ஜ.க-வினர் மூக்கை நுழைக்கிறார்கள். கொள்கை சித்தாந்தத்தை மாற்றுகிறார்கள். பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி துணைவேந்தர் இல்லாதபோது அந்த அறைக்குள் யாரும் நுழையக்கூடாது. ஆனால், மக்கள் பிரதிநிதியாகக்கூட இல்லாத ஹெச்.ராஜா, துணைவேந்தர் அறைக்குள் அமர்ந்து ரகசியக் கூட்டம் நடத்துகிறார். ஆளுநர் வருகிறார் என்பதற்காக, பெரியார் சிலையை மறைத்து இந்து கடவுள்களின் பேனர்கள் வைத்து அவமதிப்பு செய்திருக்கிறார்கள். தற்போது பல்கலைக் கழகத் தவறுகளைத் தட்டிக்கேட்க ஆளில்லை. அதனால், பெரியார் பல்கலைக்கழகம் முற்றிலும் காவிமயமாக மாறிவிட்டது. அதற்கு சில பேராசிரியர்கள் துணைபோகிறார்கள்’’ என்றார்.

சேலம் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான பிரவீன், ‘‘சேலம் அரசு கலைக்கல்லூரிக்கு கட்டட வசதி கேட்டு மாணவர்கள் கோரிக்கை வைத்ததால், 2018 பிப்ரவரியில், அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் டி.ராஜா தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் ஒதுக்கினார். அந்தப் பணத்தில் ஐந்து வகுப்பறைகள் கட்டப்படுகின்றன. இந்நிலையில், கல்லூரியில் 2019-20 கல்வியாண்டுக்காக விநியோகிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட கையேட்டில் நிதி வழங்கியது டி.ராஜா என்பதற்குப் பதிலாக ஹெச்.ராஜா என்று இன்ஷியலை மாற்றி யிருக்கிறார்கள். இதைப் பிழை என்று சொல்ல முடியாது. திட்டமிட்டே இப்படிச் செய்திருக்கிறார்கள். கையேட்டைத் தனி நபர் தயாரிக்க மாட்டார். ஒரு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டிதான் கையேட்டைத் தயார் செய்யும். கல்லூரிக்குள் சில பேராசிரியர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்களாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்” என்றார்.

கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்துகிறாரா ஹெச்.ராஜா?

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டதற்கு, “ஹெச்.ராஜா, தன் நண்பரான புவியமைப்பியல் துறை இணைப்பேராசிரியர் ராம்குமாரைப் பார்க்க யதார்த்தமாகப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருக்கிறார். அப்போது நானில்லை. என் அறையில் நல்ல காபி கிடைக்கும் என்பதால், அறையைத் திறந்து அங்கு அமர்ந்து ஹெச்.ராஜா, பதிவாளர் தங்கவேல், ராம்குமார் ஆகியோர் காபி சாப்பிட்டிருக்கிறார்கள். விருந்தோம்பல் என்பது தமிழர் மரபாக இருக்கும்போது, இது எப்படித் தவறாகும்?

பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் வரும்போது பெரியார் சிலையை மறைத்து இந்துக் கடவுள்கள் சீரியல் லைட்டுகள் இருந்ததைப் பார்த்து நான் கலங்கிப்போனேன். ஆனால், பேராசிரியர் ஒருவர் போட்டோ எடுத்து பத்திரிகையாளர் களுக்கு அனுப்புகிறார். இதை என்னவென்று சொல்வது? பெரியார் சிலையை மறைத்தது சம்பந்தமாக விசாரணை கமிட்டி அமைத்திருக் கிறேன். பல்கலைக்கழகம் காவிமயமாக மாறவில்லை’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேலம் கலைக்கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வன், “கல்லூரியில் ஒரு கமிட்டி அமைத்து 2019-20 கல்வியாண்டுக்கான கையேடு தயார் செய்தோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.ராஜா அவர்களின் தொகுதி வளர்ச்சித் திட்ட நிதியில் இருந்து 50 லட்ச ரூபாய் கல்லூரிக்கு வழங்கியதை எழுதி, வரிக்கு வரி படித்துப் பிழைபார்த்து அரசு அச்சகத்துக்கு அனுப்பினோம். அங்கு, டி-க்குப் பதில் ஹெச் என்று இன்ஷியல் மாறியுள்ளது. உடனே டி.ராஜாவைத் தொடர்புகொண்டு இது சம்பந்தமாகப் பேசிவிட்டோம். மறுப்பு அறிக்கையும் கொடுத்துவிட்டோம். தற்போது திட்டமிட்டே இந்தப் பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள். கல்லூரியில் மதம், சாதி சார்ந்து எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றார்.

வளர்மதி,  பிரவீன், குழந்தைவேலு, கலைச்செல்வன்
வளர்மதி, பிரவீன், குழந்தைவேலு, கலைச்செல்வன்

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘‘நான் பல்கலைக்கழகத்துக்கு ஒளிவுமறைவின்றிதான் போனேன். இன்சார்ஜ் இருக்கும்போது துணைவேந்தர் அறைக்குள் போவதில் என்ன தவறு? மத்தியில் ஆளுங்கட்சியின் நிர்வாகியாக இருக்கிறேன். பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு வளர்ச்சிக்குக்கூட போயிருக்கலாம். சேலம் அரசு கலைக்கல்லூரியில் யாரோ செய்த தவற்றுக்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?” என்றார்.

ஆயிரம் அரசியல்வாதிகள் வரலாம் போகலாம். ஆனால், கல்விக்கூடங்கள் ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கும் நிலைத்து நின்று சேவையாற்றக்கூடியவை. அவற்றின் அதிகாரங்கள், எந்தக் கட்சி ஆட்சி யிலிருந்தாலும் சமரசம் செய்துகொள்ளப் படாதவையாக இருக்கவேண்டும். மாணவர்களின் நலன் மட்டுமே ஒட்டுமொத்தக் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதிலிருந்து தவறினால், அங்கே இருப்பவர்கள் கல்வியாளர்களாவே இருக்க முடியாது. இனியாவது இதை உணர்ந்து நடந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு