Published:Updated:

`வெளியேறுங்கள்.. இல்லைனா எம்.என்.எஸ் ஸ்டைலில் பேசுவோம்!'- சர்ச்சையான நவநிர்மான் சேனா போஸ்டர்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நவ நிர்மான் சேனா சட்டத்தை ஆதரித்து தொடர்ந்து பேரணி, கூட்டம் நடத்தி வருகிறது.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு இணையாக இந்துத்வா கொள்கை கொண்ட கட்சி என்றால் கண்ணை மூடிக் கொண்டு சிவசேனாவிலிருந்து பிரிந்த `மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா'வை கைகாட்டலாம். 1966-ம் ஆண்டு `சிவசேனா’வைத் தொடங்கிய பால்தாக்கரே முக்கிய கொள்கைகளில் ஒன்று தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் தேர்தல் களத்துக்கு வருவதில்லை என்பது. பால்தாக்கரே கட்சியின் தலைவராக இருந்தவரை அது நடக்கவேயில்லை. தற்போது இந்த நிலைமை மாறியிருப்பது என்பது தனிக்கதை.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

அதேநேரம் பால் தாக்கரே மறைந்த பிறகு நேரடியாகத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவசேனாவிலிருந்து விலகி `மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா’வைத் தொடங்கினார் அவரின் சகோதரி மகன் ராஜ் தாக்கரே. எதிர்பார்த்ததுபோல தேர்தல் அரசியலில் நவநிர்மான் சேனா மிகப்பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்டவில்லை என்றாலும் தொடர்ந்து சிவசேனாவைப் போல இந்துத்வா கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட கட்சியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. சிவசேனாவே பா.ஜ.க-வை விட்டு விலகிய நிலையில் நவநிர்மான் சேனா இப்போதும் பா.ஜ.க-வுடனும் அதன் தலைவர்களுடன் நட்பு பாராட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போர்வாள்.. சாவர்க்கர் படம்.. தாயின் எமோஷன்.. மகாராஷ்டிரா அரசியலில் களமிறங்கிய அடுத்த `சேனா' வாரிசு

சமீபத்தில் நவ நிர்மான் சேனாவின் தலைவரான ராஜ் தாக்கரே தன்னுடைய மகனான அமித் தாக்கரேவை அரசியல் களத்துக்கு அறிமுகப்படுத்தி அதகளப்படுத்தினார். இதுதொடர்பாக விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஒருபுறம் இருந்தாலும் அமித் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, நவ நிர்மான் சேனா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நவ நிர்மான் சேனா சட்டத்தை ஆதரித்து தொடர்ந்து பேரணி, கூட்டம் நடத்தி வருகிறது.

அமித் தாக்கரே
அமித் தாக்கரே
twitter

``இந்தியா இருப்பது பாகிஸ்தான், வங்கதேச மக்கள் ஊடுருவதற்கு அல்ல'' எனக் கூறி ராஜ் தாக்கரே வரும் 9-ம் தேதி குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பிரமாண்ட பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் மும்பை மற்றும் மகாராஷ்ட்ரா முழுவதும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஊர்களில் பேனர்களை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராய்காட் மாவட்டத்தின் பன்வேலில் வைக்கப்பட்டுள்ள பேனரில், ``பங்களாதேஷியர்களே உடனே நாட்டை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில், நீங்கள் எம்.என்.எஸ் (மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா) ஸ்டைலில் வெளியேற்றப்படுவீர்கள்' என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ராஜ் தாக்கரே மற்றும் அவரின் மகன் அமித் தாக்கரே ஆகியோரின் படங்களுடன் வைத்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜ் தாக்கரேவுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சர்ச்சையான போஸ்டர்
சர்ச்சையான போஸ்டர்

எம்.என்.எஸ் ஸ்டைல் என்ன?

சமீபத்தில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தொண்டர்கள் புனேவில் ஒரு தியேட்டர் மேலாளரை அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியானது. மேலாளரை அடித்தது மட்டுமல்லாமல் தியேட்டரையும் தொண்டர்கள் அடித்து நொறுக்கினர். தியேட்டரில் உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது எனக் கூறி தியேட்டர் ஊழியர்களைத் தாக்கினர். ஆம்.. அடிதடிகளைதான் அக்கட்சித் தொண்டர்கள் `கட்சியின் ஸ்டைல்' என்று கூறுவர்.

தியேட்டர் ரகளை குறித்து பேசும்போதுகூட, ``ரூ.5 மதிப்புள்ள பாப்கார்ன் ரூ.250-க்கு விற்கப்படுகிறது. விலையைக் குறைக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்தச் செய்தி அறிக்கைகளைப் படிக்க மேலாளரிடம் நாங்கள் சொன்னோம். ஆனால், அவர் மராத்தியைப் படிக்க முடியாது என்று கூறியதால் நாங்கள் `எம்.என்.எஸ் ஸ்டைலை’ கையாண்டோம்" என்று வெளிப்படையாகக் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு