Published:Updated:

ஆள்மாறாட்ட வீரர்கள்... ஏரிக்குள் கிரிக்கெட் மைதானம்...

கிரிக்கெட் மைதானம்
பிரீமியம் ஸ்டோரி
கிரிக்கெட் மைதானம்

சர்ச்சையில் சிக்கிய புதுச்சேரி கிரிக்கெட் சங்கம்

ஆள்மாறாட்ட வீரர்கள்... ஏரிக்குள் கிரிக்கெட் மைதானம்...

சர்ச்சையில் சிக்கிய புதுச்சேரி கிரிக்கெட் சங்கம்

Published:Updated:
கிரிக்கெட் மைதானம்
பிரீமியம் ஸ்டோரி
கிரிக்கெட் மைதானம்
புதுச்சேரியில் ஒரு கிரிக்கெட் கிளப்பையும், தனியார் கிரிக்கெட் மைதானத்தையும் மையப்படுத்திக் கிளம்பியிருக்கும் சர்ச்சைகள் விளையாட்டுத்துறையில் மட்டுமன்றி, புதுச்சேரி அரசியல் களத்திலும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கின்றன!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரியின் துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், ஐந்து கிரிக்கெட் மைதானங்களைக் கட்டியிருக்கிறது ‘சீசெம்’ என்கிற தனியார் நிறுவனம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ரஞ்சிக்கோப்பை’ உள்ளிட்ட போட்டிகளும் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில்தான், `‘கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி சங்கத்தின் மூலம் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து, பிற மாநிலத்தவர்களைப் புதுச்சேரி கிரிக்கெட் குழுவில் இடம்பெறச் செய்கிறார்’’ என்று ‘சீசெம்’ உரிமையாளர் தாமோதரன் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இன்னொரு பக்கம், ``நீர்நிலைகளையும் அரசு புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து, ‘சீசெம்’ நிறுவனம் கிரிக்கெட் மைதானத்தைக் கட்டியிருக்கிறது” என்று ஊசுட்டேரி பாதுகாப்பு இயக்கத்தினரும், புகார் கிளப்புகிறார்கள்.

ஜி.சந்திரன் - தாமோதரன்
ஜி.சந்திரன் - தாமோதரன்

நவம்பர் 11-ம் தேதி மேற்கண்ட மைதானத்தில் புதுச்சேரி அளவிலான ‘டி-20’ கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியநிலையில், நவம்பர் 13-ம் தேதி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ‘சீசெம்’ கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளர்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய உத்தரவிட்ட கிரண் பேடி, அனைத்துப் போட்டிகளையும் உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டார். ‘‘தாமோதரனின் சட்டவிரோதச் செயல்களை பி.சி.சி.ஐ-யின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்’’ என்று அவர் செய்தியாளர்களிடம் சொல்லியிருப் பதால், விவகாரம் சூடுபிடித்திருக்கிறது.

தற்போது, கிரிக்கெட் மைதானத்தின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஏழு இடங்களில் ‘இது அரசுக்குச் சொந்தமானது’ என்ற அறிவிப்புப் பலகைகளும் வைக்கப் பட்டிருக்கின்றன. அமைச்சர்கள் புடைசூழ அந்த மைதானத்தில் டி-20 கிரிக்கெட் போட்டியை தொடங்கிவைத்ததே முதல்வர் நாராயணசாமி தான் என்பது இதில் அரசியல் ட்விஸ்ட்.

கிரிக்கெட் மைதான விதிமீறல்களை ஆளுநருக்கு அனுப்பிய புதுச்சேரி பாரதிதாசன் விளையாட்டு வீரர்கள் சங்கத் தலைவர் ஜி.சந்திரனிடம் பேசினோம். ‘‘புதுச்சேரியில் 36 கிளப்புகளை ஒன்றிணைத்து, 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன்’, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் ஒரு மாவட்டமாகத்தான் அங்கம்வகித்தது. அப்போது தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த தன் மகன் ரோஹித்தை அழைத்துக்கொண்டு 2003-ல் புதுச்சேரி வந்தார் சீசெம் உரிமையாளர் தாமோதரன். ‘கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி’ என்று புதிதாக ஒன்றை ஆரம்பித்து, பி.சி.சி.ஐ-ல் தேர்தல் நடக்கும்போது மட்டும் இங்கு லீக் போட்டியை நடத்துவார்.

ஆள்மாறாட்ட வீரர்கள்... ஏரிக்குள் கிரிக்கெட் மைதானம்...

2017-ல் புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்குப் புதிதாக ‘ரஞ்சி’ அந்தஸ்து கொடுக்கலாம் என ஆலோசித்தது பி.சி.சி.ஐ. புதுச்சேரியில் ஏற்கெனவே இயங்கிவந்த சங்கத்தின் கோஷ்டிப்பூசலை பயன்படுத்திக் கொண்ட தாமோதரன், வாடகைக்கு எடுத்த மைதானங்களைக் காட்டி அவரது சங்கத்துக்கு ரஞ்சி அந்தஸ்தை வாங்கிக்கொண்டார். அதன்படி, கிரிக்கெட் வளர்ச்சிக்காக ஒரு ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் என இதுவரை 50 கோடி வழங்கியிருக்கிறது பி.சி.சி.ஐ. அந்தப் பணத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த யாருக்கும் ஒரு ஷூ கூட அவர் வாங்கிக்கொடுத்தது கிடையாது.

தன் ஆதரவாளரான வி.சந்திரன் என்பவரை சங்கத்தின் செயலராகப் போட்டுக்கொண்டு, தனது சீசெம் கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்களையே 18 டீம்களாகக் கணக்குக் காட்டிக்கொண்டார். புதுச்சேரி கிரிக்கெட் டீமுக்கு மாநில அந்தஸ்து கிடைத்த பிறகு 2018-ல் முதன்முறையாக நடந்த ரஞ்சிப் போட்டியில் ஒரே ஒருவர்தான் புதுச்சேரியைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இது பற்றி ஆதாரங்களுடன் நான் அளித்த புகாரின் அடிப்படையில், 12 பேரை அப்போது தகுதிநீக்கம் செய்தது பி.சி.சி.ஐ.

இப்போது, நகரமைப்புக் குழுமத்தின் அனுமதி இல்லாமலேயே மைதானத்தைக் கட்டி, போட்டியைத் தொடங்கியிருக்கிறார்கள். அரசின் புறம்போக்கு இடங்கள், விவசாய நிலங்கள், ஏரிகள் என அனைத்தையும் ஆக்கிரமித்து சட்ட விரோதமாக மைதானத்தை அமைத்திருக்கிறார் தாமோதரன். ரஞ்சியில் விளையாடும் சீனியர் பிளேயர் ஒருவருக்குக் குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் கிடைப்பதுடன், மத்திய அரசுத் துறைகளிலும் வேலை கிடைக்கும். அதற்காகத்தான் அத்தனை தகிடுதத்தங்களையும் செய்கிறார்கள். புதுச்சேரி இளைஞர்களின் உரிமையைப் பிற மாநிலத்தவர்கள் பறித்துச் செல்லக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்’’ என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தாமோதரனிடம் விளக்கம் கேட்டபோது “கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மைதானத்திலும் எந்த விதிமீறலும் இல்லை” என்றார்.

‘கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி’யின் செயலர் வி.சந்திரனிடம் பேசினோம். ‘‘இவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள். எட்டு மைதானத்தில் ஒரு மைதானத்தில் 80 சென்ட் நிலம் மட்டும் அரசு புறம்போக்கு இடம். அதை இரண்டு வருடங்கள் நாங்கள் லீஸுக்குக் கேட்டிருக்கிறோம். வில்லியனூர் கொம்யூன் ஆணையர், கட்டடம் கட்டாமல் பாதுகாப்பாக வைத்திருக்கச் சொன்னார். நாங்கள் அந்த இடத்தில் புல் தரை அமைத்திருக்கிறோம்... அவ்வளவுதான். சீசெம் நிறுவனத்தின் பணியாளர்கள் யாரும் டீமில் இல்லை” என்றார். ‘‘நகரமைப்பு குழுமத்தின் அனுமதி பெறும் முன்பே எப்படி மைதானத்தைக் கட்டி முடித்தீர்கள்?’’ என்ற நம் கேள்விக்கு, ‘‘அதற்குண்டான அபராதத் தொகையை கட்டி விடுவோம்’’ என்றார் அலட்டிக் கொள்ளாமல்.

‘யார்க்கர்’ பாலை வீசியிருக்கிறார் கிரண் பேடி. விக்கெட் விழுமா என்பதை அரசியல் சூழலே முடிவு செய்யும்!